2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மொனாக்கோவை வீழ்த்திய பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2020 ஜனவரி 16 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், மொனாக்கோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

சக முன்களவீரரான ஏஞ்சல் டி மரியா வழங்கிய பந்தை போட்டியின் 24ஆவது நிமிடத்தில் கோலாக்கிய பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் கிலியான் மப்பே தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதையடுத்த நான்காவது நிமிடத்தில் மொனாக்கோவின் முன்களவீரரான ஜெல்சன் மார்ட்டின்ஸ் கோல் கம்பத்தை நோக்கி உதையொன்றைச் செலுத்தியபோதும் அதை பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் தடுத்திருந்தார்.

பின்னர் இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்தில், மொனாக்கோவின் பின்களவீரர் கமில் கிலிச்சால் பரிஸ் ஸா ஜெர்மைனின் பின்களவிரர் லய்வின் குர்ஸாவா வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் நெய்மர் கோலாக்க, பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலை இரட்டிப்பாகியது.

பின்னர், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக மத்தியகளவீரர் மார்கோ வெராட்டி வழங்கிய பந்தை போட்டியின் 72ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் பப்லோ சரபியா கோலாக்க, 3-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிவடைய மூன்று நிமிடங்கள் இருக்கையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக மத்தியகளவீரர் அட்ரியான் சில்வாவின் கோலாக்கிய மொனாக்கோவின் இன்னொரு மத்தியகளவீரர் திமோயோ பகயோகோ, பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலையை இரண்டாகக் குறைத்தார்.

எனினும், போட்டி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில் நெய்மரிடமிருந்து பெற்ற பந்தை கிலியான் மப்பே கோலாக்க 4-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் இறுதியில் வென்றது.

இப்போட்டியின் முடிவில் லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 49 புள்ளிகளுடன் முதலிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைன் காணப்படுகிறது. 41 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மர்ஸெய்யும், 36 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நன்டிஸும், 32 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நன்டிஸும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .