2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளையும் வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்?

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, லக்னோவில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் அரங்கைப் பொறுத்தவரையில் புதுவரவாகவே ஆப்கானிஸ்தான் உள்ளபோதும் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த இரண்டு வெற்றிகளும் அணித்தலைவர் ரஷீட் கான் தலைமையிலான மொஹமட் நபி, ஸகிர் கான், குவைஸ் அஹமட் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்துவீச்சுக் குழாமாலே கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதெனக் கருதப்படும் லக்னோ ஆடுகளத்தில் இவர்களின் தேவை மீண்டும் உணரப்படுகிறது.

மேற்குறிப்பிட்டவர்களில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மொஹமட் நபி ஓய்வுபெற்றமையானது ஆப்கானிஸ்தானுக்கு இழப்பு என்றபோதும், பயிற்சிப் போட்டியில் சிறப்பாகச் செயற்பட்ட அமிர் ஹம்ஸா, அவரது இடத்தை நிரப்பத் தயாராகவே காணப்படுகின்றார்.

ஆக, ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்களை எவ்வாறு மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டவீரர்கள் எதிர்கொள்கின்றனர் என்பதிலேயே இப்போட்டியின் முடிவு தங்கியுள்ளபோதும், ரஹ்மட் ஷா தலைமையில், சிரேஷ்ட வீரர் அஸ்கர் ஆப்கான், இளம் வீரர் இப்ராஹிம் ஸட்ரான், ஜாவிட் அஹ்மாடி, இஹ்சனுல்லா, இக்ரம் அலிகில், அஃப்ஸர் ஸாய் உள்ளிட்டோரும் ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

மறுபக்கமாக மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில், கிரேய்க் பிறத்வெய்ட், றொஸ்டன் சேஸ், ஷேன் டெளரிச் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களுடன், ஷே ஹோப், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் பிரகாசிக்கும் பட்சத்தில் வெற்றிக்கனியை அவ்வணி சுவைக்க முடியும்.

பந்துவீச்சுப் பக்கமும், ரஹீம் கோர்ன்வெல், ஜோமெல் வொரிக்கான், றொஸ்டன் சேஸோடு சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கின்ற நிலையில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டரோடு, கேமார் றோச், அல்ஸாரி ஜோசப், கீமோ போல் என பலமான வேகப்பந்துவீச்சுவரிசையும் காணப்படுகின்ற நிலையில் இப்போட்டியானது போட்டித்தன்மை மிக்கதாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போட்டிக்கு முன்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும், 10ஆம் இடத்தில் ஆப்கானிஸ்தானும் காணப்படுகின்ற நிலையில், இப்போட்டியில் தோல்வியைத் தவிர்த்தால், ஒன்பதாமிடத்திலுள்ள பங்களாதேஷை 10ஆம் இடத்துக்கு பின்தள்ளி, ஒன்பதாமிடத்துக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .