2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வட்பேர்ட்டிடம் தோற்றது லிவர்பூல்

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வட்பேர்ட்டின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்ற லிவர்பூல் தோற்றது.

இப்போட்டியின் முதலாவது பாதியில் கோல் பெறும் பல வாய்ப்புகளை வட்பேர்ட் கொண்டிருந்தபோதும், அவ்வணியின் அணித்தலைவரும் முன்களவீரருமான ட்ரோய் டீனியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் அபாரமாகத் தடுத்த நிலையில் போட்டியின் முதற்பாதி முடிவில் வட்பேர்ட் முன்னிலை பெறுவது தடுக்கப்பட்டது.

எவ்வாறெனினும், சக முன்களவீரரான அப்துல்லாயி டூகூரேயிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 54ஆவது நிமிடத்தில் கோலாக்கிய வட்பேர்ட்டின் இன்னொரு முன்களவீரரான இஸ்மைலா சர் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில் சக மத்தியகளவீரர் வில் ஹுயூஸிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய இஸ்மைலா சர், தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இதேவேளை, லிவர்பூலின் பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் மோசமான பின்புறமான பந்துப்பரிமாற்றத்தை இஸ்மைலா சர் இடைமறித்து வழங்கிய பந்தை ட்ரோய் டீனி கோலாக்க இறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில், போர்ண்மெத்தின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் செல்சி முடித்துக் கொண்டிருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்கோஸ் அலோன்ஸோ பெற்றிருந்தார். போர்ண்மெத் சார்பாக, ஜெஃபெர்ஸன் லெர்மா, ஜோஷுவா கிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .