2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மற்றொரு யுத்தத்தை எதிர்பார்த்து அரசாங்கம் தன்னை பலப்படுத்துவது முட்டாள்தனமானது: சுரேஷ் எம்.பி.

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மற்றொரு யுத்தத்தை எதிர்பார்த்து அரசாங்கம் தன்னைப் பலப்படுத்துவது முட்டாள், தனமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், 'தமிழ்மிரர்' இணையத்தளத்திற்கு அளித்த விசேட செவ்வியொன்றில் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், " புதிய வரவு - செலவுத்திட்டத்தில் கடந்த வருடத்தைவிட பாதுகாப்புக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் யுத்தம் முடிந்தபின் பாதுகாப்புச் செலவு குறையுமே தவிர அதிகரிக்காது. ஆனால் இங்கு அது அதிகரிக்கிறது.

விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றுசேர பலப்படுத்தவிடக்கூடாது என்று அரசாங்கம் கூறுகிறது. புலம்பெயர்ந்த மக்கள் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அதேசமயம் யுத்தம் முடிந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது, ஒருசிறிய துப்பாக்கிச் சத்தம்கூட கேட்கவில்லை என்றும் அரசாங்கம் கூறுகிறது. 13 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில் இவ்வளவு தொகை பணம் ஒதுக்கி மீண்டும் இன்னொரு தடவை புலிகள் இயக்கம் வந்துவிடும் என்ற கோணத்தில் சிந்திப்பது பிழையான முன்மாதிரி, பிழையான தொடக்கம்.
 
தமிழ் மக்கள் முழுமையான உரிமைகள் கொடுக்கப்பட்டு, அதிகாரங்கள் வழங்கப்பட்டு, வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சரியான அரசியல் நிர்வாக முறை உருவாக்கப்படுமாக இருந்தால் விடுதலைப் புலிகளை மக்களோ யாரோ அங்கிகரிக்கப்போவதுமில்லை, வரவேற்கப்போவதுமில்லை, யுத்தத்தை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.

ஆகவே, அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்த்து தன்னைப் பலப்படுத்துவது என்பது புத்தியோகபூர்வமற்ற, முட்டாள்தனமான ஒட்டுமொத்தமாக நாட்டையே அதல பாதாளத்தில் தள்ளுகின்ற, பொருளாதார வளர்ச்சியை காண்பதற்கான எந்தவித தூரநோக்கற்ற சிந்தனையாகவே இருக்கும்"என்றார்.

"யுத்தத்திற்கான சூழ்நிலை நாட்டில் இல்லை. இப்பிரச்சினையையைத் தீர்ப்பதற்கு வேறு பல வழிகள் இருக்கின்றன. அவற்றைவிட்டுவிட்டு இராணுவத்தை பலப்படுத்துவது  இப்படியான சிறிய நாட்டிற்கு இது தேவையல்ல. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பலநாடுகள் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள், அந்தத் தீர்வு எட்டப்பட்டால் பல பிரச்சினைக் தீர்ந்துவிடும் என்று கூறுகின்றன.

மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு விடயங்களைப் பொறுத்தவரை, சரியான நிகழ்ச்சி நிரல், மக்கள் இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் அவர்களுக்கு உதவிகள் செய்து அவர்களையும் நாங்கள் பலப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அரசாங்கத்திடம் இருப்பதாகத் நான் கருதவில்லை.

இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் சொந்த இடங்களில் குடியேற விரும்பவில்லை என்று அரசாங்கம் கூறுவது நம்பக்கூடியதல்ல.

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு நீண்ட நிலைத்து நிற்கக்கூடிய தீர்வை காணமுடியும்.

சமஷ்டி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட நாடுகள் எதுவும் தமது அவிருத்தியிலோ ஏனைய முயற்சிகளிலோ  தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை. எனவே இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்று கூறுவது அரசியல் சிந்தனையற்ற, வரட்டுத்தனமான, பிடிவாதமான எண்ணம் கொண்டவர்களின் நிலைப்பாடே தவிர, சமஷ்டி அரசியலமைப்பு என்பது ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு உன்னதமான நிலை. ஆகவே சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கும்.

1987ஆம் ஆண்டு இலங்கை ஒப்பந்தத்தின் பின் அது போதாது அதற்கு மேலாக கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பிரேமதாச அவர்கள் செயற்பட்டிருக்கிறார். பிரேமதாச முதல் திருமதி சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் செயற்பட்டிருக்கின்றனர். (இது தொடர்பான) பல அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன.  அந்த அறிக்கைகள் எல்லாம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாக தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கினால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க முடியும் என்ற அடிப்படையிலேயே வந்தன.  

இவையெல்லாம் இருக்கும் போது, இன்னும் பல கட்சிகள் கூடிப் பேச வேண்டும் என்பது காலத்தை விரயமாக்குகின்ற விரயமாகவும், நம்பிக்கை தகர்ந்து போகின்ற விடயமாகவும் உண்மையாகவே இவர்கள் செய்வார்களா என்ற கேள்விக்குறியை உருவாக்குகின்றது" எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையே அரசியல் தீர்வு தாமதமடைவதற்குக் காரணம் என்ற ஜனாதிபதியின் கருத்து, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை நிலை, வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றாமை, வட மாகாண சபைத் தேர்தல், நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தல் என்பன உட்பட பலவிடயங்கள் குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அளித்த நேர்காணலை காணொளியில் முழுமையாகக் காணலாம்.


  Comments - 0

 • xlntgson Friday, 22 October 2010 09:16 PM

  மற்றொரு யுத்தமா,
  ஐயோ பயங்கரமாக இருக்கிறது நினைவும் காட்டாதீர்கள் தலைவர்களே!
  பழைய கடன் யுத்தத்துக்காக வாங்கினதை கட்டவேண்டும் அதுதான் 1300கோடி தேவை என்று கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருக்கிறார் அதுவே காரணமாக இருக்கட்டும்.
  அதிருக்கட்டும் அதற்கு ஏன் ஒதுக்கீடு?
  செலவை குறைத்து விரயத்தை இல்லாமல் செய்து இலஞ்சம் ஊழலற்ற நிர்வாகம் போதாதா,
  அமைச்சரவை 25 என்று குறைக்கப்படவேண்டும்
  எம்பிக்கள் எண்ணிக்கை 125 போதும் மாகாண சபை வடக்கு கிழக்குக்கும் தெற்குக்கு மூன்றும் போதும் எப்படி என்னுடைய யோசனை?
  யாரும் கேட்டால் தானே!

  Reply : 0       0

  Thilak Saturday, 23 October 2010 12:33 AM

  இந்திய அரசு சமஷ்டி தீர்வை பெற்றுத்தரும் என்று நம்பியிருந்தால் இலவுகாத்த கிளியின் கதைதான்.

  Reply : 0       0

  soruban Friday, 19 November 2010 10:30 PM

  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழ் மக்களுக்கு உங்களை எல்லாம் எமக்கு நன்றாகத் தெரியும். நன்றாகப் பேச மட்டும் தெரியும். உங்களால் அதையும் தில் மக்களுக்கு செய்ய முடியது . தமிழ் மக்களும் அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள் பாவம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--