2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் பொருளாதாரமும் இழுபறி அரசியலும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிட்டத்தட்ட இலங்கையின் அரசியலையும் அதன் இழுபறிகளையும் மறந்துபோகச் செய்யுமளவுக்கு, உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள், நம்மவர்களை, கடந்த சில மாதங்களாக ஆட்கொண்டிருந்தது. தற்போது, உலகக்கிண்ணப் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் அரசியலும் அடுத்து வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலும், மய்யத்தை ஆட்க்கொள்ள ஆரம்பித்துள்ளது. இந்தப் பரபரப்புக்கு நடுவில், நமது பொருளாதார நிலைமைகளையும் அதற்காக அரசியல்வாதிகள் நமக்குக் கொடுத்த வாக்குறுதிகள், இலக்குகள் தொடர்பிலும் சற்றே நினைவில் கொள்ளுவது அவசியமாகிறது. 

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வருகை தந்தபோது, 2020க்குள் வழங்கப்படும்  அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனும் உறுதிமொழியுடனேயே பதவிக்கு வந்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தொக்கி நிற்பதாகவே தற்போதைய நிலையுள்ளது. அதிலும் குறிப்பாக, பொருளாதாரம் சார் இலக்குகளை அடைவதென்பது குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தால் 2025ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு எட்டப்படக்கூடிய இலக்குகள் தொடர்பான விடயங்கள்,  குறித்த சில காலங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டிருந்தது. இதில், 2020இல் அடையப்பட முடியாத பல குறிக்கோள்கள், மறைமுகமாக 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகளுக்குள் உள்ளடக்கப்பட்டு, மற்றுமொரு மாற்று உறுதிமொழிப் பத்திரமாக தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டிருந்தது.

2025ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட இலக்குகளில், முதன்மை குறிக்கோள் “இலங்கையை ஒரு செல்வந்த நாடாக மாற்றியமைப்பதன் மூலம், இந்து சமுத்திரத்தின் மையமாக மாற்றியமைப்பதுடன், இதை அடிப்படையாகக்கொண்டு அறிவுசார் ரீதியில் போட்டித்தன்மைமிக்க சமூக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்” என்பதாகும். இந்தப் பரந்த குறிக்கோளினுள் பல்வேறு சிறிய வாக்குறுதியளிக்கப்பட்ட இலக்குகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. இவை, 2020இல் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் போல, தடைகளைத் தகர்க்க முடியாமல் தேங்கி நிற்குமா? இல்லை அடையப்பட்டு இலங்கையை வல்லமை கொண்ட நாடாக மாற்றியமைக்குமா? என்பதே, இதை அறிமுகப்படுத்தும்போது அனைவரினதும் கேள்வியாக இருந்தது. உண்மையில், அந்தக் கேள்வியே நம்மவர்களுக்கு தற்போது விடையாக மாறியிருப்பது வேதனையானது.

திட்டமிடல் இல்லாத இலக்குகள்

2025ஆம் ஆண்டை நோக்கியதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இலக்குகள்,  கடதாசியில் கவர்ச்சிகரமாக இருக்கும் சரியான திட்டமிடல்கள் இல்லாத வாக்குறுதிகள் என்றே, ஆய்வாளர்கள் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தார்கள். வெறுமனே, கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் வெளியாகியிருந்த இந்த இலக்கை அடைந்துக்கொள்ள, மிக நீண்டகாலம் இருக்கின்ற போதிலும், அதை அடைவதில் அரசாங்கத்தின் திட்டமிடல் என்பது பூச்சிய நிலையிலேயே இருந்திருக்கின்றது. காரணம், நல்லாட்சி கூட்டணியானது, எப்போது முறிவடையும் எனும் நிலையில், இந்த இலக்கை இரண்டு கட்சிகளும் ஒருசேர நிறைவேற்றுமா அல்லது புதிய கூட்டணி ஏதும் உருவாகி, இந்த இலக்குகள் கானல் நீராக போகுமா என்கிற கேள்வியுடன்தான் மக்கள் இந்த வருடத்தையே ஆரம்பித்து இருந்தார்கள். 

இலக்குகள்

இந்த 2025 குறிக்கோளில் உள்ளடங்கியுள்ள வெளிநாட்டு நேரடி முதலீடு, ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை வருமானம், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் என்பவை தொடர்பான இலக்குகள் அடங்கியுள்ளன. மேற்கூறிய அனைத்தும் ஒருசேர நடந்தால் அல்லது இவற்றின் வழியாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி உச்ச நிலையை அடையுமெனின், இதன் விளைவாக, 2025இல் இலங்கையர் ஒருவருக்கான தலா வருமானம் என்பது, அபிவிருத்தி அடைந்த நாட்டிலுள்ள ஒருவரின் வருமானத்துக்கு நிகரானதாக இருக்கும் என்றே, ஆய்வாளர்கள் கணிப்பிட்டிருந்தார்கள். ஆனால், தற்போதைய நிலையில், நாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடனே போட்டியிட்டு, முன்னேற்றகரமான நிலையை அடைந்துகொள்ளுவது கேள்விக்குறியாகியுள்ளது 

வெளிநாட்டு நேரடி முதலீடு

2025ஆம் ஆண்டை நோக்கிய முக்கிய இலக்குகளில் ஒன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளை, கணிசமான அளவில் அதிகரிப்பதாகும். பொதுவாகவே, ஒரு நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பதன் மூலமாக, ஏற்றுமதியை ஊக்குவிக்க முடிவதுடன், சென்மதி நிலுவையைச் சீர்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது, பிரதான இலக்கை அடைவதன் மூலமாக, உப இலக்குகளை அடைவதற்கு சமனான வழிமுறையாகும்.

ஆனால், இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான பிரதான இலக்கே நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக இருக்கிறது. இந்த இலக்குகளின் பிரகாரம், எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு நேரடி முதலீடு, சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்ட வேண்டும். இது எந்த வகையிலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல. இலங்கையில் போர்முடிவுக்கு வந்த காலப்பகுதியான, 2010-2014இலும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015-2016 வரையான காலப்பகுதியிலுமே, நம் நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு சராசரியாக 1 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு நேரடி முதலீட்டின் அளவை சரியாக கணிப்பிடுவோமாயின், அது 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த நிலையில், இலங்கை அரசாங்கம், மீதமாகவுள்ள மூன்று வருடங்களில் ஏதேனும் நிகழ்த்த முடியாத மாயாஜாலக் கொள்கையை நடைமுறைபடுத்தினாலேயொழிய, இந்த இலக்கை அடைந்துக்கொள்ள முடியாது.

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடல் குழு, குறைந்தது 2020ஆம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்து, அதன் திட்டங்களை வகுக்குமாயின், அது இன்றைய சூழலை அடிப்படையாகக்கொண்டு அடையப்படக் கூடியதும், நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் இருக்கும் எனக் கூறமுடியும். காரணம், ஹம்பாந்தோட்டையில் சீன முதலீடுகள் தொடர்பான குழறுபடிகள், இறுதி தருவாயை எட்டியுள்ளமை, ஏற்றுமதியில் படிப்படியாக ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, பல்தேசிய நிறுவனங்களை ஈர்த்துள்ள இலங்கையின் ஏற்றுமதி துறை, IMFக்கு இணக்கமாக மாற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் என்பனவற்றின் மூலமாக இதை அடைய முடியும்.

ஆனால், 2020ஆம் ஆண்டில் அடையப்பட வேண்டிய  5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் என்பது தற்போதைய நிலையில் எட்ட முடியாத ஒன்றாகும். அதிலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு பின், குறைந்தது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கூட எட்ட முடியாதநிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதற்குப்பின் குறித்த பொருளாதார இலக்குகளில் மறுசீராக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 
ஏற்றுமதிகள்

இலங்கையின் ஏற்றுமதிகளில் சாதகமான நிலைமை தென்படும் சமயத்தில் 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகளில் ஏற்றுமதி தொடர்பிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தற்போது, சராசரியாக 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அண்மையாகவுள்ள ஏற்றுமதிகளை இரண்டு மடங்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றவேண்டும் என இலக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவும், தற்போதைய சூழ்நிலையில் எட்டப்பட முடியாத இலக்கென்பது அனைவர்க்கும் தெரிந்ததே! 

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் என்பது, மறைமுகமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டுவருகின்ற உத்தியாகும். இதற்கு ஏற்றுமதியில் பல்வகைமைத் தன்மையைப் பேணுதல் அவசியமாகும். காரணம், இலங்கையின் ஏற்றுமதி துறையில் பெருமளவிலான வருமானம் விவசாயத்துறைச் சார்ந்த ஏற்றுமதி மூலமாகவே வருகின்றது. அதிலும், சில குறிப்பிட்ட உற்பத்தி பொருள்களில்தான், இந்த ஏற்றுமதியும் தங்கியுள்ளது. எனவே, இரட்டிப்பு வருமானம் எனும் திட்டமிடலைக் கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்துக்கும் சேர்த்து இந்தச் சிறிய ஏற்றுமதி வட்டத்துக்குள் தங்கியிருப்பது என்பது நடைமுறைக்கு ஒப்பானதல்ல. எனவே, இலங்கை அரசாங்கம் ஏற்றுமதியில் பல்வகைத்தன்மையை நடைமுறைக்கு கொண்டுவருவது அவசியமாகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள குழப்பமான பொருளாதார, அரசியல் கொள்கைகளை வைத்துக்கொண்டு, முதலீட்டாளர்களைக் கவர்தல் என்பது கடினமானதாகும். எனவே, திட்டமிடல்கள் மட்டுமின்றி அவற்றை நடைமுறைபடுத்துவது தொடர்பிலும் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. எனவே, 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகளை அடைய ஏற்றுமதி தொடர்பிலும், அரச இறைக் கொள்கைகள் தொடர்பிலும் நிறையவே மாற்றங்களைச் செய்யவேண்டியதாக இருக்கிறது.

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை தொடர்பில் வகுக்கப்பட்ட இலக்குகளில் குறைந்தது 2020ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலமாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கும் இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு பின்னதாக வலுவிழந்துள்ளது.

கடந்த கால தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான இலக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், நடைமுறை அதற்கு நேர்எதிராகவே இருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களில் இலங்கைக்குள் வருகின்ற சுற்றுலா பயணிகளும் வருமானமும் அதிகரித்துள்ளபோதிலும் அந்தநிலையில் கடந்த சில மாதங்களில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுளள்து. இதிலிருந்து மீட்சி பெறுவதற்கு குறைந்தது 6-12 மாதங்களாவது ஆகக்கூடும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதபட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையில் மட்டுமல்ல வருமானத்திலும் அதிரிப்பை ஏற்படுத்த முடியாது.

நபர் ஒருவருக்கான தலா வருமானம்

2025ஆம் ஆண்டுக்காக பட்டியலிடப்பட்ட இலக்குகளில் மிக மோசமான நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக காணப்படும் இலக்கு இதுவாகும். தற்போது 4,000 அமெரிக்க டொலராகவுள்ள தனிநபர் தலாவருமானத்தை 2020க்குள் 5,000 அமெரிக்க டொலராக மாற்றியமைப்பதாகும். இது தற்போதைய தலாவருமானத்தின் 25% அதிகரிப்பாகவுள்ளது. வெறுமனே இன்னும் மூன்று ஆண்டுகளே 2020ஆம் ஆண்டுக்கு உள்ளநிலையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சியப்போல மூன்று மடங்கு பொருளாதார வளர்ச்சியை இலங்கை எட்டும்போது மட்டுமே இந்த நிலையை தனிபர் வருமானத்தில் 2020இல் எட்ட முடியும். அப்படியாயின், இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி சாத்தியப்படாத இலக்குகள் தொடர்பில் நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

நடைமுறைபடுத்தல்

இலங்கையில் எத்தனை ஆட்சிவந்தாலும் தீராத நோயாகவிருப்பது சொல்வதனை நடைமுறைபடுத்தாமலே இருப்பதாகும். இன்றைய நிலையில், இலங்கைக்கு தேவையானது உயர்பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான, உறுதி வழங்கிய , நிலையான கொள்கைகளை நடைமுறைபடுத்துவதாகும். இதன்போது, பொருளாதார வளர்ச்சியை தூண்டக் கூடியவகையிலும், வளர்ச்சியை விரைவுபடுத்தக் கூடிய கொள்கைகளையும் அரசு நிர்ணயிக்க வேண்டியது அவசியமாகிறது.

2025ஆம் ஆண்டை நோக்கிய இலக்குகளை கொண்ட பிரதிகளும் இது சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது என்பது சுவாரசியமான ஒன்றாகும். அதில், இலங்கை அரசாங்கமானது, தான் உருவாக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் என்பவற்றைத் திறன்மிகுவகையில் நடைமுறைபடுத்தாதன் விளைவாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறது. எனவே, இந்த இலக்குகளை அடைய ஸ்திரமான ஒருங்கிணைப்பும், கட்டுப்பாடுகளும் கொண்ட நடைமுறைபடுத்தல் அவசியமாகிறது.

ஆனாலும்,அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதில் இலங்கையின் அரசியலானது இடம்கொடுப்பதாக இல்லை. குறிப்பாக, கடந்த வருடத்தின் இறுதியில் ஆரம்பித்த அரசியல் குழப்பநிலைகள் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணமே உள்ளது. அதிலும், ஜனாதிபதி தேர்தலுக்காக பரபரப்புக்கள் ஆரம்பிக்கவுள்ளநிலையில், இந்த பொருளாதார இலக்குகள் தொடர்பில் மக்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் மறந்து போய்விடுகின்ற நிலையே ஏற்படும்.ஆனால், இதனால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கப்போகிறவர்கள் சாதாரண சாமானியர்களான நாமே என்பதனை மறந்து விடாதீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .