இலங்கையின் பொருளாதாரமும் நமது செலவீனங்களும்

நாள்தோறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள், மக்களை குழப்பத்துக்குள் தள்ளியிருப்பதுடன், அரசின் மீதான விமர்சனத்தையும் அதிகரித்துள்ளது.

பெற்றோலியப் பொருட்கள், வாழ்வாதார அத்தியாவசிய பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என, பாரபட்சமில்லாமல், அனைத்துப் பொருட்களின் விலை அதிகரிப்பும், தனிநபரை மட்டுமல்லாது, இலங்கையின் வணிகர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என, ஒருவரையும் விட்டுவைக்காமல் பாதித்துக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், என்னதான் போதுமான வருமானத்தை பெற்றாலும், நம்மில் பலருக்கும், அது போதுமானதாகவே இருப்பதில்லை. தங்களது அவசரத் தேவைகளுக்குக் கூட, அடுத்தவரையோ, வங்கிக்கடன்களையோ நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, எதனால் நம்மில் பலருக்கு ஏற்படுகின்றது என, நாம் சிந்தித்துள்ளோமா?   

உண்மையில், வேகமாக நகரும் இன்றைய உலகில், நின்று, நிதானித்து, எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களாகவே நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எமது வளங்களை, எத்தகைய வழிகளில் வினைத்திறனாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மறந்துவிட்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவீனங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும் பழி சுமத்திக் கொண்டே, நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில், நிதி ரீதியான முகாமைத்துவமும் அது தொடர்பிலான நன்மைகளும், வாய்ப்புகளும், நமது பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலமாகவே நமக்குக் கிடைக்கப்பெறும்.  
வருமானத்துக்கு மேலாக செலவு என்பதே, இன்றைய தினத்தில், பலரது குறையாகவுள்ளது.

வருமானம் இதுதான் என, முற்கூட்டியே கணக்கிட்டுப் பார்க்கும் நாம், நமது சேமிப்புகள், முதலீடுகள், செலவுகள் என்பவற்றை, முறையாக முகாமைத்துவம் செய்யாமல், தனியே எனக்கான வருமானம் போதாது என்று குறை கூறிக்கொண்டிருப்பது, அர்த்தமற்ற செயற்பாடாகும்.

அப்படியாயின், தனிநபரின் அல்லது குடும்பத்தின் சுயநிதியை, எவ்வாறு முகாமைத்துவம் செய்யவேண்டும் என்பது தொடர்பிலும், அவை தொடர்பிலான அடிப்படைகளையும் அறிந்திருத்தல் அவசியமாகும்.  
உண்மையில், இதுவொன்றும் நிதி முகாமையாளர்களின் வேலையைப்போல, புரிந்துகொள்ளக் கடினமானதொன்றல்ல. ஆனால், இன்றைய வணிக உலகில், நிதி முகாமைத்துவம் கடினமானதொன்றாக மாற்றப்பட்டு வணிகமாக்கப்பட்டுள்ளது.

உண்மையில், நம்மில் ஒவ்வொருவருமே, நமது வருமானத்தை முகாமைத்துவம் செய்யும் தேர்ச்சியைப் பெறுகின்றபோது, அடிப்படையான நிதி முகாமைத்துவத் தேர்ச்சியைப் பெறுகிறார்கள் என்பதே உண்மை.  

அப்படியாயின், எவ்வாறான சிறுவகை நிதி முகாமைத்துவங்கள் மூலமாக, நாம், நமது செலவீனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுவதுடன், சேமிப்புகளினூடாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்வோம்.  

உங்கள் ஊதியமும் சேமிப்பும் ஒன்றல்ல

சுயநிதி முகாமைத்துவத்தின் மிகப்பெரும் அடிப்படையே இதுதான். நீங்கள் உழைக்கும் பணத்தை விட, உங்களிடமுள்ள நிகரப்பெறுமதியான (Net Worth) தொகையே, உங்களது சேமிப்பாக அமையும்.

ஒருவர், அதிகமாக வருமானம் உழைப்பதால், அவரை, செல்வந்தராகவும் குறைவாக வருமானம் பெறுபவ​ரை ஏழ்மையானவர் என்றும் நினைப்பது தவறாகும்.

அவர்களது வருமானத்தில், செலவீனங்கள் எப்படியுள்ளது என்பதைப் பொறுத்தே, ஒவ்வொருவரதும் நிலை தீர்மானிக்க கூடியதாக அமையும்.  

முதலீட்டைப் பார்க்கிலும் சேமிப்பு முக்கியமானதாகும்

முதலீட்டு எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முதல், அந்த முதலீட்டை உருவாக்கக்கூடிய சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. இந்தச் சேமிப்புத் தன்மையில்லாமல், எந்த முதலீட்டையும் உருவாக்கிகொள்ள முடியாது.  

கடனட்டை கடன்களை மாதம்தோறும் காவிச் செல்லாதீர்கள்

இன்றைய காலகட்டத்தில், மக்களால் வங்கிகளில் பெறப்படுகின்ற கடன்களுக்குச் சமனாக, கடனட்டை மூலமான கடன்களின் அளவும் உள்ளது.

சாதாரணமாக, கடனட்டைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையான பின்பு, இயல்பாகவே, மாதாந்த குறைந்த கட்டணத்தை மாத்திரம் செலுத்தி, கடனை பிற்போடுகின்ற நிலையே காணப்படுகிறது. இது, சாதாரண ஒருவர், கடனை மீளச்செலுத்தாமல் காவிச் செல்லும் நிலையையும் பணத்தைச் சேமிக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தும்.

எனவே, கடனட்டைப் பயன்பாட்டைத் தவிர்த்தல் மிகநன்று. வருமானத்துக்கு ஏற்ப, மாதச்செலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு கடனட்டையைப் பயன்படுத்துவது உசிதமானது.  

மாதச்செலவுகளை முறையாக கண்காணித்தல் அவசியம்

பணத்தைச் சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் மாத்திரமே போதுமானதல்ல. மாறாக, செலவீனக் கோலத்தைக் கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஊதாரித்தனமாகச் செலவு செய்வதைக் கட்டுப்படுத்திக் கொண்டாலே, மாத இறுதியில் ஏற்படும் இறுக்கநிலையும் குறையும். கூடவே, சேமிப்பும் உருவாகும்.   

முறைமையைக் கையாளுதல்

கடந்த காலத்தில், நீங்கள் மாதம்தோறும் செலுத்திய கட்டணங்களையும் செலவுகளையும் குறித்துவைத்துக் கொண்டு, அடுத்து வரும் மாதங்களில், அந்த நிலையானக் கட்டணங்களையும் செலவுகளையும் செலுத்துவதற்குப் பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையுள்ளது.

தற்போதைய நிலையில், மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிலையான  தொகையை, வங்கிகளின் மூலமாக முன்னதாகவே முறைமைப்படுத்திக் கொள்ளமுடிகிறது. இது, வருமானத்தில், எவ்வளவு பணத்தைச் செலவிடவேண்டும் என்பதை முன்கூட்டியே, திட்டமிட்டக் கூடியதாவும் இருக்கும்.  

மிகப்பெரிய செலவுகளை அவதானமாக செய்தல்

ஆடம்பரத்துக்கும் அத்தியாவசியத்துக்குமான வேறுபாடு, சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

ஆனால், வீடு வாங்குவதிலும் போக்குவரத்துச் சாதனங்கள் வாங்குவதிலும், நம்மவர்கள் ஆடம்பரத்துக்கும் அத்தியாவசியத்துக்குமான இடைவெளியை மறந்து விடுவார்கள்.

இதன் காரணமாக, மிகப்பெரிய கடனை, வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்களாகவே இருக்கிறார்கள்.  

அதாவது, மிகப்பெரிய செலவீனங்களைச் செய்யத் தயாராகும்போது, ஆடம்பரத்துக்கு, அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிலும், அதன் அத்தியாவசியத் தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்போதுதான், நாம் அதற்குத் தகுந்த  செலவுகளை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தேவையான பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

உடனடிச் செலவீனங்களைக் கையாளுதல்

ஒவ்வொரு மனிதருக்குமே, திட்டமிடாதச் செலவீனங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றைக் கையாளக்கூடிய வகையில், திரவப் பணத்தைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.

திட்டமிட்ட செலவுகள் போக, எஞ்சிய அனைத்தையுமே சேமிப்பது என்பது, முட்டாள்தனமே ஆகும். காரணம், எதிர்பாராத செலவுகளுக்கு எப்போதுமே நாம் தயாராக இருத்தல் அவசியமாகிறது.

எனவே, எப்போது, எவ்வளவு, சேமிப்பது என்பது தொடர்பில் அவதானமாக இருத்தல் அவசியமாகிறது.  
வருடம்தோறும் பழக்கத்தை மாற்றல்

எப்படி ஒரு கெட்ட பழக்கத்தை உடனடியாகக் கைவிட முடியாமல், சிறிது சிறிதாகக் கைவிடுவதாக முடிவு செய்கின்றோமோ, அதுபோல, எந்தவொரு சேமிப்பு, முதலீட்டையும் உடனடியாகவே மிகப்பெரிய அளவில் செய்வதென்பதும் கடினமானதாகும்.

எனவே, சிறிது சிறிதாக அதிலும் மாற்றத்தைக் கொண்டு வருதல் அவசியம். இந்த வருடத்தில் இந்தளவு தொகையைச் சேமிப்பதாகவோ அல்லது முதலிடுவதாகவோ முடிவு செய்திருப்பின், அடுத்துவரும் காலங்களில், அதைவிட அதிகமாக முதலீடு செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.  

அருகிலிருப்பவர்களுக்கும் கற்றுக்கொடுத்தல்

தனியாக நீங்கள் மட்டும் சுய முகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, உங்கள் நிதியை வளமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மாறாக, உங்கள் அருகிலிருக்கும் குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள் மத்தியிலும், இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க முயற்சியுங்கள். அப்போதுதான், மிகச்சிறந்த முறையில் நிதியைக் கையாளக் கூடியதாக அமையும்.  

பொருத்தமானவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை

நம் சமூகத்தைப் பொறுத்தவரை, நமது சொத்துகள் தொடர்பிலோ, வருமானம் தொடர்பிலோ அடுத்தவருக்கு தெரிந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இருக்கிறோம்.

இதனால்தான், பல சந்தர்ப்பங்களில் பொருத்தமான ஆலோசனைகளைப் பெறத்தவறிவிட்டு, வருமானம் உழைக்கும் வழிகளையும் மூலதனங்களையும் இழந்து நிற்போம்.

எனவே, பொருத்தமானவர்களிடம் தேவையான தகவல்களைப் பெற்று, அந்த ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. இது, உங்கள் செல்வத்தை மேலும் பெருக்குவதாகவே அமையுமே தவிர, பாதிப்படையச் செய்யாது.  

தற்போதைய நிலை என்ன என்பதனை உணர்தல்

சுயநிதி முகாமைத்துவச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னரோ, அதை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும் முன்னரோ, நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது.

காரணம், நமது தற்போதைய நிலை என்ன என்பதை அறியாமல், எதிர்காலத்தைத் திட்டமிடுவதுபோல, முட்டாள்தனம் வேறேதுவுமில்லை.

எனவே, நமது தற்போதைய நிலை என்ன, நமது சேமிப்பு மற்றும் செலவீனச் சக்தி என்ன, பலம், பலவீனம் என்ன என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது.  

வரிகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல்

கடந்த காலங்களில், இலங்கையில் தனிநபர் வருமானம் சார்ந்த வரிகளில் இறுக்கமான நடைமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தற்போது அரசாங்கம் தனிநபர்களிடமிருந்து எவ்வாறு வருமானத்துக்கேற்ற வரிகளை அறவிடலாம் என்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.

இது, எதிர்காலத்தில் நிச்சயம் வருமான வரிகளில் இறுக்கமான நடைமுறை கடைப்பிடிக்கப்படப் போவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

எனவே, ஒவ்வொரு தனிநபரும், தனது வருமான மூலங்களை முதலீட்டு நடைமுறைகளுக்குப் பயன்படுத்தும்போது, எவ்வாறு வரி வினைத்திறன் தன்மையைக் கையாள முடியும் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகிறது.

இல்லாவிடின், தேவையற்ற வகையில் வீணாக, நிறைய வரியைச் செலுத்தும் நிலை உருவாகக்கூடும். இது, சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கடினமான ஒரு பகுதியாகவுள்ள காரணத்தால், வரி முகாமையாளர் ஒருவரை நாடுவதில் தவறில்லை.  

மேலேகூறிய வழிமுறைகள் அனைத்துமே, தற்சமயம், உழைக்கும் வருமானத்தை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி, மேலதிகமாக எதிர்க்காலத்தில் எத்தகைய நலன்களைப் பெறலாம் என்பதையே தெளிவுபடுத்துகின்றன.

இதன் மூலமாக, உழைக்கும் வருமானத்தை, வினைதிறனாகப் பயன்படுத்தி, மேலதிகப் பணத்தை உழைக்கக் கூடியதாக இருக்கும். உண்மையில், ஒவ்வொரு தனிநபருக்குமே இயலுமை காலம் என்கிறவொன்று, கட்டாயமாக இருக்கும். அதற்குள், முடிந்தவரை உழைத்துவிட வேண்டும் எனவும், தனக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் தேவையானவற்றைச் சேர்த்துவிட வேண்டும் எனும் சுமையும், நிச்சயமாக இருக்கும்.

ஆனால், ஒவ்வொருவருமே தமக்கான சுயநிதி முகாமைத்துவத்தைச் சரியாக பின்பற்றும் போதுதான், மனதில் ஓய்வுகாலத்துக்கான பயம் என்பதைத் தாண்டி, நிதிச் சுதந்திரம் கண்டிப்பாக இருக்கும்.  


இலங்கையின் பொருளாதாரமும் நமது செலவீனங்களும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.