Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அனுதினன் சுதந்திரநாதன் / 2018 மார்ச் 26 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்குச்சந்தை என்பது, ஏனைய சந்தைகளைப்போலவே சந்தையில் ஏற்படுத்தப்படும் கேள்வி மற்றும் நிரம்பல்களின் அடிப்படையில், பங்குகள் கைமாறும் ஒரு சந்தையாக இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை, இந்தப் பங்குச்சந்தையின் அனைத்து நடவடிக்கைகளுமே கொழும்பு பங்கு பரிவர்த்தனையால் நிர்வகிக்கப்படுகிறது.
பங்குச்சந்தையில் பரிவர்த்தனை என்பது, தனியே பங்குகளை வாங்கி விற்பதன் மூலமாக ஈட்டப்படும் இலாபத்துக்காக மட்டுமே இடம்பெறுவது அல்ல. மாறாக, பங்கு ஒன்றை நீங்கள் கொள்வனவு செய்யும்போது, நீங்கள் மறைமுகமாக அந்தப் பங்குக்குச் சொந்தக்காரரான நிறுவனத்தின் உரிமைத்துவத்தில் அங்கத்துவத்தைப் பெறுகிறீர்கள். அதிகளவில் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, அந்த உரிமைத்துவத்தின் மூலமாக, நிறுவனத்தின் செயல்பாடுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய பங்காளராக மாறுவீர்கள். எனவே, பங்குச்சந்தையில் பங்குகளின் பரிவர்த்தனை என்பது, பங்கு கொடுக்கல்வாங்கலின் இலாபநட்டத்தைப் பார்க்கிலும், பங்குகளின் சொந்தக்காரரான நிறுவனங்களின் உரிமைத்துவத்தில் தாக்கத்தை செலுத்துவதாக அமைந்திருக்கிறது.
உதாரணமாக, பங்குகளை உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பரிமாற்றம் செய்வதன்மூலம், நிறுவனங்களின் உரிமைத்துவத்தில் உங்களுக்கு தெரியாமலே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அத்தகைய மாற்றத்தில் ஒரு சிறு பங்காளராக நீங்களும் இருந்திருப்பீர்கள். எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பங்குச்சந்தையில் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, அந்தப் பங்குகளை எதனடிப்படையில் கொள்வனவு செய்யத் தெரிவுசெய்ய வேண்டுமென்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயமாக அமைகிறது.
இலங்கை போன்ற நாடொன்றில் பங்குச்சந்தையில் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் முதலீடுகளை மேற்கொள்ளுகிறார்கள். இவர்களில், சிலரின் நோக்கம் முதலீட்டு இலாபத்தை பெறுவதாகவும், சிலரது நோக்கம் பங்குகளின் ஊடாக, அதிகாரம்மிக்க உரிமைத்துவத்தை நிறுவனங்களில் பெற்றுக்கொள்வதாகவும் இருக்கும்.
இவற்றில் எந்த நோக்கத்தை நீங்களோ, முதலீட்டாளர்களோ கொண்டிருந்தாலும், அவர்கள் அந்த நோக்கத்தை அடைந்துகொள்ள, எவ்வகைப் பங்கைத் தெரிவு செய்வதென்பது பல்வேறுவிதமான காரணிகளில் தங்கியுள்ளது. அவற்றையும் அவற்றின் அடிப்படையையும் அறிந்துகொள்வது, பங்குச்சந்தையில் பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைவருக்குமே அவசியமான ஒன்றாகும்.
முதலீட்டாளர்கள் தமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, பங்குகளைத் தெரிவுசெய்யும்போது, வேறுபட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தவோ, பல்வேறுபட்ட காரணிகளையோ கவனித்து, தமது கொள்வனவை முடிவு செய்துகொள்ள முடியும்.
அவ்வாறு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்களை, பங்குச்சந்தையில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களும் ஈடுபடுபவர்களும் அறிந்திருத்தல் அவசியமாகிறது.
நிறுவனமே பங்குகள்; பங்குகளே நிறுவனம்
என்னதான் முதலீட்டாளர்கள் பங்குகள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தினாலும், பங்குகளின் பெறுமதியும் அதன் வளர்ச்சியும் அந்தந்தப் பங்குகள் உரித்தாகவுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடுகளின் விளைவாக, ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அகப்புற காரணிகளால், நிறுவனத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்துமே, பங்கின் விலையிலும் சரி, கொடுக்கல் வாங்கலிலும் சரி தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.
உதாரணமாக, 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு, இலங்கையில் வளர்ச்சியடைந்துவரும் துறைகளில் முதன்மையான துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. வருடம்தோறும் சராசரியாக 22% வளர்ச்சியை இந்தத்துறை கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கமும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அதீத உதவிகளைச் செய்துவருகிறது. முதலீட்டாளர் ஒருவரின் பார்வையில், இந்தச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியும் அரசாங்கத்தின் ஆதரவும் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களின் எதிர்காலம், மிகச்சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கையையே ஏற்படுத்தும். எனவே, அவர்கள் கொழும்பு பங்குசந்தையில், சுற்றுலாத்துறையின் கீழுள்ள பட்டியல்படுத்தப்பட்ட 38 நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால், இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுமே, மிகச்சிறப்பாக செயல்படுமென உறுதியாகக் கூறமுடியாது, காரணம், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு போன்ற சாதக புறக்காரணிகள் மட்டுமே, இதற்குப் போதுமானதாக இருக்காது.
மாறாக, குறித்த நிறுவனங்களின் செயல்பாடுகளும், எதிர்காலத் திட்டங்களும் அதன் வளர்ச்சியில் தாக்கத்தை செலுத்துவதாக இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் எதிர்காலம் கொண்ட துறைகளைக் கண்டறிவதுடன், அதனுள்ள நிறுவனங்களில் எவை மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.
நிறுவனத்தின் தன்மை
முதலீட்டாளர், தனது முதலீட்டுக்குப் பாதுகாப்பான துறையைப் பங்குசந்தையில் கண்டறிந்தபின்பு, எந்தநிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்கிற சிக்கலான முடிவை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன்போது, குறித்த துறையிலுள்ள நிறுவனங்களின் கடந்தகால மற்றும் நிகழ்காலப் பெறுபேறுகளைக் கவனத்தில்கொள்ளுவதுடன், எதிர்காலத்தில் எவ்வகையான திட்டங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
இதற்கு நிறுவனங்களின் தன்மையை வெளிப்படுத்தும் நிதியாண்டு அறிக்கைகளைப் பயன்படுத்த முடியும். இதில் வெளியிடப்படும் நிதியறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு, ஒவ்வொரு முதலீட்டாளர்களும் நிதிசார் விகிதங்களைக் கணிப்பிட்டு, நிறுவனத்தின் போக்கைக் கண்டறிய முடியும்.
நிதிசார் விகிதங்கள்
கடந்தகால நிதியியல் அறிக்கைகள், செயல்பாடுகள் என்பன, ஓரளவுக்கு நிறுவனத்தின் தன்மை, அதன் எதிர்கால வளர்ச்சி என்பவற்றை எடுத்துகாட்டுவதாக இருக்கும். இதனடிப்படையில், எந்த நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்கிற சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
முதலீட்டாளர் கொடுக்க விரும்பும் பங்கின் விலை
பங்குச்சந்தையில் மேற்கூறிய முடிவுகளின் பிரகாரம், முதலீட்டாளர் தனது முதலீட்டுக்கான நிறுவனப் பங்கைத் தெரிவு செய்தாலும், குறித்த பங்குக்கு வழங்கக்கூடிய பெறுமதிக்கு மேலாக அவர்கள் வழங்க விரும்புவதில்லை. இது நிறுவன செயல்பாடுகளுக்கும், பங்கின் பங்குசந்தைப் பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசத்தைக் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அதாவது, பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் அதீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதா? அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதா? என்பதைப் பொறுத்தே, முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தீர்மானம் அமைய வேண்டும்.
பெரும்பாலும் நிறுவனங்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளிலேயே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். காரணம், எதிர்காலத்தில் இந்தப் பங்குகளின் பெறுமதி அதிகரிக்ககூடும் என்கிற அடிப்படையில், இந்த முதலீட்டைச் செய்ய விரும்புவார்கள்.
ஆனாலும், இவ்வகை முதலீட்டைச் செய்யும்போது, நிறுவனத்தின் பெறுமதி, சந்தையில் குறைத்து மதிப்பிடப்படுவதற்கான ஏனைய காரணிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்படுகின்ற போதிலும், தன்னகத்தே திறமையற்ற முகாமைத்துவத்தைக் கொண்டிருந்தாலும், அதீத கடனைக் கொண்டிருந்தாலும் முதலீட்டாளர்கள் குறித்த நிறுவனத்தின் பெறுபேறுகளுக்கு இணையான பெறுமதியை வழங்க முன்வரமாட்டார்கள். எனவே, இதுபோன்ற பாதக காரணிகளையும் முதலீடு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
பங்கின் வளர்ச்சியும் பங்கிலாபமும்
முதலீட்டாளர்கள் பங்குகளைத் தெரிவுசெய்யும்போது, முதலீட்டு இலாபம் கொண்ட பங்குகளை ஒருசாரார் தெரிவு செய்ய விரும்புவதுபோல, மிக நீண்டகாலத்தில் வளர்ச்சியைத் தரக்கூடியப் பங்குகளைத் தெரிவுசெய்யும் ஒருசாராரும் முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். இவர்கள், இவ்வாறு வளர்ச்சித்தன்மை கொண்ட பங்குகளை இனம்கண்டு, அதற்குச் சந்தைப் பெறுமதியிலும் பார்க்க, அதிக பெறுமதியை வழங்க முனைவார்கள். இதற்குப் பிரதான காரணமே, அவர்கள் வழங்க விரும்பும் பெறுமதிக்கு மேலாக, நீண்டகாலத்தில் அவர்களால் இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற கணிப்பீடே ஆகும்.
இது அதீத இலாபத்தையும் அதற்குச் சமமாக அதீத நட்டத்தையும் தரக்கூடிய ஒரு முதலீட்டுத் தீர்மானமாகும். எனவே, இத்தகைய தீர்மானத்தை ஒரு முதலீட்டாளர் எடுக்கும்போது, அவர் அது தொடர்பில் மேலதிக ஆய்வுகளையும் கணிப்பீடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பங்குகளில் முதலீடு செய்யும்போது, அவை தனித்துப் பங்குகளின் விலை அதிகரிப்பின் மூலமான முதலீட்டு இலாபத்தை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில்லை. மாறாக, நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலமாக ஈட்டப்படுகின்ற இலாபத்தில் ஒருபகுதியை, பங்கிலாபமாகவும் முதலீட்டாளர்களுக்கு ஈட்டிக் கொடுக்கின்றது.
எனவே, பங்கிலாபத்தையும் தனது முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது, ஒரு முதலீட்டாளர் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. பங்குச்சந்தையில் பட்டியல்படுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுமே பங்கிலாபத்தை வழங்கும் நிறுவனங்களாக இருக்காது. அதற்காக, பங்கிலாபத்தை வழங்காத நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்படாத நிறுவனங்கள் எனவும் ஆகாது. காரணம், சில சமயங்களில் எதிர்கால முதலீட்டுச் செயல்பாடுகளுக்காக பங்கிலாபம் வழங்கலை சில நிறுவனங்கள் தள்ளிப்போடக் கூடும். எனவே, ஒவ்வொரு நிறுவனத்தின் திட்டங்கள், அதன் நிதியறிக்கைகளை ஆய்வுசெய்த பின்னர், முதலீட்டாளர்கள் எவ்வகை பங்கினை கொள்வனவு செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
அனைத்துமே, பங்குசந்தையொன்றில் குறுங்கால மற்றும் நீண்டகால முதலீட்டுத் தீர்மானத்தை கொண்டுள்ள முதலீட்டாளர் ஒருவர், தனது பங்குக் கொள்வனவைச் செய்யமுதல், கவனத்தில் கொள்ளவேண்டிய அடிப்படையான விடயங்கள் எதுவென சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றுடன், மாற்றமடையக்கூடிய இதரகாரணிகளான அரசியல், நிதியியல் கொள்கைகள் தொடர்பிலும் முதலீட்டாளர் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. இல்லையெனில், அவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், ஒருநொடிப் பொழுதில் முதலீட்டாளர்களின் முதலீட்டு முடிவுகளைத் தலைகீழாக மாற்றிவிடக் கூடும்.
6 minute ago
10 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
14 minute ago
1 hours ago