2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

பங்குச் சந்தையில் புத்திசாலி முதலீட்டாளரைச் சராசரி முதலீட்டாளரிடமிருந்து பிரிப்பது என்ன?

Editorial   / 2018 மே 30 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபாயங்களை எதிர்கொள்ளாமல் எதிலும் வெற்றி பெற இயலாது. அதிலும் நிதித்துறை என்பது திமிங்கிலங்கள் நிறைந்த கடலில் நீச்சல் பழகுவதைப் போன்றது.

இங்கு சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நம்முடைய முதலீடு முழுவதும் காற்றில் கரைந்துவிடும். இதை உணர்த்தும் விதமாகப் ‘பங்குச்சந்தை முதலீடுகள், சந்தை உபாயங்களுக்கு உட்பட்டது’ என்கின்ற சொற்றொடர் புழக்கத்தில் உள்ளது. இந்தச் சொற்றொடரின் உண்மையான அர்த்தம், மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. இருப்பினும் ஒரு புத்திசாலி முதலீட்டாளர், இத்தகைய அபாயத்திலும் வெற்றியை நிச்சயம் பறித்துவிடுவார். அவர் ஒரு பொழுதும் பங்குசந்தையை விட்டு வெளியேறமாட்டார்.  
சந்தையில் நீடிப்பது மிகவும் எளிதானதா?  

ஆனால், அவ்வாறு சந்தையில் நீடிப்பது மிகவும் எளிதானதா? ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்கப்பட்ட பங்கு, சிறிது ஏறத் தொடங்கும். அதன் பின்னர், எந்தவிதமான காரணமுமில்லாமல் கீழே இறங்கத் தொடங்கும். அது எவ்வளவு காலம், குறைந்த விலையில் விற்பனையாகும் என்பது ஒருவருக்கும் தெரியாது.

இந்தநிலையில் ஒரு சராசரி முதலீட்டாளர், நிச்சயம் பதற்றமடைவார். அந்தப் பதற்றத்தில் கண்டிப்பாகப் பல்வேறு தவறுகளை மேற்கொள்வார். அதாவது, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிட்டுச் சந்தையில் இருந்து வெளியேற முடிவெடுப்பார். 

பங்குகளை விற்றாலும் அதிலும் நஷ்டமே; பதற்றமே தவறுகளுக்குக் காரணமாகின்றது. ஆனால், ஒரு புத்திசாலி முதலீட்டாளர் பங்குகளை விற்று சந்தையை விட்டு வெளியேறி விடுவாரா? கண்டிப்பாக மாட்டார்.  

பங்குசந்தைகளில் புழங்கும் அனைவரும் எதிர்கொள்ளும் இந்தச் சூழ்நிலை, ஒரு புத்திசாலி முதலீட்டாளரைச் சராசரி முதலீட்டாளரிடமிருந்து பிரிக்கின்றது. எனினும் இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்களுடைய பங்குகள் இறங்கு முகத்தில் இருந்தாலும், நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. உங்களுக்கு அதிக வருவாய் வேண்டுமெனில் நீண்டகால நோக்கில் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் முன்னர் பங்குச்சந்தையைப்பற்றிய சில அடிப்படை விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  

பங்குசந்தையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அலைகளின் வடிவத்தில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து இருக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு வலுவான பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கும்பொழுது, சந்தை இறங்கத் தொடங்கலாம். அதன் காரணமாக உங்களுக்குக் கண்டிப்பாக இழப்பு ஏற்படும். அத்தகைய சூழ்நிலை உங்களுக்குச் சங்கடமாக இருக்கலாம். ஆனால், பங்குசந்தையில் அலை நிலைத்திருக்கும்வரை அந்தப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்பவரே ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளராவார். 

இத்தகைய வீழ்ச்சியின் போது, சந்தையில் நீங்கள் பார்க்கும் இழப்புகள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். நீங்கள் அந்தப் பங்குகளை விற்பனை செய்யாதவரை உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது, மற்றும் உங்களுடைய பங்குகள் அனைத்தும் உங்களிடமே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

ஏற்றதாழ்வுகள் மிகவும் சாதாரணமானது  

பங்குசந்தையில் ஏற்றங்கள் மற்றும் வீழ்ச்சிகள் சாதாரணமானவை. சந்தையில் ஏற்ற இறக்கங்களின் போது, முதலீடு செய்த பலர் அதிக பயனடைந்தவர்கள் என்று பங்குச்சந்தை வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலான முதலீட்டாளர்கள் அச்சத்தின் காரணமாகப் பங்குச்சந்தையிலிருந்து விலகிச் செல்கிறார்கள். ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளர், சிறிது காலம் காத்திருந்து பங்குகளின் போக்கைப் பின்பற்றி இலாபம் ஈட்டுவார்கள். 

சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒரு பொழுதும் சம்பந்தமே இருப்பதில்லை. எனவே, சந்தையின் ஏற்ற இறக்கங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.  

ஒரு முதலீட்டாளர் எப்பொழுதும், குறுகியகால அதிவேகமான இலாபங்களைக் கவனத்தில் கொள்ளக்கூடாது. பங்குசந்தையானது அடிக்கடி கீழிறங்கி முதலீட்டாளர்களுக்குத் தவறான அறிகுறிகளை வழங்குகின்றது. இது சந்தை மறுசீரமைப்பு என வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பின் போது, பங்குச்சந்தையைவிட்டு வெளியேறுபவர் கண்டிப்பாக இழப்புகளைச் சந்திக்க வேண்டும். 1987ஆம் ஆண்டில் பங்குசந்தையில் ‘பிளாக் திங்கள்’ அன்று ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் மட்டும் சந்தையானது தன்னுடைய மதிப்பில் சுமார் 20 சதவீதத்தை இழந்தது. இருப்பினும் இத்தகைய தீவிர சூழல்களிலிருந்து சந்தை மேலேறி வந்தது. இத்தகைய மறுசீரமைப்பு எப்போதாவது நிகழ்கின்றது.  

நீண்டகால ஆதாயங்களை நோக்கி முன்னேறுங்கள்  

முதலீட்டாளர்கள் எப்போதும் நீண்டகால ஆதாயங்களில் கவனம் செலுத்த வேண்டும். சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்துக்கு ஏற்ப, நீங்கள் உங்களுடைய முடிவுகளை மாற்றக்கூடாது. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளில் முதலீடு செய்வது என்பது மிகவும் முக்கியமானது. 

அதிலும் குறிப்பாக ஏற்றதாழ்வுகள் நிறைந்த சூழ்நிலைகளில் இது மிகவும் முக்கியமானது. எனினும் உங்களுடைய பங்குகள் ஒரு குறிப்பிட்ட மற்றும் உங்களுக்குத் தேவையான மதிப்பை அடைந்தால் அதை விற்றுவிட்டு வெளியேற உங்களுக்கான வெளியேறும் திட்டங்கள் திட்டமிடப்பட்டுத் தயாராக இருக்க வேண்டும். 

ஒரு பகுப்பாய்வு, சந்தை உயர்ந்த நிலையில் இருக்கும்பொழுது, அந்தப் பங்குகளில் முதலீடு செய்யத் தயாராக இருக்கமாறு முதலீட்டார்களை அறிவுறுத்துகின்றது.  

பல்வகைப் பங்குகளில் முதலீடு செய்க  

முதலீட்டாளர்கள் எப்பொழுதும் வேறுபட்ட அல்லது பல்வேறு துறைப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சந்தையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் நிகழும். அப்பொழுது அதற்கேற்றபடி பங்குகளின் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் கண்டிப்பாகக் காணப்படும். நீங்கள் பல்வேறு தொழிற்றுறை அல்லது துறைகளில் உள்ள பங்குகளில் முதலீடு செய்திருந்தால், சந்தையின் ஏற்றதாழ்வுகள் உங்களை மிகவும் பாதிக்காது. உங்களுடைய போர்ட் போலியோவில் உள்ள பல்வேறு பங்குகளின் கலவையானது உங்களுக்கான மேம்பட்ட வருவாயையும் ஒரு வலுவான போர்ட்ஃபோலியோவை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.  

மொத்தமாக சந்தையின் போக்குகளை எவராலும் கணிக்க முடியாது. பங்கு முதலீடுகளுக்குப் பொறுமை மிகவும் முக்கியம். குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக்கண்டு பயப்படாமல் பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்தால், உங்களுக்கான வெகுமதி கண்டிப்பாகக் கிடைக்கும். ஒரு நீண்டகால இலக்கைவைத்து, நிதி ஆலோசகரின் ஆலோசனையின்படி பங்குச்சந்தையில் நீங்கள் மேற்கொள்ளும் முதலீடு, எப்பொழுதும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். எனவே, பங்குச்சந்தையை விட்டு ஒருபொழுதும் ஓடி விடாதீர்கள்.  

நன்றி: இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .