2020 ஜூலை 11, சனிக்கிழமை

மூலதன முதலீட்டு மூலங்கள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூன் 03 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதத்தில்,   இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதச் சம்பவங்கள் காரணமாக, இலங்கையின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வியலும் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

துணிகர வணிக முயற்சிகளையோ, இடநேர்வு கொண்ட முதலீடுகளையோ மக்கள் சிந்தித்து பார்க்காதநிலை ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமற்றப் பொருளாதார சூழ்நிலை, பல்வேறு பாதகமான பொருளாதார காரணிகளின் காரணமாக, மக்கள் தமது சேமிப்பைப் பாதுகாத்துக்கொள்ளவே முயல்கின்றார்கள்.

இதனால், நிச்சயமற்றுள்ள பொருளாதாரம், போதுமான முதலீடுகளற்ற நிலையில், மேலும் மோசமாகப் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவேதான், இலங்கை மத்திய வங்கி கூட, மக்களின் இந்தப் போக்கில் மாற்றத்தைக் கொண்டுவரும் பொருட்டு, வட்டி வீதங்களில் மாற்றங்களைச் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறது.   

இவ்வாறான நிலையில், சாதாரண மக்கள் தமது சேமிப்புகளை இடநேர்வு குறைவான முதலீடுகளில், ஆபத்துக் குறைந்த முறையில், எவ்வாறு முதலீட்டை மேற்கொள்ளலாம் என்பதனை இங்கே பார்க்கலாம்.   
அரச பிணையங்கள்   

முதலீட்டு மூலங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு மூலமாக இதைக் குறிப்பிட முடியும். அரசாங்கத்தால் தனது தேவைகளுக்கும், நாட்டின் அபிவிருத்திக்குமென வெளியிடப்படுகின்ற பிணையங்களே இவையாகும். இவற்றின் முதிர்ச்சியின் அடிப்படையில், குறுங்கால, நீண்டகால முதலீடுகள் என இவை வகைப்படுத்தப்படும்.

குறுங்கால முதலீடுகள், திறைசேரி உண்டியல் எனவும் நீண்டகால முதலீடுகள் திறைசேரிமுறி, இலங்கை அபிவிருத்தி முறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.  

திறைசேரி உண்டியல் அதிகபட்சமாக 91,182, 364 நாள்களை முதிர்வுக் காலமாகக் கொண்ட குறுகிய முதலீடாகும். முதன்மைச் சந்தையிலோ அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட எந்தவொரு வங்கியிலும் இைதக் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என்பதுடன், முதிர்ச்சிக் காலத்தில் மொத்த வருமானத்தின் 10% Withholding வரியாக அறவிடப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்சமயம் 364 நாள்களை முதிர்வாகக் கொண்ட திறைசேரி முறிகளுக்கு, சராசரி வருடாந்த வட்டிவிகிதமாக 10.47 % வழங்கப்படுகிறது.   

திறைசேரி முறிகள், குறைந்தது 2 வருடத்தையும், அதிகூடியது 20 வருடங்களை முதிர்வு காலமாகக் கொண்டதாகவுள்ளது. இதையும், திறைசேரி உண்டியலை கொள்வனவு செய்வது போல, கொள்வனவு செய்துக்கொள்ள முடியும். இதற்கான வட்டி வருமானம்,  திறைசேரி முறிகளின் முதிர்வு காலத்தின் அடிப்படையில் வேறுபடும். தற்போதைய நிலையில் 10 வருட முதிர்வுகாலத்தைக் கொண்ட திறைசேரி முறிகளுக்கு சராசரியாக 11.5% வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. இதற்கும் முதிர்ச்சி பருவத்தில் 10% Withholding வரியாக அறவிடப்படும்.   

அரச பிணையங்கள் 100% அரச உத்தரவாதத்தைக் கொண்ட அபாயநேர்வு குறைவான அல்லது இல்லாத முதலீடுகளாக உள்ளமையால், இவற்றுக்கான வருமானமும் சந்தையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும்.   

அலகு நிதியங்கள்   

அலகு நிதியங்கள், மற்றுமொரு வகையான முதலீட்டு மூலங்களாக உள்ளது. முதலில் அலகு நிதியங்கள் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதாரணமான ஒருவரால் மிகப்பெரிய சொத்து ஒன்றை கொள்வனவு செய்ய முடியாதவிடத்து, நண்பர்களுடன் சேர்ந்து ​அைதப் பகிர்ந்து கொள்வனவு செய்ய முடியும். பின்பு, எப்போது அதன் பெறுமதி அதிகரிக்கிறதோ, அப்போது அதனை விற்பனை செய்து அதன் இலாபத்தையும், முதலீட்டையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது போல, கூட்டாக வேறுபட்ட அபாயநேர்வைக் கொண்ட பங்குகள், அரச பிணையங்கள் என்பவற்றை இணைத்து அலகுகளாக முதலீடு செய்யும் முறை இதுவாகும். இதன்போது, உங்கள் முதலீட்டின் மீதான அபாயநேர்வை சமப்படுத்திக்கொண்டு முதலீடு செய்துக்கொள்ள முடியும்.   

உதாரணமாக, வருமானம் உழைக்கக்கூடிய அபாய நேர்வு கொண்ட நிறுவன பங்குகள், வருமானம் குறைவான மற்றும் அபாய நேர்வு குறைவான நிறுவன பங்குகள், அரச பிணையங்கள் என அனைத்திலும் அலகு நிதிய நிறுவனங்கள் முதலீடு செய்யும். ஆனால், அவை எல்லாவற்றையும் உள்ளடக்கி,  அபாயநேர்வை சமப்படுத்தக்கூடிய அலகுகளாக, அந்த முதலீடுகளை முதலீட்டாளர்களுக்குச் சந்தை பெறுமதி அடிப்படையில் அவை வழங்கும். இதன்போது, முதலீட்டாளர் தனது அபாயநேர்வை குறைத்துக்கொள்ள முடிவதுடன், தொடர்ச்சியாக வருமானத்தையும் ஈட்டக்கூடியதாகவும் இருக்கும்.   
செல்வ மேலாண்மை   

அண்மைய காலத்தில் இலங்கையில் பிரசித்தம் பெறுகின்ற இன்னுமொரு சேமிப்பு சார்ந்த முதலீட்டு முறை இதுவாகும். எதிர்காலத்தை நோக்கியதான ஒரு திட்டத்துக்கு, வருமான அளவைப்பொறுத்து, சேமிப்பை நிலையாகத் தெரிவு செய்துகொண்டு சேமிக்கும் திட்டம் இதுவாகும். குறித்த சேமிப்புக்காலத்துக்கான வட்டிவீதமும் வங்கிகளை விட இம்முறையில் அதிகமாக வழங்கப்படும். கூடவே, Withholding Tax வரி சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே, சரியான கால அளவில் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்களுக்கும், நிலையான சேமிப்பை மாதமாதம் மேற்கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும், இது மிக சரியான வழிமுறைகளில் ஒன்று. சராசரியாக, செல்வ மேலாண்மைத் திட்டங்களுக்கு 10 - 15% வருட வட்டிவீதமும் வழங்கப்படுகிறது. இதுவும், அபாயநேர்வு குறைவான முதலீட்டு முறையாகும்.   

அசையும் சொத்துக்கள் மீதான முதலீடுகள்   

பணமாகவோ, வங்கிகளிலோ அல்லது உடனடிப் பணமாகவோ மாற்ற முடியாத சொத்துக்களில், முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு உரித்தான மற்றுமொரு முதலீட்டு வழிமுறை இதுவாகும். சேமிப்புக்கு ஏற்றவகையில், முதலீடுகளை மேற்கொண்டு, சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப, வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். 

உதாரணமாக, தங்கம் மீதான முதலீடு - தங்கம் விலைகுறைவான காலத்தில் கொள்வனவு செய்து, விலை அதிகரிக்கின்றச் சந்தர்ப்பத்தில் விற்பனை செய்கின்ற எளிய முறைமை இது.   

மோட்டார் வாகனம் மீதான முதலீடு - இலங்கையின் அதிகரித்து செல்லும் மோட்டார் வாகன வரி, கேள்வி நிலை என்பன இந்த சந்தையை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும், இரண்டாம் சந்தையைக் கொண்ட மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்யும்போது, முதலீட்டு இலாபத்தை பெறக்கூடியதாக அமையும்.   

இதைத் தவிர்ந்து பல்வேறு வகையான முதலீடுகள் சந்தையில் உள்ளன. உதாரணத்துக்கு நிலையான சொத்துக்கள். ஆனால், அவற்றுக்கு மிகப்பெரிய அளவிலான முதலீடு அவசியமாகும். எனவே, மிகச்சிறிய பாதுகாப்பான முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்ளுவதே தற்காலத்தில் அவசியமாகும். சாதாரணமான ஒருவராகவுள்ள உங்கள் கைகளிலுள்ள பணத்தை வருமானம் தரக்கூடிய, மிகப்பாதுகாப்பான முதலீடுகளில், முதலீடு செய்ய மேற்கூறிய முதலீட்டு முறைகள் பொருத்தமானவையாகும். 

இதன்மூலமாக,உங்கள் சேமிப்பு,  உங்கள் கைகளிலுள்ள பணமானது பொருளாதாரத்துக்கு முதலீடாக பங்களிப்பு செய்வதுடன், உங்களுக்கும் மேலதிக வருமானத்தினை பெற்றுத்தருவதாக அமையும்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .