2020 ஜூலை 11, சனிக்கிழமை

வலுவிழந்துள்ள பொருளாதாரமும் சுற்றுலாத்துறையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூன் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்றப் பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக, நாட்டின் பொருளாதாரமானது மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் நிதித்திறன், வெளிநாட்டு வருமானம் சுற்றுலாத்துறை, வெளிநாட்டு கடன்கள், சர்வதேச வர்த்தகம் என்பன  நலிவடைந்துள்ளது. இந்த நிலையைச் சீர்ப்படுத்தவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், குறுங்காலப் பொருளாதாரத் திட்டங்களும் சர்வதேச நிதியும் அவசியமாகிறது.

உயித்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னதாக, நாட்டின் பொருளாதாரமானது மிகப்பாரதூரமாகப் பாதிப்படைந்துள்ளது. அதிலும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னணியிலுள்ள நிதியியல் செயற்பாடுகள் இலங்கையின் நிதியியல் சமநிலைக்கே சவால் விடுமளவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன்விளைவாக, நாட்டின் பொருளாதார, நிதியியல் செயற்பாடுகளின் சமநிலையானது மிகப்பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.

சென்மதிநிலுவை மிகைநிலை கானல்நீரானது 

ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக, நாட்டின் சுற்றுலாத்துறை, ஏற்றுமதித்துறையில் காணப்பட்ட முன்னேற்றகரமான வளர்ச்சியானது, சென்மதிநிலுவைப் பற்றாக்குறையை எதிர்காலத்தில் போக்கக் கூடியதாகக் காணப்பட்டது. ஆனாலும், இந்த எதிர்பார்ப்பு, தற்போது கானல்நீராகிப் போயுள்ளது. இதன்காரணமாக, இவ்வாண்டு இலங்கையின் வெளிப்புற நிதிப் பாய்ச்சலின் விளைவாக எழக்கூடியப் பாதிப்புக்களை குறைப்பதென்பது சாத்தியமற்றதாக மாறியுள்ளது. 

சுற்றுலாத்துறை வருமான வளர்ச்சி, தேறிய மூலதன உட்பாய்ச்சல், தேறிய ஏற்றுமதி அதிகரிப்பு, இறக்குமதி கட்டுப்பாடு, உணவு இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பச் சேவைகள் மூலமாக அதிகரிக்கும் வருமானம் ஆகியவை, நாட்டின் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முக்கியக் கட்டமைப்புக்களாகக் கருதப்பட்டன. ஆனாலும், தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னதாக, இவற்றை எதிர்பார்க்க முடியாத நிலையில், இலங்கையின் சென்மதி நிலுவையானது பற்றாக்குறை நிலையை நோக்கி நகர்வதைத் தடுக்கவியலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, நாட்டின் பொருளாதாரச் சமநிலையைப் பேணிக்கொள்ளும்பொருட்டு, இலங்கையானது, சர்வதேச நிதிகளை, கடனாகவோ அல்லது நன்கொடையாகப் பெற்றுக்கொள்வதே, தற்போது எஞ்சியுள்ள மாற்றுவழியாக உள்ளது. இதன்போது, இலங்கை அரசாங்கமானது, மிகக்குறைந்த வட்டி வீதங்களில் கடனைப் பெற்றுக்கொள்ள முனைப்பைக் காட்ட வேண்டும். இல்லையெனில், எதிர்கால கடன்சுமையானது, எப்போதுமே தீர்த்துக்கொள்ள முடியாததாக அமைந்துவிடும்.

சுற்றுலாத்துறை 

கடந்த ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியிலும், நாட்டின் சுற்றுலாத்துறையானது, எதிர்பார்க்காத வளர்ச்சியான 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியை எட்டியிருந்தது. இது, இலங்கை சுற்றுலாத்துறையானது, அரசியல் குழப்பச் சூழ்நிலைகளிலிருந்து மிகவிரைவாக மீட்சி பெற்றதையே எடுத்துக்காட்டியிருந்தது.

இதன் அடிப்படையில், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வகையானது, 2019ஆம் ஆண்டில், 2.5 மில்லியனைத் தாண்டுமென எதிர்பார்க்கப்பட்டதுடன், அதன் மூலமாக, சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை, நாட்டுக்கு வருமானமாகக் கொண்டுவரவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள நிலவரத்தின் பிரகாரம், இலங்கை அரசாங்கமானது, குறைந்தது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களையே வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இது, இலங்கையின் வருமானத்தில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை, நேரடியாக ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், பெரும்பாலான நாடுகள்,  இலங்கை மீதான பயணக்கட்டுப்பாடுகளில் விதித்திருந்த இறுக்கமான நடைமுறைகளைத் தளர்த்தி வருகின்றபோதும், நாட்டுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது, எதிர்பார்த்த மட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்த நிலை, சீரடைவதற்கு, குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய விளைவுகளின் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறையைத் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகள், உணவு விடுதிகளென்பன நேரடியாக பாதிப்புள்ளாகியுள்ளதுடன், இந்தத் துறையைத் தங்கியிருந்த திறனற்ற ஊழியப்படை (Unskilled Workers) மிகப்பெருமளவில் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளதுடன், வருமானமற்ற நிர்க்கதி நிலையை அடைந்துள்ளது. இதன்காரணமாக, இலங்கையின் அடிப்படை மக்களின் வாழ்வாதார நிலையானது, மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.

இலங்கை மீதான முதலீடுகள் 

தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதில் தயக்கத்தை வெளிப்படுத்துவது இயல்பானது. குறிப்பாக, கடந்த வருடத்தின் அரசியல் நெருக்கடி நிலைமைகளின்போது, ஆரம்பித்த இந்த முதலீட்டு தயக்கமானது, பயங்கரவாதத் தாக்குதல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை தொடர்வதற்கு வாய்ப்புள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் தொடர்ச்சியாக நிலவிவரும் குழப்பநிலைகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பெரிதும் அக்கறை காட்டாத நிலையே காணப்படுகிறது.

அத்துடன், அரசியல் ரீதியாக, இவ்வருடத்தின் இறுதியில் மிகப்பெரும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், புதிய முதலீடுகள் நாட்டுக்குள் வருவதென்பதும் குதிரைக் கொம்பாகவேயிருக்கும்.

பொருளாதார இழப்புகள் 

பயங்கரவாத, இனமுரண்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை மீளமைக்கும் செயற்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளென்பன, அரசாங்கத்தின் பாதீட்டில் முன்கூட்டியே உள்ளடக்கப்படாத செலவீனங்களாகும்.

இந்தச் செலவின் ஒருபகுதியானது, காப்புறுதிச் செயற்பாடுகள், நன்கொடைகள் மூலமாகப் பூர்த்தி செய்யப்பட்டாலும், பெரும்பகுதியானது அரசினாலேயே பூர்த்திசெய்யப்படவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, திட்டமிடப்படாத செலவீனமானது, ஒருபகுதியால் அதிகரிக்கும் அதேவேளையில், திட்டமிடப்பட்ட வருமானங்கள் நாட்டுக்குள் வராத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதன்காரணமாக, நாட்டின் பணப்பாய்ச்சல் பற்றாக்குறை ஏற்படுவதுடன், பொருளாதார இழப்புக்களும் அதிகமாகிறது.

எனவே, இதைத் தவிர்க்க, அரசாங்கமானது, செலவீனக் கட்டுப்பாடுகளையும் புதிய வரிவிதிப்புகளையும் மேற்கொள்ளுவது தவிர்க்க முடியாதவொன்றாகவுள்ளது. எனினும், இந்த வருட இறுதியில் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற்கொண்டு, இந்த வரிவிதிப்புகளை, தற்போதைய அரசாங்கமானது நடைமுறைப்படுத்தாதநிலை காணப்படக்கூடும். ஆயினும், அரசாங்கமனது, இவ்வாறான வரிவிதிப்பை மேற்கொள்ளாதபோது, அது, அரசகடன் வழியாக, மறைமுகமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்.

இலங்கையின் நம்பிக்கை

பல்வேறு அசம்பாவிதங்கள் காரணமாக, நாட்டின் பல்வேறு பொருளாதார வருமான வழிமுறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும் தேக்கநிலையை அடைந்துள்ளது. ஆயினும், இந்தப் பாதகக் காரணிகள் காரணமாக, எவ்விதமான பாதிப்புக்களுமில்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைப்  பலப்படுத்தும் வகையில், பல்வேறு பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்ந்தும் நாட்டின் வருமானத்துக்குப் பங்களித்து வருகின்றது.

குறிப்பாக, நாட்டின் பாரம்பரிய பொருளாதாரப் பங்களிப்புத் துறையான விவசாயத்துறை, தற்போதைய நிலையில், நாட்டின் வருமானத்துக்கும் பொருளாதாரத்துக்கும் மிகச்சிறந்தப் பங்களிப்பை வழங்குகிறது. 

இவ்வாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட மிகச்சிறந்த விளைச்சல் காரணமாக, நாட்டின் அரிசி இறக்குமதிக்கான தேவை குறைவடைந்துள்ளதுடன், உள்நாட்டு தேவையும் தன்னிறைவாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இவ்வாறான தொழில்முறைகளே நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாகவுள்ளது. எனவே, நாட்டின் புதிய வருமான மூலமான சுற்றுலாத்துறைக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை, இந்த தொழிற்றுறைகளுக்கும் வழங்கவேண்டியது அவசியமாகிறது.

சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, தேசிய ரீதியாக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலானது,  பணம் செலுத்தும் சமநிலை,  வெளி நிதிநிலை, நிதி விளைவு ஆகியவற்றில் ஒரு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்ட இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களின் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க, சர்வதேச நிதியுதவி அவசியமானதாகவுள்ளது.

கையிருப்பிலுள்ள பணம், தற்போது கிடைக்கப்பெறும் சர்வதேச உதவி முயற்சிகளானவை, வரவிருக்கும் மாதங்களில் இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்தும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் நாட்டின் முக்கிய அத்தியாவசிய இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மட்டுமே போதுமானதாகவுள்ளது.

எனவே, நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தப் பொருத்தமான மூலோபாயங்களும் நிதி உட்பாய்ச்சலும் அவசியமாகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .