வெளிநாட்டு மீள்கடனில் சிக்கித்தவிக்கும் பொருளாதாரம்

இலங்கையின் பிரசித்திபெற்ற தேவாலயங்கள் மீதும், உல்லாச விடுதிகள் மீதும் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் இலங்கை மக்களும் சரி, பொருளாதாரமும் சரி இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலைமையே காணப்படுகின்றது.

குறிப்பாக, இத்தகைய தாக்குதலுக்குப் பின்பு, தொடர்ச்சியாக வெளிவரும் தகவல்களும், பாதுகாப்புச் செயல்பாடுகளும் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், வணிகங்கள், முதலீடுகளில் தேக்க நிலைையயும் ஏற்படுத்தியுள்ளது.  

இம்முறை 2019ஆம் ஆண்டுக்கான பாதீடானது, அரசியல் குழப்பநிலைமைகள் காரணமாக, மார்ச் மாதமளவிலேயே, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. இதன்போது உள்நாட்டு வருமானத்திலும் சென்மதி நிலுவையிலும் சாதகத் தன்மையைப் பேணும்வகையிலும் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. 

ஆயினும், பாதீடு நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட குறுகிய காலத்தில் நிகழ்ந்த இந்த அசாம்பாவிதச் சம்பவங்கள் காரணமாக, தற்போதைய நிலையில் சென்மதி நிலுவையில் சாதகத் தன்மையைப் பேணிக்கொள்ளுவதென்பது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. இதன்காரணமாக, நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பை அதிகரிக்கும் திட்டமும் இவ்வாண்டு மீளச்செலுத்தத் திட்டமிடப்பட்ட கடன் மீள்செலுத்துகையும் மிக அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, இந்த அசம்பாவித நிலைமைகள் நாட்டின் பாதீட்டையும் நிதியியல் திட்டங்களையும் மீளாய்வு செய்யவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.  

வர்த்தகப் பற்றாக்குறை

நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதியில் மாற்றங்கள் ஏற்படக் கூடியதாக மாற்றமடைந்துள்ளது. இதன்போது, எதிர்வரும் சிலவருடங்களில் அடையப்படக்கூடியதென எதிர்பார்க்கப்பட்ட சென்மதி நிலுவையில், 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மிகை நிலையென்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, நாட்டின் இறக்குமதிகளை அசாதாரண சூழ்நிலைகளைக் காரணமாகக் கொண்டு பாரிய அளவில் கட்டுப்படுத்துவதுடன், ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான அரச உதவிகளையும் வழங்கவேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைத் தீர்க்கவியலாது போகும்.

உண்மையில், இதில் அரசாங்கமும் பூரண கவனம் செலுத்தாதவிடத்து, இவ்வாண்டில் செலுத்தவேண்டிய கடனுக்கு மீளவும் புதியக் கடன்களைப் பெறவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுவதுடன், மீளவும் இலங்கை கடனெனும் கடலில் மூழ்க வேண்டிய நிலையை எதிர்கொள்ள நேரிடும்.  

இலங்கையின், 2018ஆம் ஆண்டுக்கான 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்களான வர்த்தகப் பற்றாக்குறையானது, கடந்த ஆண்டில் உழைக்கப்பட்ட இலங்கையரின் வெளிநாட்டு வருமானமான 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள், சுற்றுலாத்துறை மூலமாக ஈட்டப்பட்ட சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஆகியவற்றின் மூலமாக ஈடுகட்டப்பட்டிருந்தது.  

அதுபோல, 2017ஆம் ஆண்டிலும், இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையானது 9.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தபோது, இலங்கையர்களின் வெளிநாட்டு வருமானமான 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலமாகவும் உல்லாச பிரயாணிகளின் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் மூலமாகவும் ஈடுசெய்யப்பட்டிருந்தது.  

2017, 2018ஆம் ஆண்டில் வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்திக்க பயன்படுத்திய இலங்கையரின் வெளிநாட்டு வருமானம்,  சுற்றுலாத்துறையின் வருமானத்தின் மீதமாக சுமார் 2.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றது. எனினும், குறித்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு மீதமாக கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்பட்ட வருமானம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  

எனவே எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட, மிகக்குறைவான வருமானமே கிடைக்கப்பெற்றதன் விளைவாக, நாட்டின் மீளச்செலுத்தவேண்டிய கடனுக்கான நிதியில், குறைபாடு ஏற்பட்டிருந்தது. அத்துடன், இந்தக் குறைபாடு, 2019ஆம் ஆண்டில் இடம்பெறும் நிகழ்வுகளால் மேலும் அதிகரிக்ககூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது இலங்கை அரசாங்கம் வேறுவழியின்றி அதிக வட்டிவீதத்தில் கடனைப் பெற்று தனது பழைய கடனை மீளச்செலுத்தும் நிலையினை உருவாக்கும். எனவே, இதைத் தவிர்ப்பதற்கு வர்த்தகப் பற்றாக்குறை அளவை அல்லது சென்மதி நிலுவை தொடர்பான செலவீனங்களைக் குறைக்க வேண்டியது அவசியமாகிறது.  

வெளிநாட்டுக் கடன்கள் 

தற்போதைய நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டிருப்பது தெளிவாகவே உள்ளது. இந்த நிலை குறைந்தது குறுகிய காலத்துக்கேனும் தொடர்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. இதன்காரணமாக, 2019ஆம் ஆண்டில் மீளச்செலுத்தவேண்டியக் கடனான சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அத்தோடு, 2020ஆம் ஆண்டிலும் இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடனின் அளவானது மிகப்பெரியதாக உள்ளது. எனவே, இவற்றைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசாங்கமானது தனது வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், மீளவும் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில், உலகளாவிய ரீதியில் வெளிநாட்டு கடன்களுக்கான வட்டிவீதங்களும் உயர்வாக உள்ளநிலையில், பல்வேறு விட்டுக்கொடுப்புகளைச் செய்தே இலங்கை அரசாங்கம் கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையொன்று உருவாகக்கூடும்.  

இலங்கையின் இறக்குமதி 

இலங்கையின் இறக்குமதியானது வருடம்தோறும் மிகப்பாரிய அளவில் அதிகரித்துச் செல்லுகிறது. அதிலும், ஏற்றுமதியை விடவும் பன்மடங்கு இறக்குமதி அதிகரிப்பதால், இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டில் இலங்கையின் இறக்குமதி வீதமானது 22.4% ஆகும். இதில் உணவு சார்ந்த இறக்குமதி அளவு மாத்திரம், 10.3 சதவீதமாகும். கடந்த கால இறக்குமதிகளை நாம் ஆய்வு செய்கின்றபோது, இலங்கையில் மிக அடிப்படையான மட்டுமல்லாது ஆடம்பர உணவுப் பொருள்களின் இறக்குமதியும் அதிகரித்துகொண்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது.

இதன்போது, குறித்த ஆடம்பர இறக்குமதிகளுக்கு நம்மவர்கள் செலுத்தும் வெளிநாட்டு வரிகளும் அதிகமாகவுள்ளதால், இலங்கையின் இறக்குமதி செலவீனங்கள் தானாக அதிகரிக்கிறது. அத்துடன், கடந்த காலங்களில் இலங்கையானது, மிக அதியுயர்ந்த விலையில், எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது.

2018இல் மாத்திரம் மொத்த இறக்குமதியில் எரிபொருளின் இறக்குமதியானது, 18.6% மாகவுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்கள், உள்நாட்டு அபிவிருத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்குக் காரணமாக அமைந்தபோதிலும், தவிர்க்க முடியாதவகையில் இந்த மாற்றங்கள் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிப்பதில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. 

குறிப்பாக, இலங்கையின் இறக்குமதியானது 2017ஆம் ஆண்டில் 21 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்து 2018ஆம் ஆண்டில் 22.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 2017இல் 9.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க காரணமாகியுள்ளது.  

எனவே, குறித்த இறக்குமதிகள் தொடர்பிலும், அந்த இறக்குமதிகளுக்கான மாற்றீடு தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியது மிக அவசியமாக மாறியுள்ளது. மாற்று எரிபொருள் பயன்பாடு, ஆடம்பர உணவு உட்பட தேவையற்ற இறக்குமதிகளின் மீதான கட்டுப்பாடு அல்லது சர்வதேச நாடுகளுடன் கலந்தாலோசித்து, இறக்குமதி நலன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாமிருப்பதை இது நமக்கு உணர்த்தியுள்ளது.  

இவற்றுக்கு மேலாக, கடந்த இரண்டு வருடங்களின் இறக்குமதியை ஆய்வு செய்கின்றபொது வாகனங்கள், தங்கத்தின் இறக்குமதியானது மிக அதிகளவில் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி சும்மார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், தங்கத்தின் இறக்குமதி சுமார் 0.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறது.

இவற்றில் தங்கத்தின் இறக்குமதியானது 2017ஆம் ஆண்டில் வெறும் 0.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மாத்திரமே காணப்பட்டது. இது, 2018ஆம் ஆண்டில் மிகப்பாரிய அளவில் அதிகரித்துள்ளதுடன், 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் சுமார் 10சதவீதத்தை  வாகனம், தங்க இறக்குமதி பிடித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே தங்கம் மீதான வரிஅதிகரிப்பும், வாகன இறக்குமதி தொடர்பிலும் 2019ஆம் ஆண்டின் பாதீட்டில் கொண்டு வரப்பட்ட நடைமுறைகள் சரியானவையாகவே உள்ளன. இதேபோன்று எவ்வித சுயநலமுமின்றி ஏனைய பொருள்களின் இறக்குமதியிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகியுள்ளது.  

 இறுதியாக, பயங்கரவாத செயல்பாடுகளின் விளைவாக இலங்கையின் பொருளாதார செயல்பாடுகளில் தேக்கநிலையொன்று ஏற்பட்டுள்ளபோதும், அதனைக் கடந்து நாம் பயணிக்க வேண்டியது அவசியமாகும்.

இல்லையெனில், இதனை விடவும் மோசமான பொருளாதாரத் தாக்கங்களை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எனவே, இதனைத் தவிர்க்கும் பொருட்டும், தற்போதைய நிலையில் மிகமுக்கியமாகவுள்ள வர்த்தகப் பற்றாக்குறை பிரச்சினை,  இவ்வாண்டுக்கான கடன் மீள்செலுத்துகை விடயங்களையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகிறது.    


வெளிநாட்டு மீள்கடனில் சிக்கித்தவிக்கும் பொருளாதாரம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.