2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் காப்புறுதிதுறை பற்றிய அறிவு போதியளவு இல்லை: நிரஞ்சன்

A.P.Mathan   / 2013 மே 06 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


– ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வட பிராந்தியத்துக்கான முகாமையாளர் எஸ்.ஏ.நிரஞ்சன்


இலங்கையை பொறுத்தமட்டில் காப்புறுதிதுறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் காப்புறுதி ஒன்றை ஒரு நபர் வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த அறிவு சிறந்த நிலையில் காணப்படுகின்ற போதிலும், வட பிராந்தியத்தை பொறுத்தமட்டில் இந்த நிலை முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளது என ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் வட பிராந்தியத்துக்கான முகாமையாளர் எஸ்.ஏ.நிரஞ்சன் - தமிழ்மிரருக்கு வழங்கியிருந்த பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

2002ஆம் ஆண்டு மானிப்பாய் வீதியில் தற்போது எமது காரியாலயம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 40 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது காப்புறுதி நிறுவனம், மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு சிறந்த உதாரணமாக, நாம் எமது வர்த்தக நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும்போது பொது காப்புறுதி துறைக்கான சந்தை வாய்ப்பு 5 வீதமாக காணப்பட்டது. தற்போது இது சுமார் 65 வீதமாக அதிகரித்துள்ளது. அதுபோன்று மோட்டார் காப்புறுதி பிரிவு ஆரம்பத்தில் 10 வீதமாக காணப்பட்டது, தற்போது இது 45 வீதமாக அதிகரித்துள்ளது. ஆயுள் காப்புறுதி பிரிவு ஆரம்பத்தில் 30 வீதமாக அமைந்திருந்தது. தற்போது இது 45 வீதமாக உயர்ந்துள்ளது. மோட்டார் அல்லாத காப்புறுதி பிரிவு 2 வீதமாக ஆரம்பத்தில் காணப்பட்டது. தற்போது இது 20 வீதமாக அதிகரித்துள்ளது.

வட பிராந்தியத்தை பொறுத்தமட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், படிப்படியாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் நிதித்துறையிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. இன்று வடபிராந்தியத்தை பொறுத்தமட்டில் அநேகமாக எல்லா வங்கிகளும் தமது கிளைகளை நிறுவியுள்ளன. மேலும், நிதிசார் ஏனைய நிறுவனங்களும் தமது காரியாலயங்களை ஆரம்பித்துள்ளன. இது எமது காப்புறுதி துறையை பொறுத்தமட்டில் மிகவும் உன்னதமான நிலையாகும். ஏனெனில் இந்த நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் லீசிங் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்களின் போது, காப்புறுதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் எம்மை நாடிவருகின்றனர்.

வாகன காப்புறுதி துறையை பொறுத்தமட்டில், இன்று வட பிராந்தியத்தை பொறுத்தமட்டில், மோட்டார் சைக்கிள்களின் பாவனை அதிகரித்துள்ளது. அதுபோன்று, முச்சக்கர வண்டி மற்றும் புதிய ரக கார்களின் பாவனையும் அதிகரித்த வண்ணமுள்ளது. எனவே இவற்றின் மூலம் எமது காப்புறுதி வாய்ப்புகள் கிடைத்த வண்ணமுள்ளன.

அத்துடன், வட பிராந்தியத்தை சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு விசேடமாக, கார், வேன் போன்ற இலகு ரக வாகன உரிமையாளர்களுக்கு வேலைப்பழு மிகுந்த தமது நாளாந்த வாழ்வில், தமது வாகனங்களின் நிலை குறித்து இலவசமாக பரிசோதித்து அறிந்து கொள்ளவதற்கான வாய்ப்பொன்றை அண்மையில் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். இதன் மூலம் சுமார் 300இற்கும் அதிகமான வாகன உரிமையாளர்கள் பயன்பெற்றிருந்தனர்.

இரண்டு நாட்கள்வரை வாகன பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை நாம் கொழும்பிலிருந்து வரவழைத்து இந்த சமூக பொறுப்புணர்வு திட்டத்தை நாம் முன்னெடுத்திருந்தோம்.
இதுபோன்று, வட பிராந்தியத்தை பொறுத்தமட்டில் தற்போது வீதி அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகிறது. ஆயினும், இந்த வீதி அபிவிருத்தி பணிகளுக்கு ஏற்ற வகையில், மக்கள் மத்தியில் வீதி சமிக்ஞைகள் பின்பற்றுவது குறித்த அறிவு போதியளவானதாக இல்லை.
பிரதான வீதிக்கு எவ்வாறு குறுக்கு வீதியிலிருந்து வாகனத்தை செலுத்துவது, சைகை பலகை குறியீடுகளை பின்பற்றுவது போன்ற அறிவு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாம் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆயினும், இந்த நடவடிக்கைகள் பெருமளவில் பாடசாலை மட்டத்திலிருந்தும், சாரதி பயிலுநர் நிலையங்களிலிருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இது குறித்து போதியளவு அறிவு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படாவிடின், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே காணப்படும்.

ஜனசக்தி நிறுவனத்தை பொறுத்தமட்டில் வட பிராந்தியத்தில் நான்கு கிளைகள் காணப்படுகின்றன. இவை யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த கிளைகளின் மூலம், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் துரித கதியில் காப்புறுதி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 24 மணி நேர வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் வகையில் எமது ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசேடமாக வாகன காப்புறுதி துறையை இதில் குறிப்பிடமுடியும்.

மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் வகையில் நாம் பல சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுசரணைகளை வழங்கி வருகிறோம். அதுபோன்று, கைதடி பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் அண்மையில் நாம் எமது ஊழியர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். இந்த நிகழ்ச்சியின் போது, அவர்களுக்கு நாம் உணவு வேளைகளையும் வழங்கியிருந்தோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

சவால்கள் நிறைந்த காப்புறுதி துறையில் வட பிராந்தியத்தில் காப்புறுதி நிறுவனம் எனும் வகையில் மக்கள் மனதில் உறுதியான இடத்தை பிடித்த ஒரு காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு : ச.சேகர்





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .