2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் பொருளாதார வளர்ச்சியும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கமானது, பல்வேறு பொருளாதாரம் சாரந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அவற்றுள், இதுவரை பலரது கவனத்தை ஈர்த்திராததும் ஆனால், எதிர்காலத்தில் மிகப்பாரிய தலைவலியாக உருவெடுக்கக் கூடிய பிரச்சினையாகவும் இருக்கப்போவது, “வெளிநாட்டு நேரடி முதலீடுகள்” (Foregin Direct Investment - FDI) தொடர்பான பிரச்சினையாகும்.

இலங்கைக்கு, எதிர்பார்த்த அளவிலும் மிகக்குறைவாகவே வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கப்பெறுகின்றமை, பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவேயுள்ளது. எனவே, காலம் தாமதிக்காமல், இலங்கையால் எதிர்பார்க்கைகளுக்கு ஈடாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈட்டிக்கொள்ள முடியாதுள்ளமை ஏன் என்பது தொடர்பில் ஆராய்ந்து, தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்றால் என்ன?

ஒரு நாட்டில், மற்றொரு நாட்டின் நிறுவனமானது, உற்பத்தி அல்லது வணிகத் துறையில், நேரடியாக அந்நியச் செலாவணியை முதலீடு செய்வதாகும். இத்தகைய முதலீடு, அந்நாட்டில் உள்ளதோர் நிறுவனத்தைக் கொள்வனவு செய்வதன் மூலமாகவோ அல்லது தனது நிறுவனத்தை விரிவுபடுத்த, குறித்த நாட்டிலுள்ள நிறுவனத்துடன், இணைந்து செயற்படுவதாகவோ இருக்கலாம். இது, அந்த நாட்டு நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது பிணைப்பத்திரங்களிலோ மேற்கொள்ளப்படும் முதலீடல்ல.

இந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டை, நாம் பிரதானமாக 3 வகையாகப் பிரிக்கலாம். அவை,

  • கிடைநிலை வெளிநாட்டு நேரடி முதலீடு (Horizontal FDI) - ஒரு நிறுவனம், தனது நாட்டில் கொண்டுள்ள தொழிலை அல்லது உற்பத்தியை, மற்ற நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுடன் மீள உருவாக்குதல்.
  • அடித்தள வெளிநாட்டு நேரடி முதலீடு (Platform FDI ) - தன்னுடைய நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை செய்வதன் மூலமாக, மூன்றாம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தல்.
  • நெடுக்கைநிலை வெளிநாட்டு நேரடி முதலீடு (Vertical FDI) - தனது தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை, வெளிநாட்டு நேரடி முதலீடு மூலமாக மற்ற நாட்டில் உருவாக்குதல்.

குறைவான வெளிநாட்டு நேரடி முதலீடு

உள்நாட்டு வளங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்தி, அவற்றிலிருந்து பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள, ஒரு நாட்டின் உள்ளகத் திறமைகள் அல்லது முதலீடுகள் போதாதுள்ள நிலையில், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியமாகின்றன. ஒரு நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில், ஒரு ஸ்திரத்தன்மை உள்ளபோது மட்டுமே, நிலையான பொருளாதார வளர்ச்சியொன்றை நோக்கி, ஒரு நாட்டால் பயணப்படக்கூடியதாக இருக்கும். அந்த வகையில், இலங்கையில், கடந்த காலங்களில், பல்வேறு வெளிநாட்டு தரப்பினரும், முதலீடு செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், அவையெதுவும் நடைமுறைக்குச் சாத்தியப்படவில்லை. குறிப்பாக, இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடுகள், கடந்த பல வருடங்களாக, ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்குக் குறைவாகவும், மொத்தத் தேசிய உற்பத்தியில் 1 சதவீதமாகவுமே உள்ளது. இந்த ஆண்டின் அரையாண்டு அறிக்கைகளின் படிகூட, இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுமதியானது, 146.5 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் ஆகும். இவையே, இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் குறைவான உட்பாய்ச்சலை எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

முதலீட்டாளர் கருத்தரங்குகளும் அறிவூட்டல்களும்

இலங்கை அரசாங்கம், 2014ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களைக் கவரும் முகமாக அல்லது அறிவுறுத்தும் முகமாக, பல்வேறு கருத்தரங்குகளை நடாத்தி வருகிறது. குறிப்பாக, 2014இல் நியூயோர்க் நரிலும், 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும், 2017ஆம் ஆண்டும் மீளவும் நியூயோர்க் நகரிலும், இத்தகைய கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. அது மட்டுமல்லாது, கருத்தரங்குகளை, இலங்கையில் நடத்தி, அதன் மூலமாவது, முதலீட்டாளர்கள், இலங்கைக்கு வரும்போது, அவர்களது முதலீட்டை இன்னமும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற நோக்கத்தில், கொழும்பு பங்குச்சந்தையும், கொழும்பு பங்குகள் மற்றும் பிணையங்கள் ஆணைகுழுவும், கடந்த மாதத்திலும் ஒரு கருத்தரங்கை, கொழும்பில் நடாத்தியிருந்தன. இவற்றின் அடிப்படை நோக்கமே, இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேலும் அதிகரிப்பதாகும்.

முக்கியத்துவம்

வெளிநாட்டு நேரடி முதலீடானது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதிலும், முக்கியமானதாக இருக்கிறது. முக்கியமாக, இவ்வகை முதலீடுகள், ஒருநாட்டின் சேமிப்புக்கும் முதலீட்டுக்குமான இடைவெளியைக் குறைக்கிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள், ஒரு நாட்டின் உள்நாட்டுச் சேமிப்பின் விளைவாக, பொருளாதார வளர்ச்சியிலிருந்து வெளியேறும் நிதிக்குப் பிரதியீடாக அமைவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. எவ்வாறாயினும், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள், தனித்து நிதி முதலீடுகளாக மாத்திரமின்றி இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனவாக உள்ளன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் வெளிநாட்டு முதலீட்டுகள் முக்கியமானவை என்றாலும், பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சிக்கான நேரடி முதலீடுகளின் முக்கியத்துவம், அதைவிடவும் இலங்கையில் அதிகமாக உள்ளது. காரணம், இத்தகைய துறைகளுக்குப் பங்களிக்கும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள், நிதியாக மட்டுமின்றி முகாமைத்துவ திறனாக, பணி நெறிமுறையாக, ஒழுக்கமாக, தொழிலாளர் திறனை மேம்படுத்த உதவும் கருவிகளாக என, பல்வேறு வகைகளில் பங்களிப்புச் செய்கின்றன.

பல்தேசிய நிறுவனங்களில் திறவுகோல்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள், இலங்கையில் பல்தேசிய நிறுவனங்களின் உள்வருகைக்கு அடித்தளமிடுகின்றன. இதன்போது, நாட்டினுள் உள்நுழையும் பல்தேசிய நிறுவனங்கள், வெறுமனே நிதி, திறன், தொழில்நுட்பம் என்பவற்றை மட்டும் கொண்டுவருவதில்லை. இவற்றுக்கு மேலாக, சர்வதேச சந்தை வாய்ப்புகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது. எனவேதான், இத்தகைய அனைத்து பொருளாதார நன்மைகளையும் ஒருசேர தருகின்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள அனைத்து நாடுகளுமே முனைப்பாக உள்ளன. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் நாடாக அறியப்பட்ட சீனாதான், இன்றைய நிலையில் அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறும் நாடாக உள்ளதுடன், அதற்கு அடுத்த இடத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவரும் நாடாக, மற்றுமொரு முன்னாள் கம்னியூனிஸ்ட் நாடான வியட்நாம் உள்ளது.

இலங்கையின் எதிர்பார்க்கைகள்

2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததன் பிற்பாடாக இருந்தாலும் சரி, 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் ஆட்சிபீடமேறியபோதும் சரி, அவர்களது மிக முக்கிய இலக்குகளில் ஒன்றாக, நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலை அதிகப்படுத்துவது என்பது காணப்பட்டது. ஆனாலும், இதுவரை எதிர்பாக்கைகளுக்கு அமைவாக இலக்குகளை எட்ட முடியவில்லை. குறிப்பாக, இலங்கையின் தளம்பலான பொருளாதாரச் சூழல், வேறுபட்ட பொருளாதாரக் கொள்கைகள் என்பன, இந்த இலக்கை அடைவதில் தடைகளாக அமைந்திருந்தன. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததன்பின், குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்தாலும், இலங்கை அரசாங்கம், முதலீட்டாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, அரச ஊழல் என்பன, அவற்றைத் தக்கவைப்பதில் மிகப்பெரும் தடையாக அமைந்திருந்தன. அதுபோல, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போதும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கடந்த ஆட்சியினால் உருவாக்கப்பட்ட தவறான விம்பம் காரணமாக நிறைவேறவில்லை. தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளிலும் இலங்கை அரசாங்கம், தனது கொள்கைகளிலும் நிர்வாகச் செயற்பாடுகளிலும் இறுக்கமான கொள்கை முறையைக் கடைபிடிப்பதன் விளைவாக, மீளவும் இலக்குகளை, கடந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெறும் முயற்சியும் எதிர்பார்க்கைகளும் ஆரம்பித்திருக்கின்றன. இதனைச் சரியாக நடைமுறைபடுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர இலங்கை அரசாங்கம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வேண்டியதுடன், ஸ்திரமான பொருளாதாரக் கொளகைகளை உருவாக்குவதும் அவசியமாகிறது.

FDIஇல் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

வெளிநாட்டு முதலீட்டில் செல்வாக்குச் செல்லுத்தும் மிகமுக்கியமான காரணிகளாக, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைச் சொல்லலாம். மேலும், வரி மற்றும் மானியக் கொள்கை, ஊழியர் சட்டங்கள், தொழில் நெறிமுறைகள், சமூக மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள், உற்பத்திச் செலவீனங்கள், ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பெருளாதாரக் காரணிகள் என்பனவும், செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன. இவற்றுக்கு மேலாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இலங்கையின் அண்மைக்கால ஊழல் தொடர்பில் அதீத கவனம் செலுத்துவதன் விளைவாக, தற்போதைய நிலையில் முதலீட்டைச் செய்வதற்கு தயக்கம் காட்டும் நிலையும் உள்ளது. அத்துடன், பலமுறை வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இலங்கையின்அரச நிறுவனங்களை தனியார்மயபடுத்த முயன்றும், பல்வேறு காரணங்களால் அவைபலனளிக்காததன் விளைவும், இதில் பிரதிபலிப்பதாக உள்ளது.

செலவீனம்

இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் பெரும்பாலான முதலீட்டாளர்களின் மிக முதன்மையான நோக்கம், கிரயத்தை அல்லது செலவீனத்தைக் குறைப்பதாகத்தான் இருக்கும். ஆனால், இலங்கை இனிவரும் காலங்களில் கடந்தகாலத்தைப்போல மலிவான நாடாக இருக்காது எனக் கூறலாம். குறிப்பாக, இலங்கையை சுற்றியுள்ள நாடுகளான வியட்நாம், பங்களாதேஷ் என்பன, ஒப்பீட்டளவில் மலிவான தொழிற்படையையும் சக்தி வளத்தையும் கொண்டுள்ளன. இவை, நிச்சயமாக முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தும். இது இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு மிகப்பாரிய சவாலாக அமையும்.

உள்நாட்டுச் சந்தை

இலங்கையைப் பொறுத்தவரையில், உள்நாட்டுச் சந்தை என்பது மட்டுபடுத்தப்பட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக, இந்தியா, சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகள், தன்னகத்தே மிகப்பாரிய உள்நாட்டுச் சந்தையையும் விற்பனையையும் கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாகவே, மிகப் பிரபலமான வர்த்தக நாமம் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இலங்கைக்குப் பதில் வேறு நாட்டை, தமது முதலீட்டுக்கான இடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, இலங்கை அரசாங்கம், தனது பொருளாதாரக் கொள்கைகளில்,உள்நாட்டுச் சந்தையின் எல்லைகளை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது தொடர்பில் ஆராய வேண்டியது அவசியமாகிறது.

இறுதியாக, அமைதி, சட்ட ஒழுங்கு, வரிவிதிப்புக் கொள்கைகள் என்பவை, ஒரு நாட்டுக்கு மிக அவசியமானவை. ஆனால், அவை மட்டுமே வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவரப் போதுமானவை அல்ல. மாறாக, அரசாங்கத்தில் உள்ள வினைத்திறனற்ற பொருளாதாரக் கொள்கைகள், நிர்வாகத்திறனனற்ற நிர்வாகங்கள், ஊழல் மற்றும் தொழிற்றுறையைப் பாதிக்கும் சக்திகளின் ஊடுருவல் என்பன நீக்கப்பட்டு, அரசியல் ரீதியாக பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் பட்சத்திலேயே, எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணியைப் பெற முடிவதுடன், இலக்குகளை அடையவும் முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .