2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரூ. 72 மில்லியன் மோசடி விவகாரம்: குகவரதனும் மனைவியும் பிணையில் விடுதலை

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன், அவருடைய மனைவி கமலேஷினி குகவரதன் ஆகிய இருவரும் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில், விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் (26) காலை கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும், கல்கிஸை நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னி​லையில் நேற்று (27) ஆஜர்படுத்த ப்பட்டனர். இதன்போதே, நீதவான் இவ்விருவரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.

வீட்டுத்தொகுதியை கொள்வனவு செய்தபோது, அதற்குரிய 72 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலையை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், மேற்படி இருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

மேற்படி முறைக்கேடு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், 57 மில்லியன் ரூபாயை, பாதிக்கப்பட்ட தரப்பான யாழ்ப்பாணம், ​தெல்லிப்பழையைச் சேர்ந்த கனகசபை சற்குணநாதன் (வயது 75 ) என்ற முறைப்பாட்டாளருக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்தே, இவ்விருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்விருவரும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியமை போன்ற காரணங்களுக்காக, மேல் மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனநாயக மக்கள் முன்னணியினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.   

இந்நிலையில், அவர் வகித்துவந்த கட்சியின் உப-தலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி, இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .