2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’எந்த அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை’

ஆர்.மகேஸ்வரி   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகவும், பாரிய பங்களிப்பையும் வழங்கி வரும் மலையக மக்களின் நலனிலோ, அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவோ எந்த அரசாங்கமும் முன்வரவில்லையென, ​​ஜே.வி.பியின் எம்.பியான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.  

ஆசிய நாடுகளில் மந்த போசனை நிலையில் இலங்கை முதலாம் இடம் வகிக்கும் நிலையில், இலங்கையில் இன்று மந்த போசனையில் முதலிடம் வகிப்பது மலையக மக்களே எனக் குறிப்பிட்டார்.  

இலங்கையில் நகரங்களில் 5.6 சதவீதமும், கிராமங்களில் 7.6 சத வீதமான மக்கள் மந்த போசனைக்குள் உள்ளான நிலையில் உள்ளனர், மலையக மக்கள் 10.9 சதவீதமானோர் மந்தபோசனையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

அதேபோல் குறைமாத பிரசவமும் 27.6 சதவீதமாக மலையகத்திலே காணப்படுகிறது. அதற்கமைய சுகாதாரத்துறையிலும் மலையகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.  

அத்துடன், 1972ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்கள் 55 வருட குத்தகைக்கு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது, குறித்த பெருந்தோட்டங்களின் வீதிகள், கிணறுகள் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படாமல் ஒப்பந்தம் செய்யப்பட்டமையானது தோட்டங்களின் வீதி, குடிநீர் அபிவிருத்தியில் பிரதேச சபைகள் செயற்பட முடியாமைக்கான காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.  

156 வருடங்களாக தினக்கூலி பெறும் மலையக மக்களின் சம்பள விவகாரத்தில் 1996ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இரண்டாடுகளுக்கு ஒரு முறை செய்யப்படும் ஒப்பந்தம் மூலம் இன்று வரை 399 சதவீத சம்பள அதிகரிப்பே வழங்கப்படுகின்றது.  

1972 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை அரசு பொறுப்பேற்ற போதும், 2047 வரை பெறுந்தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.   

எனினும், மலையக தலைமைகள் பல சிறப்புச் சலுகைகளைப் பெற்று, தொண்டமான் அமைப்பு (பதனம) என்ற ஒன்றை அமைச்சரவை அங்கிகாரத்துடன் உருவாக்கி, அதன் மூலம் தொண்டமான் குடும்பமே சிறப்புச் சலுகைகளை அனுபவித்தது.  

எனவே, மலையக மக்களின் வீதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், சம்பள அதிகரிப்பை வழங்க முன் வரவேண்டும்.  

அத்துடன், தற்போது 7 பேர்ச்சஸ் காணியில் வழங்கப்பட்டு வரும் தனி வீட்டுத்திட்டத்துக்கான உறுதிகள் வழங்கப்படாமல் சாதாரண கடிதம் மூலம் வீட்டு உறுதிகள் வழங்கப்படுவதாக விஜித சுட்டிக்காட்டினார்.  

இதன்போது குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தற்போது வழங்கப்படும் உறுதிகள் தற்காலிகமானதென்றும், விரைவில் மலையக மக்களுக்கான நிரந்தர உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.  

இதனையடுத்து உரையாற்றிய விஜித குறித்த மக்களுக்கான உறுதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை, இந்த அதிகார சபை முன்னெடுக்க வேண்டுமெனவும், மலையக மக்களின் மாற்று வாழ்வாதார நடவடிக்கைக்கு மலையக பிராந்தியத்துக்கான அதிகார சபை கவனமெடுக்க வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .