2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அலைபேசி 4ஜி வேகச் சாதனை முறியடிப்பு

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தின் மிக வேகமான 4ஜி அலைபேசி இணைய வேகச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக வலைப்பின்னல் இயக்குநர் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சோதனை வலையமைப்பொன்றில், 1.9Gbps வேகத்தை (செக்கன் ஒன்றுக்கு 1.9 ஜிகா பைட்) அடைந்துள்ளதாக பின்லாந்து நிறுவனமான எலிஸா தெரிவித்துள்ளதுடன், இதுதான் பதிவு செய்யப்பட்டதில் அதிவேகமானது என்று தெரிவித்துள்ளது.

சீன தொலைத்தொடர்பு ஜாம்பவானான ஹுவாவியினால் வழங்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2Gbps வேகத்தை அண்டிய அலைபேசி வேகத்தை வழங்கியதாக எலிஸா தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், எலிஸாவின் வணிக வலைப்பின்னலின் வேகமானது, அதன் அதியுயர் வேகத்தில் ஆறிலொன்று பங்காக, 300Mbps ஆகவே உள்ளதமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள எலிஸாவின் பிரதம நிறைவேற்றதிகாரி வெலி-மற்றி மற்றிலா, வேறு எந்த வலையமைப்பாலும் இவ்வளவு வேகம் அறிவிக்கப்படவில்லை எனத் தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த பெப்ரவரியில், எந்தவொரு வலைப்பின்னல் வழங்குநர்களுடனும் இணையாத பல்கலைக்கழக ஆராய்ச்சி அணியொன்று, 5ஜி அலைபேசி வேகமான 1Tbps (செக்கன் ஒன்றுக்கு ஒரு டெரா பைட்) வேகத்தை அடைந்திருந்தது. குறித்த வேகமானது எலிஸா அடைந்த வேகத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

குறித்த அதிவேகமான அலைபேசி இணையச் சேவையானது, யதார்த்தமாக இருக்குமானால், புளூரே தரத்திலான திரைப்படமொன்றை 44 செக்கன்களில் தரவிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், நிஜவுலக வலைப்பின்னலில் இது சாத்தியமில்லை என்றே ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .