2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தியா எதிர் இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ளது. முதலிரு அணிகளுக்கிடையிலான மோதல். எனவே போட்டி தன்மையும், விறு விறுப்பும் நிச்சசயம் அதிகமாக இருக்கும். அதிலும் இந்தியா அணி எங்கு விளையாடினாலும் அவர்கள் பேசுபொருளாக மாறிவிடுவார்கள். ஒரு பக்கம் அவர்களின் அதிகமான ரசிகர்கள். இன்னொரு புறமாக அவர்களுக்கு எதிரான ரசிகர்கள்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக கருதப்படுகிறவர்கள். எனவே அந்த நிலையினை பரீட்சித்து பார்ப்பதற்கு இந்த தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது. குறிப்பாக இந்தியா அணி தனது வீரர்களை சரியாக தெரிவு செய்து கொள்ளவும், ஒரு நிரந்தர அணியினை தொடர்ச்சியாக கொண்டு செல்லவும் இந்த தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது.

இங்கிலாந்து அணி ஒரு நாள் சர்வவதேசப் போட்டிகளில் மிகவும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. அதன் காரணமாகவே முதலிடத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தியா அணியும் அதே நிலையில் காணப்பட்டாலும் அவர்கள் தங்கள் முதலிடத்தை இழந்துள்ளார்கள். இந்த தொடர் முதலிடத்தை தக்க வைப்பதற்கு இங்கிலாந்துக்கும், மீண்டும் முதலிடத்தை கைப்பற்றுவதற்கு இந்தியா அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது. இந்தியா அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகிறது. இந்தியா அணி தொடரின் மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்றாலே முதலிடத்தை தமதாக்க முடியும். இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியா அணிக்கு மரண அடி அடித்து அசுர பலத்தில் காணப்படுகிறது. 5-0 என தொடர் வெற்றியினை பெற்றுள்ளார்கள். அதில் கூடுதலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையையும் முறியடித்தார்கள். இந்த நிலையில் சிக்கியுள்ள இந்தியா அணி என்னவாகுமோ? இந்தியா மட்டும் என்ன சும்மாவா? தென்னாபிரிக்காவில் வைத்து அந்த அணியினை 5-1 என வெற்றி பெற்றுள்ளது. எனவே இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை.

இரு நாடுகளுக்குமான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் 1974 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2014 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்துக்கான இறுதி ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடருக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தது. கடந்த வருடம் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் சம்பியன் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி வரையும் இந்தியா அணி வந்த போதும் இங்கிலாந்து அணியினை சந்திக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு முக்கோண தொடர் ஒன்றில் இரு அணிகளும் விளையாடியுள்ளன.  ஆக மூன்று வருடங்களுக்கு பிறகு இரண்டு அணிகளும் இங்கிலாந்தில் சந்திக்கவுள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் இரு அணிகளுக்குமான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இங்கிலாந்து சிறப்பாக போராடிய தொடரில் 2-1 என இந்தியா அணி வெற்றி பெற்றது. சம்பியன் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி வரை இந்தியா அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் பெரியளவில் காணப்படவில்லை. ஆனால் முன்னேறினார்கள். அப்போதைய நிலையிலும் பார்க்க தற்போதைய இந்தியா அணி பலமாக காணப்படுகிறது. எனவே இந்த தொடர் கடும் போட்டி நிறைந்த ஒன்றாக இருக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

33 வருடங்களில் இரு அணிகளும் 96 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். ஐந்து போட்டிகளடங்கிய தொடரை நடத்தியிருந்தால், இரு அணிகளுக்குமான நூறு போட்டிகள் என்ற மைல் கல் தொடராக இந்த தொடர் அமைந்திருக்கும். இந்தியா அணி 52 போட்டிகளை வென்றுள்ளது. இங்கிலாந்து அணி 39 போட்டிகளை வென்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ள அதேவேளை, 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இரு அணிகளும் இங்கிலாந்தில் வைத்து 38 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இவற்றில் 18 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 15 போட்டிகளில் இந்தியா அணியும் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, ஒரு போட்டி சமநிலையிலும்,. மூன்று போட்டிகள் கைவிடப்பட்ட நிலையிலும் நிறைவடைந்துள்ளன. எனவே இந்தியா அணி இங்கிலாந்து அணியுடன் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் எனபதனை தரவு சரியாக வெளிப்படுத்துகிறது. அண்மைக்கால போட்டிகள் என பார்க்கும் போது கூட சமபலமாக காணப்பட்டாலும், இந்தியா அணி சிறிதளவு முன்னோக்கி காணப்படுகிறது.

கடந்த கால முடிவுகள் தற்போதைய தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும்  என்பதனை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் அவை இந்தப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் மிகவும் பலமாக காணப்படுகிறது. பந்துவீச்சும் அவ்வாறே. இந்தியா அணியின் துடுப்பாட்டம் இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும் போது சிறிதளவு குறைவாக தென்படுகிறது. ஆனால் இந்தியா அணியின் நட்சத்திர அந்தஸ்துள்ள அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் பலத்தின் மூலம் அந்த பலவீனத்தை அடைத்தது விடுகிறார்கள். அவுஸ்திரேலியா அடித்த அடியை பார்த்து, இந்தியா அணி அவ்வளவுதான் என நினைக்க 20-20 போட்டிகளில் நிலைமை மாறிப்போனது. இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்தியா அணி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான அணி. அதன் துடுப்பாட்ட வீரர்கள் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்றால் போல் விளையாடக் கூடியவர்கள். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியை நம்புவார்கள். இங்கேதான் அந்த வெற்றிக்கான வித்தியாசம் உருவாகும். அதிரடி கை கொடுத்தால் வெற்றி நிச்சயம். அதேவேளை கைவிட்டால் மறுபக்கம் போட்டி சென்று விடும். இந்த தொடரிலும் நிலை அதுதான். இந்த நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போகின்றவர்கள் பந்துவீச்சாளர்கள். இந்தியா அணியின் பந்து வீச்சு பலமானதாக காணப்டுகிறது. இங்கிலாந்து பந்துவீச்சிலும் பார்க்க இந்தியா அணியின் பந்து வீச்சு பலம் என கூற முடியும்.

இரண்டு அணிகளது பலம் மற்றும் பலவீனம் என பார்க்கும் போது சமநிலை காணப்படுகிறது. இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெறுகின்றன என்ற நிலை இங்கிலாந்துக்கான வாய்ப்புகளை சற்று அதிகரிக்கின்றன. இந்த தொடரை வெற்றி பெறப்போகின்ற அணி நிச்சயம் அடுத்த உலகக்கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்பலாம். தோல்வியடையுமணி நிச்சசயம் தங்களை சரியாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு அணிகளும் தங்களை சரி செய்து கொள்ளப்போகின்ற தொடர் யாருக்கென்பதனை எல்லோருமாக எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

இங்கிலாந்து அணி

ஜேசன்  ரோய், ஜொனி  பயர்ஸ்டோவ்,  ஜோ ரூட்,  ஒய்ன்  மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ்,  ஜோஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்), மொய்ன்  அலி,  டேவிட் வில்லி,  லியாம் பிளன்கெட், ஆதில்  ரஷிட்,  மார்க் வூட்,  ஜேக் போல், ரொம் குரான்,அலெக்ஸ் ஹேல்ஸ்.

 

இந்தியா அணி

 

ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி (தலைவர் ),லோகேஷ்  ராகுல், எம்.எஸ். டோனி (விக்கெட் காப்பாளர்),  தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்டியா,  புவனேஸ்வர் குமார், சித்தார்த் கோல்,  குல்தீப் யாதவ், யுஸ்வேந்த்ரா சஹால், உமேஷ் யாதவ், ஷிராஸ் ஐயர், அக்ஸார் பட்டேல், ஷார்தூள் தாகூர்

 

போட்டி அட்டவணை

முதற் போட்டி - ஜூலை 12, 2018 - இரவு 5.00 மணி, நொட்டிங்காம்

 

இரண்டாவது  போட்டி - ஜூலை 14, 2018 - இரவு 3.30 மணி , லண்டன்

 

மூன்றாவது  போட்டி - ஜூலை 17, 2018 - இரவு 5.00, லீட்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .