கின்னஸில் இடம்பிடித்த ‘Dubai Frame’

புகைப்பட சட்டம் வடிவில் டுபாயில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கட்டடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

உலக அளவில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் நகரங்களில் ஒன்றாக டுபாய் விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு பிரம்மாண்ட திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் காலீபா மற்றும் உலகின் மிக உயரமான ஓட்டல் ஜேடபிள்யூ மேரியாட் என்று பிரம்மாண்ட கட்டடங்கள் மூலமாக உலகின் கவனத்தை துபாய் ஈர்த்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது 'புகைப்பட்ட சட்டம்' வடிவிலான உலகின் மிகப்பெரிய கட்டடம் அங்கு திறக்கப்பட்டுள்ளது. டுபாய் நகரின் ஜபீல் பூங்கா அருகே இந்த பிரம்மாண்ட கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமான புகைப்பட சட்டம் போன்று உள்ளதால், இதனை 'துபாய் ஃப்ரேம்' என்று அழைக்கின்றனர்.

இந்த புகைப்பட சட்டம் வடிவிலான கட்டடம் 150.24 மீற்றர் உயரமும், 95.23 மீற்றர் அகலமும் கொண்டதாக இருக்கிறது. இரு உயரமான தூண்களில் இடைவெளியுடன் இந்த ஃப்ரேம் வடிவிலான கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், அச்சு அசலாக புகைப்பட சட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், முப்பரிமாண தோற்றத்துடன் இது காணப்படுகிறது. இந்த கட்டடத்தில் 150 மீற்றர் உயரத்தில் துபாய் நகரின் அழகை கண்டு இரசிப்பதற்கான மாடம் ஒன்று உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேர் வரை இந்த மாடத்தில் இருந்து பழைய மற்றும் புதிய டுபாய் நகரின் அழகை கண்டு இரசிக்கலாம்.

டுபாய் ஃப்ரேம் கட்டடத்தில் செல்வதற்கு பெரியவர்களுக்கு 50 திர்ஹாம்( ரூ.950), சிறியவர்களுக்கு 20 திர்ஹாம் (ரூ.380) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதை தாண்டிய முதியவர்களுக்கு கட்டணம் இல்லை. லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

புர்ஜ் காலீபா, ஜேடபிள்யூ மேரியாட்ஸ் ஓட்டல் வரிசையில் இந்த புகைப்பட சட்டம் வடிவிலான கட்டடமும் துபாய் நகரின் புதிய அடையாளச் சின்னமாக மாறி இருக்கிறது. துபாய் செல்பவர்கள் நிச்சயம் பார்வையிட வேண்டிய சுற்றுலாத் தலமாக கூறலாம்.

அடுத்த ஆண்டு துபாயில் சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற இருக்கும் நிலையில், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பார்வையாளர்களை கவர்வதற்காக பல்வேறு புதுமையான விடயங்களையும், பிரம்மாண்ட கட்டங்களையும் துபாய் நிர்வாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


கின்னஸில் இடம்பிடித்த ‘Dubai Frame’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.