2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகாதாரத்தை பின்பற்றாத வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

Princiya Dixci   / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், சம்மந்தப்பட்டவர்களின் வியாபாரஸ்தலம் மூடப்படும் எனவும் சுகாதாரத் துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27 நாட்களின் பின்னர் கல்முனை நகரம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, கல்முனை மாநகர பொதுச் சந்தையை கொவிட் தடுப்பு சுகாதார விதிமுறைகளுடன் இயங்கச் செய்வது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல், ஆசாத் பிளாசா மண்டபத்தில், மாநகர மேயர் ஏ.எம்.றகீப் முன்னிலையில் இன்று (26) நடைபெற்றது. இதன்போதே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், பொறியியலாளர் ஏ.எச்.ஏ.ஹலீம் ஜௌஸி, பொதுச் சந்தை மேற்பார்வையாளர் ஏ.எல்.எம்.இன்ஷாட் மற்றும் வர்த்தக சங்க முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, சந்தையின் உட்பகுதியில் சன நெரிசல் ஏற்படாதவாறு, சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டு, அவற்றுக்கான ஒழுங்குகள் குறித்து வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அவ்வாறே சந்தையின் வெளிப்பகுதியில் வியாபாரங்களை மேற்கொள்வது தொடர்பிலும் வாகனத் தரிப்பிட ஒழுங்குகள் குறித்தும் ஆராயப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதேவேளை, கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்கள் சுகாதார நடைமுறைகளைப்  பின்பற்றுமாறு, கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜி.சுகுணன் அறிவுறுத்தியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .