2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தல் முஸ்லிம்களுக்கு விசப்பரீட்சையாகும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு விசப்பரீட்சையாகுமெனவும் இத்தேர்தலில் முஸ்லிம் சமூகம், தனது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வேட்பாளரையே ஆதரிக்க வேண்டியுள்ளதாகவும் கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சிவில் சமூக அமைப்பினர் முன்வர வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நிந்தவூர் - அட்டப்பள்ளத்தில் நேற்று (18) நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்டச் சம்மேளனத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

சம்மேளனத் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அப்துல் கபூர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.தே.கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்துவதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல் தலைமைகளை தேசிய ஜனநாயக முன்னனி என்ற கூட்டு முன்னனிக்குள் சேர்த்துக் கொள்வதற்காக பிரதமர் ரனில் விக்ரமசிங்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார். இந்த சதிவலைக்குள் முஸ்லிம் கட்சித் தலைமைகள் அகப்பட்டுக் கொள்ளாமல், தீர்க்க தரிசனத்துடன் தீர்மானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை இழந்து முஸ்லிம் கட்சித் தலமைகளும், முஸ்லிம் சமூகமும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மைத்திரிப்பால ஸ்ரீசேனாவிற்கு ஓடி ஓடி வாக்களித்து ஆட்சி பீடம் ஏற்றினோம்.

இவருடைய ஆட்சியில்தான் வட-கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கும் அழிவுகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றார்கள். பௌத்த சிங்கள மக்களோடு சகோதர வாஞ்சையோடு வாழ்ந்தாலும் கடும் போக்காளர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களையும் அவர்களது சொத்துக்களையும் அழிப்பது ஏன் என்பது புரியவில்லை.

ஏப்ரல்-21ஆம் திகதி இடமபெற்ற ஷஹ்றான் குழுவினரின் தொடர் குண்டுத் தாக்குதலின் பின் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நெருக்கடியான காலகட்டமொன்றை சந்தித்திருக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு அனுஸ்டிக்கப்பட்ட தினத்தில் இலங்கை கிறிஸ்தவ மக்கள் வாழ்வில் மட்டுமன்றி, உலக வாழ் அனைத்தினங்கள் மத்தியிலும் ஒரு துன்பகரமான நாளாகவே விடிந்தது. இதனால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட இருந்த மிகப் பெரியதொரு அனர்த்தமானது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சடுதியான, சாதுரியமான முடிவினால் தவிர்க்கப்பட்டது.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன் கருதியும் அவர்களது பாதுகாப்பு, இருப்பு, திட்டமிட்ட வன்செயலின்போது தாக்கப்பட்ட 35ற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் புனரமைப்பு மற்றும் சொத்துக்களின் அழிவுகளுக்குமான நஸ்டஈடு, சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் விடுதலை போன்ற விடயங்கள் சம்மந்தமாக அரசாங்கத்துடன் பேசி தீர்வுகளையும் உத்தரவாதங்களையும் பெற்றுக் கொள்ளாது முன்டியடித்துக் கொண்டு மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டமையால் இதுவரை தமது சமூகத்திற்காக செய்த அத்தனை தியாகங்களும் அர்த்தமற்றதாக போய்விட்டது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததன் பின்னர் ஒரு மக்கள் சந்திப்பின்போது முஸ்லிம்களினால்தான் நான் தோட்கடிக்கப்பட்டதாக கூறியதை முஸ்லிம் அரசியல் தலமைகளினாலும், முஸ்லிம் சமூகத்தினாலும் எளிதாக மறந்துவிட முடியாது.

 அரசியலில் முஸ்லிம்கள் தமது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்று அறிஞர் டீ.பி.ஜாயா கூறியுள்ள கூற்றை கருத்தில் எடுத்து, இத்தேர்தலில் முஸ்லிம்கள் தமது இருப்பையும், பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு தீர்க்கதரிசனத்துடன் வாக்களிக்க தயாராக வேண்டும்" என்று அப்துல் கபூர் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .