2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘கர்நாடக அரசாங்கத்தை கலைக்க வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கர்நாடகாவின் தகுதி நீக்க சட்டசபை உறுப்பினர்களின் தியாகத்தால் ஆட்சி அமைக்க முடிந்தது என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பேசியதான ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா மூலம் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், கர்நாடக பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) அரசாங்கத்தை உடனே கலைக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வந்தது. அந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 சட்டச்பை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசாங்கம் கவிழ்ந்தது. ஆளுங்கட்சி கொறடா உத்தரவை மீறியதாக கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 17 சட்டசபை உறுப்பினர்களை சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசாங்கம் அமைந்தது.

இந்நிலையில், சட்டசபையில் வெற்றிடமாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், இடைத்தேர்தல் தொடர்பான பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதில் பேசிய முதலமைச்சர் எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஒலிப்பதிவு, திடீரென நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. அதில் “ஒப்ரேஷன் தாமரைத் திட்டம் நமது கட்சியின் தேசியத் தலைவர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 17 எம்.எல்.ஏ.க்களையும் மும்பையில் அவர் மூலம் ஹொட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பா.ஜ.க ஆட்சி அமைய தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை தியாகம் செய்துள்ளனர்“ என்று தெரிவித்திருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .