2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

5 ஆண்டுகளில் சிரியாவில் 106 இரசாயனத் தாக்குதல்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில், 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் இதுவரையான காலப்பகுதியில், குறைந்தது 106 இரசாயனத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, புலனாய்வுச் செய்தி அறிக்கையிடல் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சிரியப் போரில், இரசாயன ஆயுதங்கள், எந்தளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது, முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பி.பி.சியின் பனோரமா, அரேபியப் பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்ட செய்தியிடலின் போதே, சிரியாவில் போரை வெல்வதற்கு, அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்-அசாட் பின்பற்றியுள்ள போர் முறைமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சமவாயத்தில், 2013ஆம் ஆண்டு செப்டெம்பரிலேயே சிரியா கையெழுத்திட்டு, இரசாயன ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களை நடத்தப் போவதில்லை என உறுதிப்படுத்திய நிலையில், அதற்குப் பின்னரான தாக்குதல்களே, அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பிட்ட காலப்பகுதியில், இரசாயனத் தாக்குதல்கள் இடம்பெற்றன என, 164 அறிக்கைகள் காணப்பட்டன. எனினும், ஒரேயொரு தகவல் மூலத்தை அடிப்படையாகக் கொண்ட அறிக்கைகளையும், முழுமையாக உறுதிப்படுத்தப்பட முடியாத அறிக்கைகளையும் தவிர்த்த ஊடகவியலாளர்கள், ஏனையவை தொடர்பாக ஆராய்ந்து, 106 தாக்குதல்களின் போது, இரசாயனத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையான தாக்குதல்கள், வடமேற்கு மாகாணமான இட்லிப்பிலேயே மேற்கொள்ளப்பட்டன. அங்கு, 27 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஹமா மாகாணத்தில், 25 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அலெப்போவில், 20க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சமவாயத்தில் கையெழுத்திட்ட பின்னர், இரசாயன ஆயுதங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக, சிரிய அரசாங்கம் கூறிவந்தாலும், இத்தாக்குதல்களில் அநேகமானவை, சிரிய அரசாங்கத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன என, இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .