2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரு வாரங்களில் ட்ரம்ப்பிடம் விசாரணை?

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதா என்பது குறித்தும், ரஷ்யாவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவரும் விசேட வழக்குத் தொடுநரான றொபேர்ட் மல்லர், தன்னுடைய விசாரணையின் ஓர் அங்கமாக, அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் விசாரணை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், இந்த நேர்காணலை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்ததோடு, தன்னுடைய சட்டத்தரணிகளின் அனுமதியோடு, அடுத்த 2, 3 வாரங்களில் நடைபெறுமெனத் தெரிவித்துள்ளார்.

“அதை (நேர்காணலை/ விசாரணையை), எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்ய நான் விரும்புகிறேன்” என, ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ரஷ்யா தொடர்பான விசாரணையை, தன்னை நோக்கி பழிவாங்கல் என்றும், அப்படியான தொடர்பு காணப்பட்டது என்று கூறுவது பொய் எனவும் கூறிவரும் ஜனாதிபதி ட்ரம்ப், இந்த விசாரணைகளின் ஓர் அங்கமாக, தன்னிடம் நேர்காணப்படாது என்று, முன்னர் தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில், இந்த விசாரணைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாக, ஜனாதிபதி ட்ரம்ப்பின் சட்டத்தரணிகளும் றொபேர்ட் மல்லரின் குழுவினரும் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றனர். அந்தக் கலந்துரையாடல்களில், சத்தியத்தின் கீழ், ஜனாதிபதி வாக்குமூலம் வழங்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் ஆராயப்படுகிறது.

ஆனால், கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், சத்தியத்தின் கீழ் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) பணிப்பாளராக இருந்த ஜேம்ஸ் கோமியை, பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்தே, விசேட வழக்குத் தொடுநராக, றொபேர்ட் மல்லர் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, கோமியின் பின்னர் எப்.பி.ஐ பணிப்பாளராகப் பதவியேற்ற அன்ட்ரூ மக்கபேயிடம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார் என, ஜனாதிபதி ட்ரம்ப் கோரினார் என்பது, அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மக்கபேயே, அதை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும், “நான் அதைச் செய்தேன் என நான் நினைக்கவில்லை. அதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை” என, ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .