2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈரானுடன் புதிய அணுவாயுத ஒப்பந்தம்?

Editorial   / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையில், ஈரானின் அணுவாயுத வல்லமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட அணுவாயுத ஒப்பந்தம் தொடர்பில், புதிதாக ஒப்பந்தமொன்றை உருவாக்குவது என, ஐக்கிய அமெரிக்க, பிரான்ஸ் ஜனாதிபதிகளுக்கிடையில், இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவ்வொப்பந்தத்திலிருந்து விலக வேண்டுமெனக் கூறிவந்தார். மறுபக்கமாக, அவ்வொப்பந்தத்தை விடச் சிறப்பான மாற்றுத் தெரிவொன்று இல்லையென்பதால், அவ்வொப்பந்தத்தில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கூறிவந்தார்.

இந்நிலையில், ஐ.அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மக்ரோன், இவ்விடயத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருந்தார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்தமொன்றை உருவாக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டதென, ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். புதிய ஒப்பந்தமொன்றை உருவாக்குவது, எந்தளவுக்குச் சாத்தியமானது என்ற கேள்வி காணப்படுகிறது. ஆனால், தற்போதைய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள், பிராந்தியத்தில் அதனது செயற்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கும் புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், தற்போதைய ஒப்பந்தம், அடிப்படையில் பிழையானது எனவும், சிறந்த அடிப்படையைக் கொண்ட ஒப்பந்தமொன்றை உருவாக்க வேண்டியுள்ளதெனவுமம் குறிப்பிட்டார்.

ஆனால், ஏவுகணைத் திட்டங்கள், பிராந்தியத்தில் ஈரானின் தலையீடு ஆகியவற்றை உள்ளடக்கும் புதிய ஒப்பந்தம் வரையப்படுமாயின், ஈரானுக்கு ஏதாவது விட்டுக்கொடுப்புகள் வழங்கப்படுமா என்பது குறித்து, இரு தலைவர்களும் கருத்துத் தெரிவிக்கவில்லை. முன்னைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, ஈரான் மீதான பல தடைகள் நீக்கப்பட்டிருந்தன. எனவே, புதிதாக மேலதிககக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது, மேலும் தடைகள் நீக்கப்பட வேண்டுமென, ஈரான் கோருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதிகள் ட்ரம்ப்புக்கும் மக்ரோனுக்கும் இடையில், கருத்து வேறுபாடுகள் பல காணப்பட்டாலும், இருவருக்குமிடையில் தனிப்பட்ட உறவு காணப்படுகிறது என நம்பப்படுகிறது. அதைப் பயன்படுத்தியே, ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் இவ்விடயத்தைப் பற்றி, ஜனாதிபதி மக்ரோன் உரையாடியிருந்தார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஐ.அமெரிக்காவுக்குச் செல்லவுள்ள ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், ஜனாதிபதி ட்ரம்ப்புடன், நெருக்கமான உறவைக் கொண்டிருக்காவிட்டாலும், இவ்வொப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை, அவரும் மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .