2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.அமெரிக்காவில் குடியேற்றவாசிகளின் சர்ச்சை வலுக்கிறது

Editorial   / 2018 ஜூன் 20 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்குள் சட்டரீதியற்ற முறையில் நுழையும் குடியேற்றவாசிகளை, ஐ.அமெரிக்கா நடத்தும் விதம் தொடர்பான சர்ச்சைகள் வலுத்துள்ள நிலையில், நாட்டை, குடியேற்றவாத முகாமாக மாற்ற அனுமதிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின் அடிப்படையில், சட்டரீதியற்ற முறையில் நாட்டுக்குள் நுழையும் குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படுகின்றனர். அவர்களின் சிறுவயதுப் பிள்ளைகள், தனியாகப் பிரிக்கப்பட்டு, தனியாக வைக்கப்படுகின்றனர்.

சிறிய பிள்ளைகள், அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது தவறு என, ஒருபக்கமாக விமர்சனங்கள் எழுந்துள்ள அதேநேரத்தில், அவர்கள், இரும்புக் கூண்டுகள் போன்ற இடங்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர் என்ற தகவல், மேலும் அதிக எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், குடியேற்றம் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ட்ரம்ப், இவ்விடயத்தில் தனது கடும் நிலைப்பாட்டை, மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

“ஐக்கிய அமெரிக்கா, குடியேற்றவாத முகாமாக இருக்காது. அகதிகளை வைத்திருக்கும் வசதியாகவும் அது மாறாது. அது நடக்காது. ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவற்றை, ஐ.அமெரிக்காவில் நடப்பதற்கு அனுமதிக்க முடியாது, அதுவும், என்னுடைய பார்வையில் அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

இச்சர்ச்சையில், ஜனநாயகக் கட்சி மீதே தவறு என, ஜனாதிபதி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறார். ஆனால், ஜனாதிபதிப் பதவி, செனட், பிரதிநிதிகள் சபை என, மூன்று இடங்களிலும் குடியரசுக் கட்சியே ஆட்சியைக் கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் கருத்துகள் தொடர்பிலும் விமர்சனங்கள் தொடர்கின்றன.

நியாயப்படுத்துகிறது ட்ரம்ப் நிர்வாகம்

இவ்வாறு, ஒரு பக்கமாக சர்ச்சைகள் தொடர்ந்தாலும், தம்மால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகம் தொடர்ந்தும் நியாயப்படுத்தி வருகிறது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் கேர்ஸ்ட்ஜென் நீல்சன், சட்டத்தையே நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

“குடும்பங்களைப் பிரிக்கும் சட்டத்தை, இந்த நிர்வாகம் உருவாக்கவில்லை. என்ன மாற்றமடைந்திருக்கிறது என்றால், சட்டத்தை மீறும் ஒரு பகுதி மக்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

தங்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்திய சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ், “சரியான விடயத்தை நாங்கள் செய்கிறோம். இச்சிறுவர்களை நாங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம். அவர்கள், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதில் முக்கியமாக, இவ்விடயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த, ட்ரம்ப் நிர்வாகம் தடுமாறி வருகிறது. அப்படியான கொள்கையே இல்லையென ஒரு பிரிவினர் கூறிவர, இன்னொரு பிரிவினர், அக்கொள்கை சரியானது எனக் கூறிவருகின்றனர்.

தற்போதைய நிர்வாகம், “சகிப்புத்தன்மை இல்லாத கொள்கை” என்பதைப் பின்பற்றி வருகிறது. இதற்கு முன்னர் காணப்பட்ட இரண்டு நிர்வாகங்களும், அவ்வாறான கொள்கையைக் கடைப்பிடித்திருக்கவில்லை. எனவே தான், தற்போதைய விடயம், பெருமளவுக்குச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்புகள் வலுக்கின்றன

ட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாடுகள் தொடர்பில், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயகக் கட்சியினர் உள்ளிட்டோர், தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதியின் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்தோரும், இவ்விடயத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு குடும்பங்களைப் பிரிப்பதைத் தடுக்கும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தப் போவதாக, குடியரசுக் கட்சியின் செனட்டரான டெட் குரூஸ் தெரிவித்தார்.

அதேபோல், இந்நடைமுறைக்கு எதிராக, முன்னாள் முதற்பெண்மணிகளுள் ஒருவரான லாரா புஷ், தனது கடுமையான கண்டனத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்த நிலையில், இன்னொரு முதற்பெண்மணியான மிஷெல் ஒபாமாவும், இவ்விடயத்தில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுக்கு முன்னதாக, முதற்பெண்மணி மெலானியா ட்ரம்ப், “குடும்பங்கள் பிரிவடைவதை வெறுக்கிறேன்” என, தனது கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .