2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாமென ஈரானுக்கு எச்சரிக்கை

Editorial   / 2018 ஜூலை 24 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவை இன்னொரு முறை அச்சுறுத்த வேண்டாமென, ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானிக்கு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானை நோக்கிய ஆக்ரோஷமான கொள்கைகளை முன்னெடுக்க வேண்டாமென, ஜனாதிபதி றௌஹானி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்தே, இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி றௌஹானியின் கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப், “ஐ.அமெரிக்காவை, இன்னொரு முறை அச்சுறுத்த வேண்டாம். அவ்வாறில்லையெனில், வரலாற்றில் வெகு சிலர் மாத்திரமே சந்தித்த அளவுக்கு, விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என, நேற்று (23) வெளியிட்ட டுவீட்டில் குறிப்பிட்டார். 

தொடர்ந்து அவர், ஈரான் ஜனாதிபதியின் கருத்துகளை, வன்முறைகளுக்கும் மரணத்துக்குமான மோசமான வார்த்தைகள் எனக் குறிப்பிட்டதோடு, அவற்றுக்குப் பொறுமையாக இருக்கும் நாடாக, தங்களது நாடு தற்போது இல்லை எனவும் குறிப்பிட்டார். 

முன்னதாக, நேற்று முன்தினம் (22) கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி றௌஹானி, ஈரான் மீதான ஆக்ரோஷமான கொள்கைகளை விமர்சித்ததோடு, “ஈரானுடனான [ஐ.அமெரிக்காவின்] போர், போர்களுக்கெல்லாம் அன்னை போன்று [பயங்கரமாக] இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இவ்வெச்சரிக்கைக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. 

ஐ.அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரான் மீதான கடும்போக்கு நிலைப்பாட்டை அவர் கடைப்பிடித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக, ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான, ஈரானின் அணுவாயுதப் பயன்பாடு தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததோடு, ஈரான் மீதான தடைகளையும் அறிவித்திருந்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடைகளுக்கு மேலதிகமாக, புதிய தடைகளையும் விதிக்கப் போவதாக அவர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .