2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் காலம் முடிவடைகிறது

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசொன்றைப் பிரகடனம் செய்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள், தற்போது சிரியாவின் மிகக்குறுகிய நிலப்பரப்பொன்றுக்குள் சிக்கியுள்ளனர். இதனால், அக்குழுவின் காலம் முடிவடைகிறதென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ஈராக்கில் தோற்கடிக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, தற்போது, சிரியாவின் கிழக்குப் பகுதிக் கிராமமான பகோஸில், சுமார் அரைச் சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை, நேற்று முன்தினம் (16) விடுக்கப் போவதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும், ஐ.அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியின் முன்னேற்றம் மெதுவடைந்துள்ளது. பொதுமக்களைக் காப்பதற்காகவே இவ்வாறு தமது நடவடிக்கைகளை மெதுவாக மாற்றியுள்ளதாக, சிரியாவைச் சேர்ந்த தளபதியொருவர் தெரிவித்தார்.

குறித்த கிராமத்தைத் தாக்குவது, தமது தாக்குதல் வீச்சுக்குள்ளேயே இருக்கின்ற போதிலும், அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள், மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அதனால் இவ்விடயத்தில் பொறுமையுடன் செயற்படுவதாகவும், அத்தளபதி தெரிவித்தார்.

இந்த இராணுவ நடவடிக்கையில், ஐ.அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் சிரிய ஜனநாயகப் படைகளும் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. முன்னேறிவரும் தமது படைகளிடம், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் பலர் சரணடைந்துள்ளனர் என, அக்குழு தெரிவித்தது.

ஈராக் - சிரிய எல்லைக்கு அருகில் காணப்படும் இக்கிராமத்தில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக, அப்பகுதியின் பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமாகியுள்ளன என, அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .