2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செனட் தேர்தலில் ட்ரம்ப்புக்குப் பின்னடைவு

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மாநிலத்துக்கான செனட் இடைத்தேர்தலில், ஆளும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் றோய் மூர் தோல்வியடைந்து, குடியரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

அலபாமா மாநிலத்தின் செனட்டரான இருந்த ஜெப் செஷன்ஸ், நாட்டின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்காக, தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்கு, இத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. 

குடியரசுக் கட்சி சார்பாக றோய் மூரும், ஜனநாயகக் கட்சி சார்பாக டக் ஜோன்ஸும் போட்டியிட்டனர். 

ஐ.அமெரிக்க தேர்தல் வரலாற்றில், குடியரசுக் கட்சியின் கோட்டைகளுள் ஒன்றாக அண்மைக்காலத்தில் மாறியிருந்த அலபாமா மாநிலத்தில், றோய் மூரே இலகுவாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்கேற்பவே, ஆரம்பத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளும் தெரிவித்திருந்தன. 

ஆனால், 18 வயதிலும் குறைவான சிறுமிகளை இலக்குவைத்து, பாலியல் ரீதியான குற்றங்களை றோய் மூர் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீது அழுத்தம் ஏற்பட்டது. இதனால், கட்சிக்குள்ளும் எதிர்ப்பைச் சந்தித்த அவர், பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப்பாலும் குடியரசுக் கட்சியாலும் நேரடியான ஆதரவைப் பெற்ற பின்னர், வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

மூர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, இனவாதக் கருத்துகளைக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டும் காணப்பட்டது. பிரசாரக் காலத்தில் அவர், அடிமைத்தனத்தை ஒழித்தமை தவறானது என்ற ரீதியில் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். 

இதைத் தொடர்ந்து, கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்து, ஜனநாயகக் கட்சியின் ஜோன்ஸால் பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. ஏற்கெனவே, வெள்ளையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வெறுப்பினக் குழுவான குளு கிளான் கிளாக்ஸ் குழுவால், 1963ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான நீதியை, அலபாமா வடக்கு மாவட்டத்தில் ஐ.அமெரிக்க வழக்குத் தொடுநராகப் பதவியேற்ற பின்னர், 2000ஆம் ஆண்டு பெற்றுக் கொடுத்திருந்தார். எனவே, கறுப்பினத்தவர்களுக்கான தெரிவாக, ஜோன்ஸ் முன்னிறுத்தப்பட்டார். 

அலபாமாவில், வாக்களிப்பதற்கான கட்டமைப்பு ரீதியான தடைகள், கறுப்பின மக்களுக்கு இன்னமும் காணப்படும் நிலையில், அவற்றைத் தாண்டி, மக்களை வாக்களிக்க வைப்பதற்கான கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமாவும், வாக்களிக்குமாறு இறுதிநேரத்தில் கோரிக்கையை முன்வைத்திருந்தார். 

இவற்றின் பின்னணியில், நேற்று முன்தினம் நடந்த வாக்களிப்பைத் தொடர்ந்து, நேற்றைய தினம் முடிவுகள் வெளியாகின. இதில், ஆரம்பத்தில் மூருக்கு முன்னிலை காணப்பட்ட போதிலும், இறுதியில் 49.9 சதவீத வாக்குகளைப் பெற்ற ஜோன்ஸ், வெற்றிபெற்றார். றோய் மூர், 48.4 சதவீத வாக்குகளையே வெற்றிபெற்றார். 

கட்சிகள் சார்பில் போட்டியிடாத வேட்பாளர்களை, வாக்குச் சீட்டில் பெயர் எழுதியும் வாக்களிக்க முடியும் என்ற ரீதியில், 1.7 சதவீதமான வாக்காளர்கள், இரண்டு பேருக்கும் வாக்களிக்காமல், தமக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களித்தனர். இவ்வாறு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள், றோய் மூரை விரும்பாத, குடியரசுக் கட்சி வாக்காளர்களே என்று கருதப்படுகிறது. 

1997ஆம் ஆண்டுக்குப் பின்னர், குடியரசுக் கட்சியால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த அலபாமாவில், ஏனைய தேர்தல்களிலும் குடியரசுக் கட்சியே தாக்கம் செலுத்தியது. தற்போது பெறப்பட்டுள்ள இந்த அதிர்ச்சி முடிவு, முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

குறிப்பாக, செனட்டில் ஏற்கெனவே 52 உறுப்பினர்களைக் கொண்டிருந்த குடியரசுக் கட்சி, இத்தேர்தலின் விளைவாக 51 உறுப்பினர்களாக மாறவுள்ளது. எனவே, 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில், குடியரசுக் கட்சியின் சட்டங்களை நிறைவேற்றும் போது, அக்கட்சியின் 2 உறுப்பினர்கள் எதிர்த்தாலேயே, சட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும்.

அதேபோல், அடுத்தாண்டில், குறிப்பிட்ட சில செனட் தொகுதிகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், செனட்டின் பெரும்பான்மையை இழக்கும் ஆபத்தையும், குடியரசுக் கட்சி கொண்டுள்ளது. அவ்வாறு இழக்கப்படுமாயின், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, மேலதிகமான அழுத்தங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .