2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜூலியன் அசாஞ்ச் மீது ஹிலாரி விமர்சனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குச் சற்று முன்னதாக, அப்போது வேட்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி வெளியான காணொளியை மறைப்பதற்கு, விக்கிலீக்ஸ் செயற்பட்டது என, அத்தேர்தலில் ட்ரம்ப்பின் போட்டியாளராக இருந்தவரும் அத்தேர்தலை வெல்வார் எனப் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டவருமான ஹிலாரி கிளின்டன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலை, ஹிலாரி கிளின்டன் வெற்றிகொள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணிகளால், அவரால் வெற்றிபெற முடிந்திருக்கவில்லை. அவரது தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாக, விக்கிலீக்ஸின் தலையீடு கருதப்பட்டது. 

நவம்பர் 8ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில், ஒக்டோபர் 7ஆம் திகதி, ட்ரம்ப் தொடர்பான காணொளி ஒன்று வெளியானது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் ஒளிப்பதிவில், பெண்களின் அனுமதியின்றி அவர்களை முத்தமிடுவது தொடக்கம் பெண்களின் அந்தரங்க உறுப்புகளைத் தீண்டுவது வரை, ட்ரம்ப், தனது கருத்துகளை வெளியிடுவது, அக்காணொளியில் பதிவாயிருந்தது. ஆனால், அது வெளியான சில நேரத்திலேயே, ஹிலாரி கிளின்டனின் பிரசாரக் குழுத் தலைவராக இருந்த ஜோன் பொடெஸ்டாவின் மின்னஞ்சல்களை, விக்கிலீக்ஸ் வெளியிடத் தொடங்கியது. 

இந்நிலையில், அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு நேற்று (16) கருத்துத் தெரிவித்த ஹிலாரி, விக்கிலீக்ஸ் நிறுவுநர் அசாஞ்ச் மீது, விமர்சனங்களை முன்வைத்தார். 

“சர்வாதிகாரிக்கு (ரஷ்ய ஜனாதிபதி புட்டின்) பணிவிடை செய்கின்ற, எதுவுமில்லை என்று மறுக்கின்ற சந்தர்ப்பவாதியாக, அசாஞ்ச் வந்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, விக்கிலீக்ஸ் தற்போது, ரஷ்யப் புலனாய்வுத்துறையின், முழுமையான உரிமைப்படுத்தப்பட்ட உப நிறுவனமாக மாறிவிட்டது” என்று, ஹிலாரி தெரிவித்தார். 

கடந்த தேர்தலில், ரஷ்யா தலையிட்டது என்பதோடு, ஹிலாரியை விட, ட்ரம்ப்பை அந்நாடு விரும்பியது என, ஐ.அமெரிக்க புலனாய்வுத்துறையினர் குறிப்பிடுகின்றனர். இதையே, ஹிலாரி குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு, ட்ரம்ப் பற்றிய காணொளி வெளியான பின்னர், இந்த மின்னஞ்சல்களை வெளியிட வேண்டுமென, ஏற்கெனவே தொடர்பாடல் அல்லது இணைந்த செயற்பாடு காணப்பட்டது என்பதில், தனக்குச் சந்தேகம் இல்லை என்றும் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .