2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கிறது ரஷ்யா’

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் டூமா பகுதியில், இரசாயனத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இடத்திலுள்ள ஆதாரங்களை, ரஷ்யா அழித்திருக்கலாம் என, ஐக்கிய அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்குச் சென்ற சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதில், ரஷ்யா தடங்கல்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

எனினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா, இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு, மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல்களே, கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதில் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது எனப் பதிலளித்துள்ளது.

இம்மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு, கண்காணிப்பாளர்களுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படாத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு, ரஷ்யர்கள் சென்றிருக்கலாம் என எண்ணுவதாக, இரசாயன ஆயுதங்களைத் தடுப்பதற்கான அமைப்பின் ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் கென்னத் வோர்ட் தெரிவித்துள்ளார்.

“இரசாயன ஆயுதங்களைத் தடுப்பதற்கான அமைப்பின் உண்மையைக் கண்டறியும் திட்டம், பயனுள்ள விசாரணையை மேற்கொள்வதைக் குழப்பும் முகமாக, ஆதாரங்களை அவர்கள் மாற்றியமைத்திருக்கலாம் என நான் அஞ்சுகிறேன்” என, கென்னத் வோர்ட் குறிப்பிட்டார்.

எனினும், ஆதாரங்களில் எவ்விதத் தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என, ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவ் குறிப்பிட்டார். அதற்கான உறுதியை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .