2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருமணத்துக்குப் புறம்பான உறவில் ட்ரம்ப்?

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திருமணத்துக்குப் புறம்பான உறவொன்றை, தற்போது கொண்டிருக்கிறார் என, சர்ச்சைக்குரிய ஊடகவியலாளரான மைக்கல் வூல்ஃப் தெரிவித்துள்ளார்.

மைக்கல் வூல்ஃப் எழுதிய, “நெருப்பும் கோபமும்: ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகைக்கு உள்ளே” என்ற புத்தகம், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, புதிய சர்ச்சையை, வூல்ஃப் ஏற்படுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட வூல்ஃப்-இடம், அவரது புத்தகத்தில் எழுதப்பட்ட எந்த விடயமாவது, போதியளவு கவனத்தை ஈர்க்கவில்லையா எனக் கேட்கப்பட்ட போது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் திருமணத்துக்குப் புறம்பான உறவு என்ற விடயத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அந்தப் பெண் யாரென்பதை வூல்ஃப் வெளிப்படுத்தாத போதிலும், அவரது புத்தகத்தின் இறுதிக் கட்டத்தில் அவரைப் பற்றி எழுதியிருப்பதாக, வூல்ஃப் குறிப்பிட்டார். எனினும், உறுதியான ஆதாரம் தன்னிடம் இல்லையென்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் ஹோப் ஹிப்ஸுடன், ஜனாதிபதி ட்ரம்ப்பின் நடத்தைகள் குறித்து, அவ்வப்போது கேள்விகள் எழுந்திருந்தாலும், புத்தகத்தின் இறுதிக் கட்டத்தில், அவரைப் பற்றிய குறிப்புகள் கிடையாது.

புத்தகத்தின் இறுதிக் கட்டத்தில், ஜனாதிபதியின் மனைவியையும் மகளையும் தவிரக் குறிப்பிடப்படும் ஒரே பெண்ணாக, ஐக்கிய நாடுகளுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலியே காணப்படுகிறார். அவர், ஜனாதிபதியுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், தென் கரொலைனாவின் முன்னாள் ஆளுநரான ஹேலி, ஜனாதிபதி ட்ரம்ப்புடன் ஆரம்பத்திலிருந்தே இணைந்திருந்தவர் கிடையாது. மார்க்கோ றூபியோ, டெட் குரூஸ் ஆகியோருக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஹேலி, தேர்தலின் பின்னரே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் குழுவோடு இணைந்திருந்தார். எனவே, இது எந்தளவுக்கு உறுதியானது எனத் தெரியவில்லை.

எனினும், பாலியல் திரைப்படங்களில் நடிக்கும் ஒருவருடன், 2006ஆம் ஆண்டு ட்ரம்ப் கொண்டிருந்த உறவை மறைப்பதற்காக (அப்போது தான், மெலானியாவுக்கு மகன் பிறந்திருந்தார்), 2016ஆம் ஆண்டில் அவருக்கு 130,000 ஐ.அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன என்ற செய்தி வெளியான பின்னணியில், வூல்ஃபின் தற்போதைய கருத்து வெளியாகியுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டன், வெள்ளை மாளிகையில் பணியாற்றிய மொனிக்கா லுவின்ஸ்கியுடன் உறவைப் பேணியதோடு, அதுபற்றிப் பொய் சொன்னமைக்காக, ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபையால், பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். செனட்டின் மூலமாகவே, அவரது பணி காப்பாற்றப்பட்டது. இப்படியான பின்னணி காணப்படும் நிலையில், வூல்ஃபின் குற்றச்சாட்டு, அதிகமாகக் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .