2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் விபத்தில் 150 பேர் பலி; 80 பேர் காயம்

Editorial   / 2017 ஜூன் 25 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்திலுள்ள அஹ்மட்பூர் கிழக்குப் பகுதியில், நேற்று (25) அதிகாலை ஏற்பட்ட விபத்தொன்றில், சுமார் 150 பேர் பலியாகியதோடு, 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரில் சுமார் 20 பேர், சிறுவர்கள் என அறிவிக்கப்படுகிறது.

எண்ணெய்த் தாங்கி வண்டியொன்று குடைசாய்ந்த பின்னர், அந்த எண்ணெயைச் சேகரிக்கச் சென்றோர், அந்த எண்ணெய்த் தாங்கி வெடித்ததன் காரணமாகவே பாதிக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹவல்பூர் நகரத்தின் வெளிப்புறத்திலுள்ள நெடுஞ்சாலையொன்றின் சடுதியான திருப்பத்தில், குறித்த வண்டி குடைசாய்ந்துள்ளது. குறித்த வண்டியின் டயர் ஒன்று வெடித்ததன் காரணமாக, வாகனத்தின் கட்டுப்பாட்டை வாகனச் சாரதி இழந்தார் என்று, அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள், குறித்த தாங்கியிலிருந்து எண்ணெயை எடுப்பதற்கு முயன்றுள்ளனர். அதன் போது, சுமார் 10 நிமிடங்களின் பின்னர், குறித்த தாங்கி, வெடித்துச் சிதறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள், அடையாளங்காணப்பட முடியாதபடி, கரித்துண்டங்களாகக் காணப்பட்டதையும், எண்ணெயைச் சேகரிப்பதற்காகவோ அல்லது விபத்தைப் பார்வையிடுவதற்காகவோ வந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள், எரிந்த நிலையில் காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

விபத்தைப் பார்வையிட வந்த ஒருவர் அல்லது எண்ணெயைச் சேகரிக்க முயன்றவர் ஒருவர், சிகரெட் ஒன்றைப் பற்றவைக்க முயன்ற போதே, இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த எண்ணெய்த் தாங்கி வாகனம், கராச்சியிலிருந்து லாகூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்ததோடு, 40,000 லீற்றர் எரிபொருளைச் சுமந்துகொண்டு சென்றுள்ளது.

விபத்து ஏற்பட்டதும், குறித்த இடத்திலிருந்து மக்களை அகற்றுவதற்கு, பொலிஸார் முயன்றதாகத் தெரிவித்த, மாகாண அரசாங்கத்தின் பேச்சாளர் மலிக் முஹமட் அஹ்மட் கான், ஆனால் பொலிஸாரின் பணிப்புரைகளை, மக்கள் புறக்கணித்ததாகத் தெரிவித்தார். அத்தோடு, அந்த இடத்தில் மக்கள் கூடியதன் காரணமாக, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

வாகனத்தின் சாரதி, இந்த விபத்தில் உயிர்தப்பியுள்ளதோடு, அவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என, மலிக் முஹமட் அஹ்மட் கான் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில், சுமார் 50 பேர் பலியாகியிருந்த நிலையில், நேற்றைய சம்பவத்துக்கும் அவ்வாறான காரணம் காணப்படலாம் என்ற ஊகங்கள் நிலவிய போதிலும், அவ்வாறான எந்தவிதமான தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. எனவே, விபத்தாகவே இது அமைந்துள்ளது.

முஸ்லிம்களின் புனித நாளான ஈகைத் திருநாள், பாகிஸ்தானில் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னைய நாள் ஏற்பட்ட இந்த விபத்து, முழு பாகிஸ்தானையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .