2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பார்சிலோனா தாக்குதலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஸ்பெய்னின் பார்சிலோனாவில், வானொன்றால் மோதி 13 பேரைக் கொன்ற இஸ்லாமிய ஆயுததாரியை, பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஐந்து நாட்களாக அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

பார்சிலோனாவுக்கு அருகிலுள்ள கிராமப்புறப் பகுதியில், 22 வயதான யூனெஸ் அபௌயாகூப் ஒளிந்திருந்ததாகவும், பொலிஸார் அவரை நெருங்கிய போது, வெடிக்கத்தக்க பட்டி போன்ற ஒன்றை அணிந்திருந்த அவர், "அல்லாஹு அக்பர்" எனச் சத்தமிட்டதாகவும், அப்போதே அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தனர்.

அவர் உயிரிழந்த பின்னர், றோபோ ஒன்றைப் பயன்படுத்தி, அவரது உடலுக்கு அருகில் சென்று சோதனையிடப்பட்ட பின்னரேயே, பொலிஸார் அங்கு சென்றனர்.

இந்தத் தாக்குதலைப் புரிந்த யூனெஸ், கடந்த வியாழக்கிழமை முதல் தப்பியோடி வந்தார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அவர், காரொன்றைத் திருடியதோடு, அந்தக் காரின் ஓட்டுநரையும் கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார்.

இந்நிலையில், அவரைச் சரணடையுமாறும், அவர் இறப்பதை விட, சிறைச்சாலையில் இருப்பது மேலானது எனவும், அவரது தாயார், பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு மத்தியிலும் அவர், ஒளிந்தே காணப்பட்டார்.

இந்தச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என, 12 பேர் கருதப்படுகின்றனர். இந்தத் தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில், 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் 2 பேர், வெடிபொருட்களைத் தயார் செய்து கொண்டிருந்த போது, இந்தத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல் நாள் கொல்லப்பட்டதோடு, ஒருவர் காயமடைந்திருந்தார். வேறு சந்தர்ப்பங்களில் மூவர், கைது செய்யப்பட்டிருந்தனர். 12ஆவது நபராக, யூனெஸ் மாத்திரமே, தப்பித்துக் காணப்பட்டார். தற்போது அவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .