2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிற்ஸ்பேர்க்கில் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தில், பிற்ஸ்பேர்க்கில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற யூத வெறுப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அப்பகுதிக்கு நேற்று முன்தினம் (30) விஜயம் செய்த போதிலும், அவருக்கான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.

யூத வழிபாட்டுத் தலமொன்றுக்குள் நுழைந்த ஆயுததாரி, யூதர்களுக்கு எதிராகச் சத்தமிட்டவாறு, துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, 11 யூதர்கள் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிராக, ஐ.அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதலாக இது பதிவானது.

இத்தாக்குதலின் பின்னணியில், ஜனாதிபதி ட்ரம்ப்பால் ஆதரவளிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் வெள்ளையினத் தேசியவாதம் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், தாக்குதலுக்கு அவரும் ஒரு வகையில் பொறுப்பு என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இவற்றுக்கு நடுவில், ஜனாதிபதியின் விஜயம் அமைந்தது. அவரோடு, முதற்பெண்மணி மெலானியா ட்ரம்ப்பும் சென்றிருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்குள், அவர்கள் சென்றனர்.

ஆனால், இவ்வாறு ஒரு பக்கமாக அவரின் விஜயம் இருக்க, அப்பகுதிக்கு மிக அண்மையில், பல ஆயிரக்கணக்கான பிற்ஸ்பேர்க் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தில், பிற்ஸ்பேர்க்கின் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் இவ்விஜயம் பொருத்தமற்றது என, பிற்ஸ்பேர்க்கின் மேயர் பில் பெதுட்டோ, பகிரங்கமாகவே தெரிவித்திருந்த நிலையிலும், அக்கருத்தையும் மீறி, ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார். அத்தோடு, ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் அவரோடு இணைந்துகொள்ள, ஐ.அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினது தலைவர்களும் மறுத்துவிட்டனர் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .