2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புட்டினுடனான சந்திப்புகளில் என்ன நடந்தன?

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எவ்வாறான உறவைக் கொண்டிருக்கிறார் என்பது தொடர்பான அழுத்தங்கள், ஜனாதிபதி ட்ரம்ப்க்கு அதிகரித்துள்ளன. ஜனாதிபதி புட்டினுடனான தனிப்பட்ட உரையாடல் குறித்து, உயரதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்ற செய்தியறிக்கையே, ஜனாதிபதி ட்ரம்ப் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையால் வெளியிடப்பட்ட செய்தியின்படி, ஜனாதிபதி புட்டினுடனான சந்திப்புத் தொடர்பான விடயங்களை மறைப்பதற்கு, ஜனாதிபதி ட்ரம்ப், மிக அதிகமான முயற்சிகளை மேற்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐ.அமெரிக்க முன்னாள், இந்நாள் அதிகாரிகளை மேற்கோள்காட்டிய அச்செய்தியறிக்கை, ஜனாதிபதி புட்டினுடனான சந்திப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகுவதைத் தவிர்ப்பதற்காக, இருவருக்குமிடையில் உரையாடல் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோரின் தகவல் குறிப்புகளை, ஜனாதிபதி ட்ரம்ப் கைப்பற்றினார் எனவும், சந்திப்புத் தொடர்பான தகவல்களைக் கலந்துரையாடுவதற்குத் தடைவிதித்தார் எனவும், அச்செய்தி குறிப்பிட்டிருந்தது.

அதில் உதாரணமாக, ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பொன்றைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் ஆலோசகர் ஒருவரும் இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரும், தமக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமான தகவல்களை, உரையாடல் மொழிபெயர்ப்பாளர் மூலம் பெற முயன்ற போது, அது தடுக்கப்பட்டது என, போஸ்ட் குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்நடவடிக்கை, இதற்கு முன்னைய ஜனாதிபதிகளின் நடவடிக்கைகளையோடு முரண்பட்டதாக உள்ளது என, போஸ்ட் சுட்டிக்காட்டுகிறது.

இச்செய்தி வெளியான பின்னர், “ரஷ்யாவுக்காக நீங்கள் பணியாற்றுகிறீர்களா, எப்போதாவது பணியாற்றியிருக்கிறீர்களா?” என, ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது, “என்னிடம் கேட்கப்பட்ட, மிகவும் அவமானகரமான கேள்வி இது தான்” என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதோடு, எதை மறைக்கவும் தான் முயலவில்லை எனக் குறிப்பிட்டார். ஆனால், அச்செய்தி தவறானது என, நேரடியாக அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.

மாறாக வெள்ளை மாளிகை, அச்செய்தியை முற்றாக நிராகரித்ததுடன், பதில் வழங்குமளவுக்கு அச்செய்தி தகுதியுடையது அல்ல எனக் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .