2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போர்க் கப்பல் மோதியது; 10 கடற்படையினரைக் காணவில்லை

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் போர்க் கப்பலொன்று, எண்ணெய்த் தாங்கி ஒன்றுடன், சிங்கபூரின் கிழக்குப் பகுதியில் நேற்று மோதி, விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்கக் கடற்படையினர் 10 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது.

ஏவுகணை அழிப்பு நாசகாரியான யு.எஸ்.எஸ் ஜோன் எஸ். மக்கெய்ன் என்ற இந்தக் கப்பல், சிங்கப்பூர் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, வர்த்தகக் கப்பலொன்றுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது, கப்பலுக்குச் சேதங்கள் ஏற்பட்டததாகத் தெரிவித்த ஐ.அமெரிக்கக் கடற்படை, 10 பேரைக் காணவில்லையெனவும், 5 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டது எனவும் தெரிவித்தது. காயமடைந்தவர்களில் நால்வர், ஹெலிகொப்டர் மூலமாக, சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் எனவும், அவர்களுக்கு உயிராபத்துக் காணப்படவில்லை எனவும் தெரிவித்தது. காயமடைந்த 5ஆவது வீரருக்கு, சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் கப்பல்கள், ஹெலிகொப்டர்கள், படகுகள், ஐ.அமெரிக்கக் கடற்படை விமானங்கள் ஆகியனவற்றைக் கொண்டு, தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, சேதமடைந்த கப்பல், சிங்கப்பூர் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது. அத்தோடு, விபத்து இடம்பெற்ற இடத்துக்கு அருகில், எண்ணெய்க் கசிவுகள் காணப்படவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, ஜப்பானியக் கடற்பரப்பில் வைத்து, ஐ.அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் கப்பலும் பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பலும் மோதிக் கொண்டன. 9 வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஐ.அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

அந்தக் கப்பலும் தற்போது சேதமடைந்துள்ள கப்பலும், சகோதரக் கப்பல்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே, இவ்வளவு குறுகியகால இடைவெளியில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தானது, ஆசியக் கடற்பரப்பில் ஐ.அமெரிக்காவின் போர்க் கப்பல்களின் பாதுகாப்புத் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, ஆசிய நாடான வடகொரியா, ஐ.அமெரிக்காவுடன் முறுகல்களை வெளிப்படுத்திவரும் நிலையில், ஐ.அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை, பலவீனமாக இருக்கக்கூடாது என்பதில், அவ்வரசாங்கம் முயன்று வருகிறது. ஆனால், இவ்வாறான அசம்பாவிதங்கள், பல கேள்விகளை எழுப்புகின்றன.

யு.எஸ்.எஸ் ஜோன் எஸ். மக்கெய்ன் கப்பல் என்பது, தற்போதைய செனட்டரான ஜோன் மக்கெய்னின் தந்தை, பாட்டன் ஆகிய இருவரின் நினைவாகவும் வைக்கப்பட்ட பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .