2024 மே 08, புதன்கிழமை

மூன்று நாட்களில் 270 பொதுமக்கள் பலி

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதி மீது, ரஷ்யாவும் சிரிய அரசாங்கப் படைகளும் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக, 3 நாட்களில் குறைந்தது 270 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரிய, ரஷ்யத் தாக்குதல்கள் காரணமாக, நேற்று முன்தினம் (21) மாத்திரம், 106 பேர் கொல்லப்பட்டனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 127 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையே இத்தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், 270க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கு மேலதிகமாக, நேற்று (21) காலையில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல்களில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் என, இலங்கை நேரப்படி நேற்று மாலை வெளியான தகவல்கள் தெரிவித்தன.

தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு கூட்டாவை, எதிரணிப் போராளிகளே கட்டுப்படுத்திவரும் நிலையில், அப்பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளிலேயே, சிரிய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

போராளிகள் மீது தான் தாக்குதல் நடத்துவதாக சிரிய அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர் என, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், வைத்தியசாலையொன்றும் சிக்கியது எனவும், தற்போது அவ்வைத்தியசாலை தொழிற்படவில்லை எனவும், தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனடிப்படையில், 48 மணித்தியால காலப்பகுதிக்குள், 6 வைத்தியசாலைகள், இவ்வாறு செயலிழந்துள்ளன என, ஐக்கிய நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கு கௌட்டா பகுதியில் அதிகரித்துள்ள மோசமான நிலைமை தொடர்பாகத் தனது கவனத்தை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக மிகுந்த கவலையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு கூட்டா பகுதியில், 400,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கான உணவு, அவசர சேவைகளின் விநியோகத்தை, அரசாங்கம் ஏற்கெனவே கட்டுப்படுத்தியுள்ள நிலையில், அம்மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, இத்தாக்குதல்களும் பேரழிவுகளை ஏற்படுத்தி, அங்கு மாபெரும் மனிதாபிமான அழிவை ஏற்படுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X