2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘யேமன் சனத்தொகையில் பாதியளவானோர் பட்டினிக்குள் சிக்குவர்’

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுள்ள யேமனின் சனத்தொகையில் பாதியளவு பேர் -- அதாவது 14 மில்லியன் பேர் -- பட்டினியில் சிக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள், இதன் பின் அவர்கள், மனிதாபிமான உதவிகளிலேயே முழுவதுமாக தங்கியிருக்கும் நிலைமை ஏற்படக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

ஹூதி ஆயுததாரிகளால், தலைநகர் சனா 2015ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டு, அரசாங்கம் அங்கிருந்து விரட்டப்பட்டதுடன் ஆரம்பமான யேமனியின் உள்நாட்டுப் போர், இப்போது, பல்வேறு நாடுகள் பங்குபற்றும் மறைமுகப் போராக மாற்றமடைந்துள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவாக, சவூதி அரேபியா தலைமையிலான அரபுக் கூட்டணி செயற்படும் நிலையில், ஹூதி ஆயுததாரிகளுக்கு ஆதரவாக, ஈரான் செயற்படுகிறது.

இந்நிலையில், இப்போரால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றமை, தொடர்ச்சியாகக் கவனிக்கப்படுகின்ற போதிலும், ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளரும், மனிதாபின விவகாரங்களுக்கும் அவசர நிவாரண ஒருங்கிணைப்புக்குமான ஐ.நாவின் கீழ் செயலாளர் நாயகமுமான மார்க் லோகொக் வெளியிட்டுள்ள கருத்துகள், அங்குள்ள பாரிய ஆபத்தை வெளிக்காட்டியுள்ளன.

“யேமனை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் மிகப்பாரிய பட்டினி, உடனடியாக ஏற்படுவதற்காக, தெளிவானதும் தெளிவானதும் தற்போதைய ஆபத்தாகவும் உள்ளது என்பதை, இப்போது தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்தத் துறையிலுள்ள எந்தவொரு தொழில்வாண்மையாளரும் தங்களுடைய வாழ்வில் சந்தித்ததை விட மிகப்பெரியதாக இது அமைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், சுமார் 8 மில்லியன் பேருக்கான நிவாரண உதவிகளை, ஐ.நா வழங்கி வருகிறது எனக் குறிப்பிட்ட லோகொக், நாட்டின் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, நாட்டின் முக்கியமான விமான நிலையமான ஹொடெய்டா விமான நிலையத்துக்கான போர் ஆகியவற்றால், இந்நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

யேமன், தனது நாட்டுக்குத் தேவையான உணவில் 90 சதவீதமானவற்றை இறக்குமதி செய்வது வழக்கம் என்ற நிலையில், முக்கியமான விமான நிலையமே போருக்கான மய்யமாக மாறியுள்ளமை, உணவு இறக்குமதியைப் பாதித்துள்ளது. இது, பட்டினியை மேலும் விரைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

நாட்டிலுள்ள பல மில்லியன்கணக்கானோர், உதவிகளைப் பெற்று, அவற்றிலேயே தங்கியுள்ள நிலையில், அவர்கள் வெறுமனே தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, அவர்கள் செழிப்பாக இல்லையெனவும், லோகொக் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .