2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரஷ்யாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்குமிடையில் ஐ.நாவில் பிணக்கு

Editorial   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், சிரிய அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் இரசாயனத் தாக்குதல் தொடர்பாக, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், இரு தரப்புகளும், மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

இரசாயனத் தாக்குதல் தொடர்பான ஐ.நா பாதுகாப்புச் சபை விவாதம், கடந்த திங்கட்கிழமையும் இடம்பெற்றிருந்த நிலையில், ஐ.அமெரிக்காவால் வரையப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, இலங்கை நேரப்படி நேற்று (11) அதிகாலை இடம்பெற்றது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 12 நாடுகள் வாக்களித்தன. ஆனால், “வீற்றோ” அதிகாரம் கொண்ட ரஷ்யா, இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து, தீர்மானத்தைத் தோற்கடித்தது. ரஷ்யாவைத் தவிர, பொலிவியாவும் எதிர்த்து வாக்களித்தது. “வீற்றோ” அதிகாரம் கொண்ட மற்றொரு நாடான ரஷ்யா, வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

சிரியா மீதான விசாரணைகளுக்கான பொறிமுறையொன்றை, ஓராண்டுக்கு உருவாக்க வேண்டும் என்பதும், இரசாயன ஆயுதங்களை யார் பயன்படுத்தினார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதும், இத்தீர்மானத்தின் நோக்கங்களாகும்.

சிரியா மீதான நடவடிக்கையை எடுக்கும் தீர்மானமொன்றை, வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தடுத்த 12ஆவது தடவை இதுவாகும்.

இது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்குப் போட்டியாக ரஷ்யா முன்வைத்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதற்கு, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. “வீற்றோ” அதிகாரம் கொண்ட பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா உள்ளடங்கலாக 7 நாடுகள், எதிர்த்து வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்களிக்கவில்லை.

இத்தீர்மானம் மூலமாகவும், ஓராண்டுக்கான விசாரணை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்ற போதிலும், கட்டுப்பாடுகளைக் கொண்டதாக அமைந்ததோடு, சிரிய அரசாங்கத்தின் பங்களிப்பையும் கோரியிருந்தது. தவிர, சபையின் ஏனைய நாடுகளின் பங்களிப்பை, ரஷ்யா கோரியிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டது.

இது தோற்கடிக்கப்பட்ட பின்னர், ரஷ்யாவால் சமர்ப்பிக்கப்பட்ட இன்னொரு தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் இடம்பெற்றது. அதற்கு, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. நான்கு நாடுகள் எதிர்க்க, 6 நாடுகள் வாக்களித்திருக்கவில்லை.

சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதற்கு ஐ.அமெரிக்கா முயல்கிறது என, ரஷ்யா குற்றஞ்சாட்டியது. மறுபக்கமாக, ஐ.அமெரிக்கா தயாரித்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தான், சபை செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கை எனத் தெரிவித்த ஐ.அமெரிக்கா, சிரிய மக்களைத் தாண்டி, அந்நாட்டின் ஜனாதிபதியையே, ரஷ்யா பாதுகாக்கிறது எனக் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .