2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ராக்கைன் தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா இன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த இரண்டு ஊடகவியலாளர்கள், மியான்மார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, அரசாங்கம் அறிவித்துள்ளது. வா லோன், கியாவ் சோ ஊ ஆகிய இரண்டு பேரே கைதாகியுள்ளனர்.

றோகிஞ்சா இன முஸ்லிம்கள் மீதான இராணுவ நடவடிக்கை தொடர்பாக, இவர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், இவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில், இரண்டு பொலிஸாரும் கைதாகியுள்ளனர்.

அரச இரகசியங்கள் சட்டம் என்ற, 1923ஆம் ஆண்டு உருவான சட்டத்தின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தண்டனையாக, 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இவர்கள் எதிர்கொள்கின்றனர்.

“வெளிநாட்டு ஊடகங்களுடன் பகிரும் நோக்கில், தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற்றுக் கொண்டனர்” என, மியான்மார் தகவல்துறை அமைச்சுத் தெரிவித்தது.

பொலிஸாருடன், இரவு நேர உணவுக்காக இவர்களிருவரும், கடந்த செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் காணாமல் போயிருந்தனர். அவர்கள் எங்கே சென்றனர் என்ற விடயம் வெளிப்படுத்தப்படாத நிலையில், கைது தொடர்பான விடயத்தை, நேற்று முன்தினமே, மியான்மார் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

ராக்கைனில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை காரணமாக, சுமார் 650,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பதோடு, ராக்கைனில் இருந்த முஸ்லிம்களும், படையினரின் சித்திரவதைகளுக்கு உள்ளாகினர் என, உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே, அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் ஊடகவியலாளர்களை, மியான்மார் அரசாங்கம் தொடர்ந்தும் ஒடுக்கி வருகிறது.

கைதுசெய்யப்பட்ட இருவரும், றொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்காகப் பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் காணாமல் போனமையைத் தொடர்ந்து, காணாமல் போனமை தொடர்பான அறிக்கையொன்றை, றொய்ட்டர்ஸின் மியான்மார் பிரிவு தாக்கல் செய்திருந்ததோடு, 3 பொலிஸ் நிலையங்களுக்கும் சென்றிருந்தது. ஆனால், 24 மணிநேரத்துக்கும் மேலாக, அவர்களுக்கான பதில் வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .