2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘றக்காவில் தோல்வியைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் முடிவு நெருங்குகிறது’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரியாவின் றக்காவிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையில், மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குர்திஷ்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரிய ஜனநாயகப் படைகள், றக்காவைக் கைப்பற்றியதாக, கடந்த வெள்ளிக்கிழமை, உத்தியோகபூர்வமாக அறிவித்தன. சுமார் 4 மாதங்களாக இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே, அங்கிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இப்படைகளுக்கு, ஐக்கிய அமெரிக்க இராணுவம், தமது உதவிகளை வழங்கியிருந்தது. இந்நிலையில், றக்காவின் வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனதிபதி ட்ரம்ப், “எமது படைகள் இணைந்து, நகரம் முழுவதையும், ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

சிரிய ஜனநாயகப் படைகளுக்கு, ஐ.அமெரிக்க இராணுவத்தின் உதவிகள், ஆரம்ப கட்டத்திலிருந்தே கிடைத்தன என்பதோடு, இந்த இராணுவ நடவடிக்கையிலும் கூட, விமானத் தாக்குதல் உதவிகளும் கிடைத்திருந்தன. அதையே, ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார் என்று கருதப்படுகிறது.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“றக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் தோற்கடிப்பது என்பது, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவைத் தோற்கடிப்பதற்கான, எமது உலகளாவிய நடவடிக்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் மோசமான கொள்கையில், மிக முக்கியமான திருப்புமுனையாகும்.

“ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தலைநகரம் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இஸ்லாமியப் பேரரசின் முடிவு, விரைவிலேயே காணப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும், அவரின் ஆட்சிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில், சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது.

தற்போது, றக்கா கைப்பற்றப்பட்டுள்ளமை, அதில் முக்கியமான ஓர் அம்சமாகக் காணப்படுகிறது.
றக்கா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆதிக்கம், இல்லையென்ற அளவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக என்ன செய்வது என்பதே, தற்போதைய கேள்வியாக மாறியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் தனது அறிக்கையில், இராஜதந்திர பேரம்பேசல்களுக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும் அரசியல் நிலைமாற்றத்தைப் பற்றிச் சிந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்த போதிலும், தெளிவான திட்டங்களைக் கூறியிருக்கவில்லை. குறிப்பாக, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் எதிர்காலம் தொடர்பாக அவர், கருத்தெதனையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

கடந்த காலங்களில், அசாட்டின் பதவி விலக்கலை, முக்கியமான ஒரு விடயமாக, ஐ.அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் முக்கியமான இவ்வறிக்கையில், அதுபற்றிக் கூறப்பட்டிருக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான வெற்றி கிடைத்தாலும் கூட, ஏற்கெனவே பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றுசேர்ப்பது என்பது, கடினமானதாகவே அமையுமெனக் கருதப்படுகிறது.

அத்தோடு, றக்காவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ விரட்டியமை, முக்கியமானது என்றாலும் கூட, அக்குழுவின் தாக்குதல்களைச் சமாளிப்பதற்கு, இன்னமும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என, பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .