2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லொம்பொக் நிலநடுக்கம்: வீடற்றவர்களாக 156,000 பேர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் லொம்பொக் தீவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, 156,000க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாக மாறியுள்ளனர் என, அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, தற்காலிகக் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள், போதுமான உணவு, மருந்துகள், சுத்தமான குடிநீர் ஆகியன இல்லாத நிலையில் காணப்படுகின்றனர் எனவும், அதிகாரிகள் இன்று (08) குறிப்பிட்டனர்.

6.9 றிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக, குறைந்தது 131 பேர் கொல்லப்பட்டதோடு, பெருமளவுக்குப் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக, நிலநடுக்கமொன்று ஏற்பட்டு, அதன் காரணமாக 19 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இன்னமும் சவால்களை எதிர்கொள்வதாக, நாட்டின் அனர்த்த முகாமைத்துவ முகவராண்மையின் பேச்சாளர் சுடோப்போ புர்வோ நுக்ரோஹோ தெரிவித்தார்.

இவ்வனர்த்தம் காரணமாகக் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறதெனக் குறிப்பிட்ட அவர், 70,000க்கும் மேற்பட்டோர் அவர்களது வீடுகளை விட்டு அகற்றப்பட்டுள்ளனர் எனவும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிபாடடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டார்.

இடிபாடடைந்த வீடுகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தோரின் நிலை அவ்வாறிருக்க, இவ்வனர்த்தம் காரணமாக 1,477 பேர் காயமடைந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதிலும், சவால்களை எதிர்கொண்டு வருவதாக, மேற்கு நூஸா தெங்கரா மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்தார். காயமடைந்த நூற்றுக்கணக்கானோர், வைத்தியசாலைகளுக்கு வெளியே வைத்துச் சிகிச்சையளிக்கப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .