2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெப்ப அலையால் பாகிஸ்தானில் 65 பேர் பலி

Editorial   / 2018 மே 23 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தென்பகுதி நகரான கராச்சியில், கடந்த 3 நாட்களாக நிலவிய வெப்ப அலை காரணமாக, குறைந்தது 65 பேர் பலியாகினர் என, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தன. கடுமையான வெப்பம் தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில், ரமழான் மாதம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், அதனோடு சேர்ந்து, மின்சார வழங்கலில் தடங்கலும் ஏற்பட்டுள்ளது. இவற்றோடு இணைந்ததாக ஏற்பட்ட வெப்ப அலை, அதிகமானோரைப் பாதித்துள்ளது.

கராச்சியின் வெப்பநிலை, நேற்று முன்தினம் 44 பாகை செல்சியஸாகவும், நேற்று 42 பாகை செல்சியஸாகவும் காணப்பட்டது. இதனால், கடுமையான வெப்பத்தைத் தாங்குவதில், வயதானவர்களும் சிறுவர்களும் நோயாளர்களும், கடும் சிக்கலை எதிர்கொண்டனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, எதி அறக்கட்டளை என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் பைசால் எதி, கராச்சியில் வறுமையான மக்கள் வாழும் பகுதிகளிலேயே, அநேகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

ஆனால், கராச்சி நகரம் அமைந்துள்ள சிந்து மாகாணத்தின் சுகாதாரச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது, வெப்ப அதிர்ச்சியால் பொதுமக்கள் இறந்தனர் என்பதை மறுத்தார். மாறாக, வைத்தியர்கள் தான் அதை முடிவுசெய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

வானிலை எதிர்வுகூறலின்படி, இன்று (22) புதன்கிழமை, கராச்சியின் சராசரி வெப்பநிலையாக 41 பாகை செல்சியஸ் காணப்படுவதோடு, நாளைய தினம், அது 39 பாகை செல்சியஸாகக் குறைவடையும். அதன் பின்னர், வெப்பநிலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஓரிரு நாட்களுக்கு, மேலும் பாதிப்புகள் ஏற்படலாமென அஞ்சப்படுகிறது.

வெப்ப அலை ஏற்படுவது, கராச்சியில் சோகமான ஞாபகங்களைக் கொண்டுவரும் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக, குறைந்தது 1,300 பேர் பலியாகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .