2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்டாலின், வைகோ கைதாகி விடுதலை

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பஸ் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொலிஸாரால், நேற்று (29) கைது செய்யப்பட்டு, பின்னர் விடு​தலை செய்யப்பட்டனர்.  

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

தி.மு.க செயல்தலைவரும் எதர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் உள்ள எம்.எ.ல்ஏ அலுவலகத்தில் இருந்து, கையில் கொடியை ஏந்திக்கொண்டு, பேரணியாக வந்தபோதே, அதில், அவருடைய தோழமைக் கட்சிகளும் பங்கேற்றன. 

பேரணி முடிவில், கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கத்தில், அரச பஸ்ஸை மறித்து, ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை, பொலிஸார் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் பெரவள்ளூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, நிலைமை சாதாரணத்துக்கு வந்தடைந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.   

எனினும், பஸ் கட்டண உயர்வை, தமிழக அரசாங்கம் முற்றாகத் திரும்பப் பெறும்வரையில், போராட்டத்தைக்​ கைவிடப்போவதில்லை என்றும் போராட்டம் தொடரும் என்றும், மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘நெருக்கடி கொடுக்கவே தூண்டிவிடப்படுகின்றன’

தமிழக அரசாங்கத்துக்கு நெருக்கடி அளிக்கவே பஸ் கட்டணத்துக்கு எதிரான போராட்டங்களை, எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக அரச பஸ்களின் கட்டணம், சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு, கடந்த 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. இதற்கு பொதுமக்கள் இடையே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதோடு, தமிழக அரசியல் தலைவர்களும் பஸ் கட்டணத்தைக் குறைக்கும்படி, தமிழக அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (28) சதம் அளவில் பஸ் கட்டணத்தை, தமிழக அரசாங்கம் குறைத்தது. 

இந்நிலையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாகக் குறைக்கக்கோரி, சென்னை கொளத்தூரில், நேற்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கவே, பஸ் கட்டணம் தொடர்பான போராட்டங்களை, தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தூண்டிவிடுவது தி.மு.கவின் தொழிற்சங்கம்தான். கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது தி.மு.கதான். 

“மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அண்டை மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர்தான், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவுதான்” என்று அவர் கூறியுள்ளார்.        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .