2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆசிய பசுபிக் பிராந்தியம் COVID 19-ஐ எதிர்கொள்ளுதல்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

COVID-19 தொற்றுநோய் ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாகச் செயற்படும் சமூக பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை வெகுவாகவே எடுத்துக்காட்டுகிறது. இவ்வாரம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஐக்கிய நாடுகள் அறிக்கை, விரைவான சமூக பொருளாதார ஏற்றம் இருந்தபோதிலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகள் பலவீனமான சமூக பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம்  (ESCAP) சர்வதேச தொழிலாளர் அமையம் (ஐ.எல்.ஓ)  ஆகியன கூட்டாக தயாரித்த ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான சமூக வெளிப்பார்வை என்ற வெளியீட்டின் படி, பிராந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை என்ற தகவலை வெளியிட்டிருந்தது. மேலும், ஐ.எல்.ஓ தனது விரிவான அறிக்கையில், ஆசிய பசுபிக்கில் ஒரு சில நாடுகளில் மட்டுமே விரிவான சமூக பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“விரிவான சமூக பாதுகாப்பு ஆரோக்கியமான சமூகங்களுக்கும் துடிப்பான பொருளாதாரங்களுக்கும் அடித்தளத்தை உருவாக்குகிறது. COVID-19 தொற்றுநோய் இந்த கட்டாயத்தை கூர்மையான கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பில் நன்கு செயல்படும் சமூக பாதுகாப்பு அமைப்புகள் இல்லாதிருப்பது சமத்துவமின்மை மற்றும் வறுமையை நிச்சயம் அதிகரிக்கும்” என்று கருத்து கூறுகின்றார் ESCAP இன் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாக செயலாளர் ஆர்மிடா சல்சியா அலிஸ்ஜபானா.

ஆயினும், தற்போதுள்ள கட்டமைப்பின் நோக்கம் மற்றும் அது செயற்படக்கூடிய வீரியத்தின் அளவு இன்னும் குறைவாகவே உள்ளது என்பதே களநிலவரம் ஆகும். பெரும்பாலான வறுமை-இலக்கு திட்டங்கள் ஏழ்மையான குடும்பங்களை அடையத் தவறிவிட்டன. மேலும் தொற்றுநோய்கள் ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்குள் வறுமையை ஒழிப்பதற்கான முன்னேற்றத்தை முற்றாகவே மாற்றியமைத்து விட்டன. பல நாடுகளும் தொற்றுநோயை அதிகப்படுத்திய விளைவுகளிலும் வாய்ப்புகளிலும் அதிக அளவு சமத்துவமின்மையை எதிர்கொள்கின்றன. அதிகப்படியான மக்கள்தொகை, இடம்பெயர்வு, நகரமயமாக்கல், இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், அத்துடன் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் இந்த சவால்களை மேலும் அதிகரிக்கவே செய்கின்றது.

 

தொடர்பாடல் இடைவெளியை இன்னொரு முக்கிய காரணிகளில் ஒரு விடயமாக அடையாளம் காட்டுகிறது மேற்குறித்த அறிக்கை. ஆரோக்கியத்தைத் தவிர்த்து, பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே சமூகப் பாதுகாப்புக்காக செலவிடுகின்றன என்பதும் மக்களிடையே இந்த குறைந்த அளவிலான முதலீடு உலகளாவிய சராசரியான 11 சதவீதத்துக்கு குறைவானதும் என்பதும் குறித்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படுகின்றது. மற்றொரு முக்கிய காரணமாக அறிக்கை சுட்டிக்காட்டும் விடயமானது, பிராந்தியத்தில் முறைசாரா வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதும் அது அனைத்து தொழிலாளர்களிலும் 70 சதவீதத்தை குறிக்கின்றமையும் ஆகும்.

இது தொடர்பாக பின்வருமாறு கருத்து வெளியிடுகிறார் ESCAP இன் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாக செயலாளர் ஆர்மிடா சல்சியா, “COVID-19 நெருக்கடி பல உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் குறிப்பாக முறைசாரா பொருளாதாரத்தில் உள்ளவர்களின் ஆபத்தான நிலைமையை அம்பலப்படுத்தியுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் தேக்கமடைவதைத் தவிர்ப்பதற்கு, பொது சமூக பாதுகாப்பு அமைப்புகளில் மேலும் முதலீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது” என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகப் பாதுகாப்பை விரிவாக்குவது வறுமை, சமத்துவமின்மை தொடர்பான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, அரசாங்கங்கள் அடிப்படை குழந்தை சலுகைகள், இயலாமை சலுகைகள் மற்றும் முதியோர் ஓய்வூதியங்களை வழங்குதல், வறுமையில் வாடும் குடும்பங்களின் விகிதம் 18 சதவீத புள்ளிகள் வரை குறைக்கும் என்று அளவிடப்படுகிறது.

பிராந்தியத்தை பொறுத்தவரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு முதல் ஆறு சதவீதம் வரை தேவையான முதலீடு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், அது சில நாடுகளின் பிடியிலேயே உள்ளது என்பதை அறிக்கை நிரூபிக்கிறது. தற்போதுள்ள வளங்களை மறுபயன்படுத்தவும், பொது வருவாயை உயர்த்தவும், புதிய தொழில்நுட்பங்களைத் புகுத்தவும், சமூகப் பாதுகாப்பால் தேசிய அபிவிருத்தி உத்திகளில் சமூகப் பாதுகாப்பை உள்வாங்கவும் இந்த அறிக்கை அரசாங்கங்களை பரிந்துரைக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .