2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’அதிகாரப் பகிர்வு தேவையில்லை; சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை’

Editorial   / 2019 மார்ச் 08 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

* அதிகாரப் பகிர்வு தேவையில்லை

* சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை

* 11 இளைஞர்கள் விவகாரம்: விசாரணை நடத்தவே உத்தரவிட்டிருந்தேன்

* மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்

* பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியே, தமிழ் மக்களுக்கான விடிவு

நேர்காணல்: மேனகா மூக்காண்டி

படப்பிடிப்பு: ஆகில் அஹமட்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கின்றது. அதனால் அதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் கடமை எனக்கு இருக்கின்றதென நம்புகிறேன். அதனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நான் வருவேனென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இது குறித்து, தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: 'எளிய', 'வியத்மக' வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கக் காரணமென்ன?

'வியத்மக' வேலைத்திட்டமானது, மஹிந்த அரசாங்கம் தோல்வியுற்ற பின்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும். இலங்கை நிர்வாகத்திலிருந்து அதாவது, அரசியலிலிருந்து, தொழில் நிபுணர்கள், படிப்படையாக விலகிச் சென்றுள்ளனர். அத்துடன், அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் சரியில்லை என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கின்றது. இதனால், அவர்களை ஒன்றிணைத்து, நாட்டைக் கட்டியெழுப்புதல், நாட்டு மக்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கான தீர்வுகள் எவை என்பது தொடர்பில், அவர்களுடன் கலந்துரையாட, நான் தீர்மானித்தேன். அந்த வகையில், இந்த நடவடிக்கையை, நாடு முழுவதிலும் பரவலாகச் செய்து வருகின்றோம்.

கல்வி, விவசாயம், ​கைத்தொழிற்றுறை, கலாசாரம் எனப் பல்வேறுபட்ட துறைகளையும் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, அவர்களோது இணைந்து, கொள்கைகளை வகுத்து வருகின்றோம். அத்துடன், இந்தத் திட்டங்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் முன்வைத்து, அவர்களுடைய கருத்துடன், தேசிய கொள்கைப் பிரகடனமாகத் தயாரித்து, எமது அரசாங்கமொன்று மீண்டும் ஆட்சிக்கு வரும் போது, அதை நடைமுறைப்படுத்துவோம். இதற்காகத் தான், 'வியத்மக' வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

'எளிய' வேலைத்திட்டம் அமைக்கக் காரணம், மக்கள் மத்திக்குச் செல்வதற்காகும். இதனை, வடக்கு, கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கில், விரைவில் முன்னெடுக்கவுள்ளோம். இந்த வேலைத்திட்டத்தின் போது, காலீன முக்கியத்துவமிக்க விடயம் (அரசமைப்பு, பொருளாதாரம்) தொடர்பில், மக்கள் மத்தியில் இதன்போது உரையாற்றப்படும். இவை குறித்து அனுபவமுள்ள தொழில் நிபுணர்கள், இதன்போது உரையாற்றுவர்.

இவ்விரு வேலைத்திட்டங்களிலும், தமிழ், முஸ்லிம் மக்கள், தொழில் நிபுணர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எதிர்வரும் நாள்களில், மலையகம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில், 'எளிய' வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேவேளை, 'வியத்மக' வேலைத்திட்டத்துக்காக, வடக்கு, கிழக்கிலிருந்து தொழில் நிபுணர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். கிழக்கிலிருந்து இதற்கான பங்களிப்பு கிடைத்துள்ள போதிலும், வடக்கிலிருந்து, இன்னும் பங்களிப்பு கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். விரும்பியவர்கள், எம்மோடு இணைந்துகொள்ளலாம்.

கே: அரசாங்கம் முன்வைத்துள்ள பாதீடு, எப்படி இருக்கிறது?

பாதீடு எனும் போது, அதில், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதாரம் பற்றிய தூரநோக்கொன்று காணப்பட வேண்டுமென்பதே என்னுடைய கருத்தாகும். அதனால், சம்பள அதிகரிப்பை மாத்திரம் மேற்கொள்ளும் பாதீடொன்று, நாட்டுக்கு உகந்ததாக இருக்காது. அத்துடன், நாட்டை அபிவிருத்திக்கு உள்ளாக்கும் விடயங்களும், இதில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பாதீடு மாத்திரமன்றி, பல பாதீடுகளின் நான் கவனித்த ஒரு விடயம் யாதெனில், பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் காணப்படும். ஆனால், அவற்றை மேற்கொள்வதற்காக நிதி இருக்காது. அதனால் தான், பல வேலைத்திட்டங்கள் முடங்கிப்போய் இருக்கின்றன.

இதனால், மக்களே ஏமாற்றப்படுகின்றனர். அதனால், முழுமையானதொரு பொருளாதார மற்றும் அபிவிருத்திக் கொள்கையொன்றை முன்வைக்காமல், பாதீடு பற்றிப் பேசிப் பிரயோசனமில்லை.
அந்த வகையில், தற்போதைய அரசாங்கமானது, செயன்முறையில் தோல்வி கண்டுள்ளது. பல விடயங்கள் பற்றிப் பேசினாலும், அவற்றைச் செயற்படுத்துவதில், இந்த அரசாங்கம் தோல்வியுற்றுள்ளது.

கே: உங்களைப் படுகொலை செய்வதற்கான சதி நடந்ததெனக் கூறப்படுகிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா? எவ்வாறு அதை எதிர்கொள்கிறீர்கள்?

இந்தச் சம்பவத்துக்கு முன்னரே, இவ்வாறான படுகொலைச் சதிகள் தொடர்பில், எனக்குச் சில தகவல்கள் கிடைத்திருந்தன. இருப்பினும், நான் ஓர் அரசாங்க ஊழியரல்லாததால், அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமலிருந்தது. ஆனால் இன்று, இவ்வாறான சதி முயற்சி தொடர்பில் தெரியவந்ததும், அது குறித்துத் தேடிப்பார்ப்பது, அரசாங்கத்தின் கடமையாகும்.
எவ்வாறாயினும், அவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றதென்பதை நான் நம்புகிறேன். காரணம், நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன். தவிர, பாதாள உலகக் கோட்டியினரைக் கட்டுப்படுத்தவும், மஹிந்தவின் காலத்தில் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வாறான விடயங்களை அடிப்ப​டையாகக் கொண்டே, என் மீதான அச்சுறுத்தல்களை நம்பவேண்டிய கட்டாயம் உள்ளது.

கே: 11 ​இளைஞர்கள் கடத்தல் விவகாரம் உங்களுக்குத் தெரியுமென, முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். உண்மையில் இது பற்றி நீங்கள் அறிந்திருந்தீர்களா?

தெரிந்திருக்கவில்லை. யுத்தத்தின் இறுதிக் காலத்தில், இது தொடர்பான பிரச்சினையொன்று ​தொடர்பில் என்னிடம் முறையிடப்பட்டது. அந்த உடனேயே நான், பொலிஸாருக்கு அறிவித்து, அது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தேன். இது தொடர்பான விசாரணைகளை, ஆரம்பத்தில், கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். பின்னர், அப்போதைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கிணங்க, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கடந்த 10 வருடங்களாகவே, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அப்போது அதற்கு என்னென்ன காரணங்கள் முன்வைக்கப்பட்டன என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. ஆனால், அந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, முதலில் நானே உத்தரவிட்டிருந்தேன்.

இது குறித்து அப்போதே, முன்னாள் கடற்படைத் தளபதியினால், எழுத்துமூலமும் வாய்மூலமும் வாக்குமூலம் வழங்கப்பட்டிருந்தது. அதில் என்ன குறிப்பிடப்பட்டிருந்ததென்று, எனக்கு நினைவில் இல்லை. அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று, இப்போது கைதுசெய்யப்பட்டவர்களே, அப்போதும் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்போது இது தொடர்பில் விசாரணை நடத்திவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே, அப்போதும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இப்போதும் இவ்விவகாரம் பற்றிய விசாரணைகள் தொடர்வதால், நான் அதைப்பற்றி மேலதிகமாக பேச விரும்பவில்லை.

கே: சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் போராளிகள் மற்றும் படையினரை விடுவித்து, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென, அரசாங்கத் தரப்பில் சிலர் கூறுகின்றனர். உண்மையில், பிரச்சினைக்கு இது தீர்வளிக்குமா?

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், சுமார் 12 ஆயிரத்து 800 போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நாம், எந்தளவுக்கு இயக்கத்துடன் தொடர்புபட்டார்களென, அவர்களிடமே கேட்டறிந்து, அவர்களை வகைப்படுத்தினோம். அதன் பிரகாரம், அவர்களை நாம், ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடங்களெனப் புனர்வாழ்வளித்தோம். பின்னர் அவர்களில் சிலரை, சிவில் பாதுகாப்புப் படையிலும் இணைத்துக்கொண்டோம்.

இது தவிர, எமது காலத்துக்கு முன்னர், அதாவது, நான், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவதற்கு முன்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்கள், பூஸா உள்ளிட்ட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரும் போது, அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை, சுமார் 5 ஆயிரமாகக் காணப்பட்டிருந்தது. அவர்களையும் நாம், மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்தி, பொலிஸாரின் உதவியுடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவித்தோம். அவ்வாறான நடவடிக்கைகளின் பின்னர், கடந்த 2014ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், 270 பேர் மாத்திரமே, தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதே சமயம், வழக்குகள் தொடரப்பட்டு, அதனூடாக தண்டனை விதிக்கப்பட்ட சிலரும் இருந்தனர்.
இவை தான், முன்னாள் போராளிகள் தொடர்பில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளாகும். தவிர, இராணுவத்தைச் சேர்ந்த சிலர் மீதான நடவடிக்கைகள், பயங்கரவாதத்துக்கு எதிராக எம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகக் குறை கூறிய ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகவே நான் பார்க்கிறேன். இருப்பினும், இதைத் தொடங்கியவர்களே அவர்கள் தான் என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். யுத்தத்தை நாம் தொடங்கவில்லை. மாறாக, நாம் தான் முடித்துக்கொடுத்தோம்.

70களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம், 80களில் உக்கிரமடைந்திருந்தன. யாழ்ப்பாண நூலக எரிப்பு, வீரசிங்கம் மண்டபம் தீயிடப்பட்டமை, மாவட்ட சபைத் தேர்தல்களின் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, தமிழ் மக்களுக்குக் கிடைத்திருந்த சந்தர்ப்பம் இல்லாதொழிக்கப்பட்டு, அந்தத் தேர்தலின் போது மோசடிகள் செய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் இடம்பெற்றன. இதனால் தான், 1978 முதல் 1994 வரையான ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் தான், பயங்கரவாதமும் பயங்கரவாத நடவடிக்கைகளும் உக்கிரமடைந்திருந்தன. இதற்குக் காரணம், அந்த ஆட்சிகளின் போது அவர்கள் முன்னெடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைகளே ஆகும்.

அவர்களால் இந்தப் பிரச்சினைக்கு சிறந்த முடிவொன்றைக் கொடுக்க சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் செய்யவில்லை. இப்போது ஆட்சியிலுள்ள ரணில் விக்கரமசிங்கவும், 77 முதலே அரசியலில் இருந்தார். அவர்களுடைய காலம், அதன் பின்னரான சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலும் முடிவு கிட்டவில்லை. அதற்குப் பிறகு தான், அதாவது, பயங்கரவாத நடவடிக்கைகளின் உச்ச கட்டத்தில் தான், எம்மிடம் ஆட்சி கையளிக்கப்பட்டது. யார் என்ன சொன்னாலும், 3 வருடங்களுக்குள் நாம் அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தோம்.

இவ்வாறு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிய அதிகாரிகளுக்கு எதிராக, அநாவசியமான முறையில், கொலைகாரர்கள், மோசடிக்காரர்கள், திருடர்களெனக் குற்றச்சாட்டுகளைத் திணித்தும் யுத்தம் முறையாக நடத்தப்படவில்லை என்று கூறியும், உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும், எமது நாட்டையும் படையினரையும் இழிவுக்குள்ளாக்கும் வகையில் தான், பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேடமாக, சில சர்வதேச நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப தான், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரிதொரு சந்தர்ப்பத்தில், பிரிதொரு நபர், ஒரு குற்றத்தை மேற்கொண்டாரெனில், அதற்கு தண்டனை வழங்குவது வேறு விடயம். ஆனால், அவ்வாறு தண்டனை வழங்காமல், அதை அரசியல் ரீதியில் கையாள்வது தவறாகும்.

கைதுகள் பற்றிப் பேசுகிறார்கள். அந்தக் காலப்பகுதியில், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பலரும் கைது செய்யப்பட்டார்கள். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டார்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவ்வாறு கைதுசெய்யப்பட்டது தவறு என்றால், அது குறித்து, பொலிஸார் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். காரணம், பொலிஸாரிடம், கைதுகள் தொடர்பான பதிவுகள் இருந்திருந்தன. உதாரணமாக, இளைஞர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதியிடம் முறையிட்ட போது, அது குறித்து நடவடிக்கை எடுப்பது தவிர, அவரால் வேறு என்ன செய்திருக்க முடியும். யுத்தமொன்று நடந்துகொண்டிருக்கும் போது, கடற்படைத் தளபதியாக இருக்கும் ஒருவரால், இவ்வாறான கடத்தலோ கைதோ தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பொலிஸாரைத் தான் பணிக்க முடியும். இதைவிடச் செய்யவேண்டிய கடமைகள் பொறுப்புகள் அவருக்கு இருந்தன. இவ்வாறிருக்க, வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்த, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டதா? இங்கு தான், அரசியல் தலையீடு விளையாடி இருக்கிறதென்று நான் கூறுகிறேன்.

கே: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்கத் தயாரெனக் கூறியிருக்கிறீர்கள். அந்த மாற்றம், தமிழர்களுக்கு எவ்வாறு சாதகமாக அமையும்?

மாற்றம் என்பது மிக முக்கியமான விடயமாகும். இப்போதுள்ள அரசாங்கமும், மாற்றத்தை மேற்கொள்வதாகத் தான் வந்தது. ஆனால், நான் கூறும் மாற்றம், அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். நாட்டு மக்கள் என்ற ரீதியில் பார்க்கும் போது, தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என, அனைத்தின மக்களும் இங்கு உள்ளனர். அவரவர்களுக்கென்று, வாழ்க்கை முறை, கலாசாரம், வரலாறு, மதச் செயற்பாடுகள் என பல உள்ளன.

இருப்பினும், இவர்கள் அனைவருக்கும் உள்ள மிக முக்கிய பிரச்சினையானது, அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. இந்தப் பொதுப் பிரச்சினை தொடர்பில் கவனிக்காததால் தான், இலங்கை சுதந்திரமடைந்து 72 வருடங்களாகின்ற போதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி உள்ளது. தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் எனப் பலரும், கடந்த 72 வருடங்களாகவே இப்பிரச்சினைகள் பற்றிப் பேசிவருகின்ற போதிலும், சரியான பிரச்சினை என்னவென்று அடையாளம் காணப்படாததால் தான், இன்றும் தீர்வின்றி உள்ளோம்.

சிங்களவர்களாயினும் தமிழர்களாயினும், முஸ்லிம்களாயினும், பொருளாதார ரீதியில் வாழ முடியாதுள்ள மக்களுக்கே, இங்கு பிரச்சினை உள்ளது. அதை நாம் இடையாளம் கண்டுகொள்ளவில்லை. வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி, தெற்கிலும் சரி, அனைவருக்கும் ஒரே பிரச்சினையே உள்ளது. அது தான், வாழும் உரிமையாகும். அவர்களுக்கு, அன்றாடம் வாழ்வதற்குரிய வருமான வழியொன்று காணப்பட வேண்டும். பின்னர், அவர்கள் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அவர்களுடைய பிள்ளைகளுக்கு, சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். சுகாதாரம் இருக்க வேண்டும். சிங்களம், தமிழ், முஸ்லிம் என யாராக இருந்தாலும், பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருந்தால், இந்தப் பிரச்சினைகள் எவையும் அவர்களுக்கு இருக்காது.

இவை தவிர, ஒரு மனிதன், கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் வாழ வேண்டுமெனக் கூறுவதாயின், பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தவர்கள், இந்தக் கௌரவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையா? இந்த இடத்திலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாயின், நாட்டில் வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்த நாட்டில், சுமார் 30 வருடங்களாக, நாட்டில் யுத்தம் நிலவியதால், வடக்கும் கிழக்கும், எந்தவோர் அபிவிருத்தியையும் காணவில்லை என்பதை, நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால், அங்குள்ள மக்கள், பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். ஆனால் நாம், யுத்தத்தின் பின்னரான ஐந்து வருடக் காலப்பகுதிக்குள், வடக்கு, கிழக்குக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இந்த 5 வருடங்களில் தான், நிலக்கண்ணி வெடி அகற்றல், மீள்குடியேற்றம், புனழ்வாழ்வு மற்றும் இந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அடுத்ததாக, கைத்தொழிற்றுறைகளை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தோம். இருப்பினும், குறித்த மாகாணங்களில், திறன் அபிவிருத்தியை மேற்கொள்ளாது, தொழிற்றுறைகளை ஆரம்பிக்க முடியாதென, முதலீட்டாளர்கள் பின்வாங்கினர். அதனால், மனிதவலு மேம்பாடுகளுக்கான பணிகளை முன்னெடுத்தோம். இவை தான் அடிப்படைகள். ஆனால் அவற்றைப் பலரும் மறந்துவிட்டனர்.

தெற்கில் இருக்கும் வசதிகள், வடக்கில் இல்லையென, வடக்கு மக்களது மனங்களில் குடிகொண்டிருக்கும் எண்ணத்தைப் போக்கினால், எந்தப் பிரச்சினையும் இல்லையென்பதை, நாம் புரிந்துகொண்டோம். 72 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் அதிகாரப் பரவலாக்கல் மூலம், பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர, குறையப்போவதில்லை. என்ன தான் செய்தாலும், மத்திய அரசாங்கம் தானே நிதியைக் கொடுக்க வேண்டும். அப்படியில்லையாயின், மாகாண சபையை எவ்வாறு நடத்துவது? அதனால், மேல் மாகாணத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த அபிவருத்திகளை, ஏனைய மாவட்டங்களுக்கும் கொண்டுசெல்லத் தான், எமது அரசாங்கத்தின் போது நாம் முயற்சித்தோம்.

அன்று தெற்கில் கலவரம் இடம்பெற்றபோது, ஹம்பாந்தோட்டை மாவட்டம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் தான், அங்கு அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். அதனால் இன்று, அங்கிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து, விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளவும், வர்த்தகங்களை முன்னெடுக்கவும், மீன்பிடித்துறையை வலுப்படுத்தவும் முடிந்துள்ளது. இவை கிடைத்த பின்னர், அவர்களுக்கு இந்த அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசத் தேவைப்படாது.

1982ஆம் ஆண்டில் இ​டம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ஓரிரு மாவட்டங்களிலிருந்து கிடைக்க அதிக வாக்குகளால், கொப்பாகடுவ வென்றார். அந்த ஓரிரு மாவட்டங்களில் ஒன்று தான், யாழ்ப்பாணமாகும். காரணம், யாழ். விவசாயிகளுக்கு, சின்ன வெங்காயம், மிளகாய், கிழங்கு, புகையிலை போன்றவற்றை மேற்கொள்வதற்கும் அவற்றை, தெற்கு உள்ளிட்ட நாடு முழுவதிலும் சந்தைப்படுத்தவும் வாய்ப்பு கிட்டியிருந்தது. அப்போது அங்கு, நல்ல வருவாய் இருந்தது. அது விவசாயத்தினூடான வருவாயாக இருந்தது. ஆனால், 77களில், ஜே.ஆரினால் கொண்டுவரப்பட்டிருந்த திறந்தப் பொருளாதாரக் கொள்கை காரணமாக, அந்த விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனால் தான், அவருக்கு எதிராக அவர்கள், 1982இல் வாக்களித்தனர்.

​மக்களின் அடிப்படைப் பிரச்சினை தான் பொருளாதாரமாகும். இந்தப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல், சிங்களம், தமிழ், முஸ்லிம் என எந்தவொரு தரப்பினரும், சிறப்பாக வாழ முடியும்.

கே: ஜெனீவா தலையீட்டை, எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதை எவ்வாறு கையாளலாம்?

​இது, எம்மீது அநாவசியமாகத் திணிக்கப்பட்ட பிரச்சினையாகும். இது எம்முடைய பிரச்சினை. அதனால், நாம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். எம்முடைய ஆட்சிக் காலத்தில், அதற்கான திட்டங்கள் இருந்தன. அதனூடாகத் தான், புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பன மேற்கொள்ளப்பட்டன. அதனால், வேறொரு நாட்டுக்குத் தேவையான விடயங்களை நாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. வெளிநாடொன்றின் நிகழ்ச்சி நிரல் தான், இங்கு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

கே: எப்போது உங்களுடைய அரசியல் பிரவேசம்?

புன்முறுவலுடன்... அரசியல் என்பதை விட, நாடாளுமன்றத்துக்கு வரவோ மாகாண சபைகளுக்கு வரவோ, எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை. இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குமாறு, மாபெரும் கேள்வி நிலவுகிறது.

2004ஆம் ஆண்டில், அமெரிக்காவிலிருந்து வந்து, ஜனாதிபதித் தேர்தலுக்காகப் பணியாற்றி, ஜனாதிபதியாக மஹிந்த வென்ற பின்னர், மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாரானேன். அப்போது, ஜனாதிபதி என்னை அழைத்து, நீங்கள் இராணுவத்தில் இருந்தவர் என்ற ரீதியில், நாட்டில் நிலவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பு, உங்களுக்கு இருக்கின்றதெனவும் அதற்காக, பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஏற்றுப் பணியாற்றுமாறும் கூறினார். அதை நான், பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டேன்.

இன்றும், அதேபோன்றதொரு கோரிக்கை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கிடைத்து வருகின்றது. அதனால், அதையும் பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் பொறுப்பு, எனக்கு இருக்கின்றதென நான் நம்புகிறேன். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நான் வருவேன்.

கே: இந்தத் தீர்மானத்துக்கு, உள்வீட்டிலேயே எதிர்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே...


அப்படி இல்லை. நிச்சயமாக, எமது குடும்பத்துக்குள் அவ்வாறு இல்லவே இல்லை. அவ்வாறு எதிர்க்கக் காரணமும் இல்லை. காரணம், முதலில் இந்தக் கோரிக்கையை, குடும்பத்தினர் தான் முதலில் முன்வைத்தார்கள். ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு எதிரானவர்கள் இருக்கக்கூடும். ஆனால், மக்களுக்குத் தேவையான​வரைத் தானே மக்கள் தீர்மானிப்பார்கள். அதனால் தான், முன்னாள் ஜனாதிபதி, என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கே: அமெரிக்கப் பிரஜாவுரிமை, இதற்குப் பாதகமில்லையா? அதற்கு, உங்களுக்கு எதிராக, அந்நாட்டிலுள்ள வழக்குகள் தடையாக இல்லையா?

பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். குறுகிய காலத்துக்குள், அந்தப் பணிகள் முடிவுறும். தவிர, எனக்கெதிராக வழக்கு இல்லை. அப்படி இருந்தாலும், பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கு, அது தடையாக அமையாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .