2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அரசியல் ஆசை’

மொஹமட் பாதுஷா   / 2019 ஜூலை 14 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, இனத்துவ நகர்வுகளுக்குப் பின்னால், ஓர் அரசியல் ஆசையும் பதவி மோகமும் ஒளிந்து கொண்டிருக்கிறது.

உலக அரசியலின் விளையாட்டுப் பொருள்களாகவே மக்கள் சமூகத்தைக் கருத வேண்டியிருக்கிறது. 

எனவே, அரசியல், மக்களுக்கு (நல்லது) எதையும் சாதிக்க முடியவில்லை என்றாலும் அரசியலுக்காக ‘அவர்கள்’ எதையும் செய்வார்கள் என்ற அடிப்படையில் புரிதல் இன்றி, உலக அரசியலையோ, இலங்கைச் சம்பவங்களையோ  திறனாய்வு செய்ய முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

உலகில் நாமறிந்த நிதர்சனங்களின் அடிப்படையில் நோக்கினால், உரிமைகளுக்காக, இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக, மக்களின் நலனுக்காக யுத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, யுத்தங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருப்பது மேற்சொன்ன காரணங்களுக்காக அல்ல.

மாறாக, உலகில் பல யுத்தங்கள் ஆயுத  வியாபாரத்துக்கானவையே. இவை, நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகின்ற நாடுகளின் வகிபாகம் மிக முக்கியமானவைகளாக இடம்பிடித்துள்ளன.

நோய் நிவாரணிகளையும் மாத்திரைகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக, நோய்களை உருவாக்கும் சில பல்தேசிய மருந்தப்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஒரு மாத்திரையில் இருந்து வேறொரு பக்கவிளைவு நோயை உண்டு பண்ணி, அதற்காக இன்னுமொரு மாத்திரையை விற்பதில் இன்பம் காணும் மாபியாக்கள் போலவே, உலகில், சமூக அரசியலில் பல கதாபாத்திரங்கள் உள்ளன.

அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் ஆட்புலங்களைத் தம்வசப்படுத்தும் பேராசைகளை அடைந்து கொள்ளவே, இனவாதமும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்த்து விடப்படுகின்றன.

இன்று உலகில் அதிகமான நாடுகளில் நடக்கின்ற உள்நாட்டுக் கலவரங்கள், மோதல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், வன்முறைகள், இனவன்முறைகள் ஆகியவை வௌித்தோற்றத்தில் எவ்வாறு காட்சியளித்த போதிலும்கூட, அதன் ரிஷிமூலங்கள் பெரும்பாலும் மேற்குறிப்பிட்ட காரணங்களாகவே இருக்கும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னர், இன்னுமோர் உலக மகாயுத்தம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே, ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதன்படி, ஐ.நா சபையால் இதுவரை உலக யுத்தமொன்று, மீளுருவாக்கம் பெறுவதைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கின்றது. என்றாலும், பெருமளவிலான உலக நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இனமோதல்கள், இனக்கலவரங்களைத் தடுக்க முடியவில்லை என்பதே நமது கவலையாகும்.

இத்தகைய உலகின் போக்குக்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையிலும் பேருந்தேசிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின், அரசியல் பதவி ஆசைதான், நமது நிகழ்கால கசப்பான அனுபவங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அரசியல் மாற்றங்கள், இனப்பிரச்சினை தொடர்பான நகர்வுகள், நாட்டின் வளர்ச்சி என்பவற்றில் மட்டுமன்றி, இனஉறவாலும் பெரும்தேசிய அரசியல் பெரும் செல்வாக்கைச் செலுத்திவருகின்றது.

1915ஆம் ஆண்டு, சிங்கள - முஸ்லிம் கலவரம், 1958, 1970களில் நாட்டில் நடந்தேறிய கலவரங்கள், 1983 ஜூலைக் கலவரம், 2014 அளுத்கம கலவரம், 2018 திகண, அம்பாறைக் கலவரங்கள், 2019இல் வடமேல் மாகாண இனவன்முறைகள் என எல்லாவற்றுக்கும் பின்னாலும் ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அவற்றுக்குப் பின்னால் மட்டுமன்றி, உள்நாட்டில் நிலைகொண்டுள்ள இனவாதம், இலங்கைக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதத்தின் நதிமூலங்களும் அரசியல், பதவி ஆசையுடன் தொடர்புபட்ட நிகழ்ச்சிநிரலின் பாற்பட்டது என்ற சந்தேகம் வலுவடைந்து செல்கின்றது.

இலங்கையின் அரசியலை திரைமறைவில் இருந்து கடும்போக்குவாதிகள்தான் இயக்குகின்றனர் என்றால் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. இருப்பினும்  தமது விருப்பப்படி ஆட்சியாளர்கள் ஆட அடம்பிடிக்கின்ற சந்தர்ப்பங்களில் இனவாத சக்திகளே நேரடியாகக் களத்தில் இறங்கிக் கொண்டுவிடுகின்றன. இப்படியான ஒரு தருணம் இருப்பதாக ஏற்கெனவே, நாம் இப்பத்தியில் கூறிய எதிர்வுகூறல்கள் நடக்கும்போல்த்தான் தெரிகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பொதுபல சேனா அமைப்பின் தலைமையில் கண்டியில் ஒரு மாநாடு நடைபெற்றது. ‘யானை அடிக்கும் முன்னரே தாமே அடித்துக் கொள்வது போலவே’, முஸ்லிம்கள் சற்று அஞ்சியிருந்த போதிலும் அந்தக்கூட்டம் பிசுபிசுத்துப் போனது என்றுதான் மேலோட்டமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், பௌத்த கடும்போக்கு அமைப்புகள், தமது அரசியல் ஆசையை வௌிப்படுத்தி உள்ளதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. 

ஏற்கெனவே, மஹிந்த, மைத்திரி, ரணில் என்று தீவிரமான அரசியல் ஆசையை மய்யமாகக் கொண்டு போட்டிபோடும் அரசியல் இருக்கின்றது. ஜே.வி.பி போன்ற மூன்றாவது சக்திக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது பற்றியும் பேசப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் சிங்கள - பௌத்த அரசாங்கமொன்றை நிறுவவேண்டும் என்ற, கோஷத்தை சிங்களக் கடும்போக்கு சக்திகள் பிரசாரப்படுத்தத் தொடங்கியுள்ளன. 

சமகாலத்தில், சற்றுமுன்னதாகத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வமற்றிருந்து, இலங்கையின் பழங்குடியினரான வேடர்களும் தேர்தலில் குதிப்பது பற்றி அறிவித்துள்ளனர். கண்டியில் ஞானசார தேரர் பேசிய விடயங்களும் வேடுவ சமூகத்தின் தலைவர் வௌியிட்டுள்ள அறிவிப்பும் சரிசமமான கண்ணோட்டத்துடன் நோக்கப்பட வேண்டியதாகின்றன. 

கண்டியில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரைநிகழ்த்திய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், “சிங்கள -பௌத்த அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டும். இது பௌத்த நாடு. எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியிருந்தார். 

இவரது முழுமையான உரையைக் கேட்கின்றபோது, ஞானசார தேரர் போன்ற கடும்போக்குவாதி அல்லது பௌத்ததுறவி ஒருவர் நேரடியாக அரசியலில் இறங்கலாம். அன்றேல், அவர்களது முழுப் பின்புலத்துடனான ஆட்சி, ஒன்றை நிறுவ, அனைத்து பௌத்த கடும்போக்கு இயக்கங்களும் முன்னிற்க வாய்ப்புள்ளது.   

இலங்கையில் மூவினங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் சீர்குலைந்ததற்கும் முஸ்லிங்களுக்கிடையில் உள்ளார்ந்த ஒற்றுமை இல்லாது போனதுக்கும் அரசியல் முக்கிய காரணியாக இருக்கின்றது.

1956ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம், அதற்குப் பின்னரான கட்டமைப்பு மாற்றங்கள், தமிழர்கள் பெருந்தேசியக் கட்சிகளின் உறவில் இருந்து விலக அடிப்படையாக அமைந்தது. ஜூலைக் கலவரத்தின் பின்னர், தனிவழியில் பயணிக்க வேண்டிய நிலை இன்னும் அதிகமானது எனலாம். 

இதேபோன்று, பெருந்தேசியக் கட்சிகளுடன் பயணித்துப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலில் கைகோர்த்து அரசியல் செய்து வந்த முஸ்லிம் அரசியல் வாதிகளில் கணிசமானோர், தனித்துவ அடையாள அரசியலை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

பெரும்பான்மைக் கட்சிகளின்போக்கு, தமிழ்த் தேசிய அரசியலானது, தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு அஞ்சி நட்பதாகத் தோன்றியமை, விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ஆயுதங்களுடன் முன்னெடுத்தமை போன்ற காரணங்களே, முஸ்லிம் அரசியல் தனித்துவ அடையாள அரசியலுக்குள் பிரவேசிக்க நிர்ப்பந்தம் செய்தன.  

அதன்பிறகு, தேசிய அளவில் என்பது, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைத் தனித்தனியாகக் கவனிக்கும் அரசியல் கட்சிகளால் நிரம்பியது. இது இனங்களுக்கு இடையிலான உறவையும் ஒற்றுமையையும் வெகுவாகச் சிதைத்தது. அதேவேளை, ஒவ்வோர் இனமும் அரசியல் போன்ற காரணங்களால் தங்களுக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டது வேறுகதை.

இந்த எல்லாக் காலங்களிலும் இனவாதம் பெரும் வகிபாகத்தை எடுத்திருக்கின்றது. இனவாத அரசியல்வாதிகளின் காய்நகர்த்தல்கள் படுமோசமான சமூக விளைவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளன.

 இனவாத பின்புலம் மற்றும் கடும்போக்கு அரசியல்வாதிகளாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால், ‘இனவாதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், நேரடியாக அரசியலுக்குள் நுழைவது எந்தளவுக்குப் பாரதுரமானது என்பதை விவரிக்க வேண்டியதில்லை. 

முன்னதாக, பல பௌத்த கடும்போக்கு இயக்கங்கள் அரசியலுக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கால்பதித்தன. ஜாதிக ஹெல உறுமய இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. வெறும் பௌத்த நாடு, சிங்கள தேசம் என்ற கோஷத்தோடு அரசியல் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஹெல உறுமய களமிறங்கியது. ஆனால், அவர்களது சரக்கை எதிர்பார்த்த அளவுக்குச் சந்தைப்படுத்த முடியில்லை.

இப்போது அதே சரக்கை பொதுபல சேனா அல்லது வேறு ஏதாவது பௌத்த முன்னணி என்ற பெயரில் பொதி செய்து விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகின்றது. ஞானசார தேரரின் கருத்து சாடைமாடையாக அதையே உணர்த்துகின்றது.

உண்மையில், பௌத்த துறவிகள் அரசியலுக்கு வந்த பிறகே, ‘மதகுருமார் அரசியலில் ஈடுபடக்கூடாது’ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. அது இப்போது வலுவடைந்துள்ள சூழலிலேயே, பௌத்த இனவாதச் சக்திகள் தேர்தலில் போட்டி இடுவதற்கான அல்லது தாம் விரும்பிய, இனவாத சிந்தனை உள்ள ஆட்சியாளரைக் கொண்டுவர பகிரதப் பிரயத்தனங்களை எடுத்து வருவதாகச் சொல்ல முடியும். இதில் எது நடந்தாலும் சிறுபான்மை இனங்களுக்குக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஆபத்துத்தான்.

இதேவேளை வேடுவர் சமூகத்தின் தலைவரும் தேர்தலில் போட்டியிடவுள்ளது போன்ற அறிவிப்பை மேற்கொண்டு இருக்கின்றார். இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மை என்றாலும் இந்த நாட்டுக்கு உரிமை கோர மிகவும் தகுதிவாய்ந்த பழங்குடியினரான வேடுவர் சமூகத்தின் அரசியல் அதிகாரம் வேண்டும் என்ற ஆசை, விமர்சனத்துக்கு உரியது அல்ல.

ஆனால், காவியுடை தரித்த, புத்தரின் அகிம்ஷை  வழிமுறைகளைப் பின்பற்றாத சக்திகள் அரசியலுக்குள் வருவதானது, இனரீதியாக மட்டுமன்றி, இலங்கை மக்கள் மதரீதியாகவும் பிளவுபடுத்தப்பட்டு துண்டாடப்பட வழிவகுக்கும். இது இனஉறவைக் கடுமையாகப் பாதிப்பதுடன், இனமுறுகலைக் கொதிநிலையிலேயே வைத்திருக்கும். 

இரு நாடுகளில் ஆடை விவகாரம் 

ஆடை என்பது உலக நாகரிகத்தின் முக்கிய கூறாக இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், தென்கிழக்காசிய நாடுகள் இரண்டில் கடந்த இரு தினங்களுக்குள் இரு முக்கிய சட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

முதலாவது விடயம், இலங்கையில் அபாயா, புர்கா, நிகாப் போன்ற முஸ்லிங்களின் ஆடைகளுக்காகவும் ஆடைகளுக்கெதிராகவும் அதேபோன்று முஸ்லிங்களின் தனித்துவ அடையாளங்களுக்கெதிராகவும் அண்மைக் காலமாக  பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் பாடசாலைகளில் அபாயா, நிகாப், ஹிஜாப் போன்ற ஆடைகளை அணிந்து செல்வதற்குத் தடை விதிக்கப்படுகின்றமைக்கெதிராக முஸ்லிம் ஆசிரியை ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

அதேநேரம் மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தியாவில் புர்கா அணிவதற்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. 

இவை இரண்டும் ஆடை விவகாரத்தில், இரண்டு நாடுகளின் உயர் நீதிமன்றங்கள் மேற்கொண்ட முக்கியமான இரு தீர்மானங்களாகக் கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே, முஸ்லிங்களின் ஆடைகள்,  தனித்துவ அடையாளங்களுக்கெதிரான விமர்சனங்களைக் கடும்போக்குச் சக்திகள் முன்வைத்து வருகின்ற சூழ்நிலையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் முன்னதாக வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு எதிராக, முஸ்லிங்கள் குரல் எழுப்பியமையை அடுத்து, அந்தச் சுற்று நிரூபம் திருத்தப்பட்டது. இருப்பினும் அந்தத் திருத்தப்பட்ட சுற்று நிரூபத்தில் மயக்கமான வார்த்தைகள் காணப்படுகின்ற அதேநேரத்தில், முஸ்லிம்கள் அபாயா அல்லது அபாயாவுடன் ஹிஜாப் அணிந்து செல்லலாம் என்ற வார்த்தை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. 

பாடசாலைக்கு அபாயா, ஹிஜாப் அணிந்து செல்வதற்குப் பாடசாலை நிர்வாகங்கள்,  அரசு தடை விதித்துள்ளமையை இடைநிறுத்தி, உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு பாடசாலை ஆசிரியை ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்களான சீ.சீ.டி.அப்று முறுது பெர்ணான்டோ, எஸ். துரைராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் முஸ்லிங்களின் அபாயா அணியும் உரிமையை மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் பெண் ஒருவர் தனது ஆடையை அணிவதற்கு உரிமை வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள சமகாலத்தில், இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட் ஒரு மனுவை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது.

உலக வரலாற்றின் படி, நாகரிகம் என்பது கூர்ப்படைதலோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகக் கருதப்படுகின்றது. அதாவது, மனிதன் எவ்வாறு கூர்ப்படைந்து இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றானோ அதுபோலதான் நாகரிகமும் கூர்ப்படைந்திருக்கின்றது. 

நாகரிகத்தின் வளர்ச்சி, கூர்ப்படைதல் என்பது பெரும்பாலும் ஆடை சார்ந்ததாக வந்திருப்பதை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்த நிலையில் ஒரு பெண், ஓர் ஆண், தனது உடலை எந்தளவுக்கு கூடுதலாக மறைக்கிறாரோ அதுவே நாகரிகத்தின் உச்சமாகக் கொள்ளப்பட வேண்டும். உண்மையாக, ஆடை அணியத் தொடங்கிய விடயம், நாகரிகத்தின் வளர்ச்சி என்றிருந்தால், ஆடையை உடம்பு முழுமையாக மறையும்படி அணிவதென்பது நாகரிகத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். 

இலங்கையில் முஸ்லிம்கள் பாதுகாப்புக்கு இடமளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் முகத்தை முற்றாக மூடிய ஆடை அணிவதற்கெதிரான தடைக்கு முஸ்லிங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி, முகத்தை மூடாத ஆடைகளை அணிந்து வருகின்றனர். இது பல்லின நாடொன்றில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விதிமுறையும்கூட. 

ஆனாலும், சாதாரணமாக உடம்பையும் ஏனைய பாகங்களையும் மூடி அணிகின்ற அபாயா போன்ற ஆடைகளை அணிவதற்கு தடைவிதிக்குமாறும் முஸ்லிங்களின் ஏனைய மத, இன அடையாளங்களின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் விதத்திலும் கோசங்கள் எழுப்பப் படுவது, இலங்கையின் நல்லிணக்கத்தை இன்னமும் கீழ் நோக்கி இட்டுச்செல்லும் என்பதை மறந்து விடக்கூடாது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .