2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரசியல் சட்டத்தைக் காத்த இந்திய உச்சநீதிமன்றம்

எம். காசிநாதன்   / 2018 மே 21 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் மாட்சிமையை, இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது. 
கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள், தொங்கு சட்ட மன்றத்தை உருவாக்கியது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், 104 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

ஆட்சியிருந்த காங்கிரஸ் கட்சி, 78 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, ஆட்சியை இழந்திருக்கிறது. ஆனால், இந்த இரு தேசியக் கட்சிகளுக்கும் இடையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில், 38 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்திய அரசியல் சட்டமும், யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் கர்நாடக மாநில ஆளுநரும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றனர். 

கர்நாடக சட்டமன்றத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அதில், இரு தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கவில்லை என்பதோடு, ஜனதா தளத்தின் குமாரசுவாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஒரு தொகுதியில் இருந்து இராஜினாமாச் செய்யவேண்டும். எனவே, 221 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 111 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் கட்சி, பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதாகக் கருதி, அந்தக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத் தலைவரை, ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். 
ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை  கிடைத்து விட்டால், ஆளுநரின் ஆட்சி அமைக்கும் பணி, மிகவும் எளிதானதாகவே அமைந்து விடுகிறது.  

ஆனால், தொங்கு சட்டமன்றம் என்ற நிலை, கர்நாடகாவில் உருவானதால் ஆளுநரின் பணி, சற்றுச் சிக்கலாக அமைந்து விட்டது. 

கத்தி மேல் நடப்பது போல், நடுநிலை தவறாத ஆளுநர்களின் எண்ணிக்கை காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, பா.ஜ.க ஆட்சியிலும் சரி, குறைந்து விட்டது என்பதுதான் யதார்த்தமான நிலைமை. 

மாநில அரசாங்கங்களைக் கலைக்கும் அரசமைப்புப் பிரிவு 356ஐ தங்கள் விருப்பப்படி மட்டுமல்ல, தங்களை ஆளுநர்களாக நியமித்த, மத்திய அரசாங்கத்துக்கு விசுவாசமாகச் செய்தவர்கள்தான் அதிகம் என்பதை இந்திய வரலாறு உணர்த்துகிறது. 

ஒரு சில ஆளுநர்கள் மட்டுமே அதற்கு விதிவிலக்காக இருந்திருக்கிறார்கள். 1989இல், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்கு, அப்போது ஆளுநராக இருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பர்னாலா, “அரசாங்கத்தைக் கலைக்க அறிக்கை தர முடியாது” என்று, மத்திய அரசாங்கத்துடன் மோதியிருக்கிறார். ஆனாலும் உச்சநீதிமன்றம், ஆட்சிக் கலைப்பு விவகாரத்தில் தலையிட்டு, 

எஸ்.ஆர் பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு, இன்றளவும் அரசியல் சட்டத்தில் உள்ள ஆட்சி கலைப்பு அதிகாரத்தை, மாநில ஆளுநர்கள் தங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாமல், தடை விதித்திருக்கிறது.   
அதேநேரத்தில், ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரத்தில், இன்னும் ஆளுநர்கள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம், ஆளுநரின் விருப்ப அதிகாரத்துக்குள் வருகிறது. அதாவது இந்த விடயத்தில், அவர் தன் விருப்பப்படி முடிவு எடுக்கலாம். அதாவது, முதலமைச்சரை நியமிப்பது என்பது, ஆளுநரின் விருப்ப அதிகாரம். ஆனாலும், அப்படி நியமிக்கப்படும் முதலமைச்சரால், சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற முடியுமா என்ற முக்கிய கேள்வியை, ஆளுநர் உறுதி செய்து கொள்ள வேண்டும். 

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தமட்டில், பா.ஜ.கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எ.ல்.ஏக்கள் 104 பேர் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். 

அதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாத் தளக் கட்சியும் சேர்ந்து, 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கடிதம் கொடுத்து விட்டார்கள். 

ஆகவே, பெரும்பான்மை என்பது  மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்படும் குமாரசாமிக்குத்தான் இருக்கிறது. ஆகவே, கர்நாடக ஆளுநர், குமாரசாமியைத்தான் முதலமைச்சராகப் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும். 

ஆனால், கர்நாடக ஆளுநர் வகேலாவோ, பா.ஜ.கவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராகப் பொறுப்பேற்க அழைத்து, காலை ஒன்பது மணிக்கே, பதவிப் பிரமாணமும் செய்து வைத்துவிட்டார்.   

“மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க இருக்கிறது” என்று, காரணத்தைச் சொல்லி ஆளுநர்  அழைத்திருந்தாலும் ஏற்கெனவே, இந்தியாவின் மற்ற மாநிலங்களான கோவா, மனிப்பூர், மேகாலயா, பீஹார் போன்ற மாநிலங்களில், தனிப்பெரும் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கும் கட்சியை, தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க அழைக்கலாம். ஆனால், பெரும்பான்மையே இல்லாத ஒரு தனிப்பெரும் கட்சியை, ஆட்சி அமைக்க அழைப்பது, குதிரைப் பேரத்துக்கே வித்திடும். 

அது மட்டுமின்றி, எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க, கர்நாடக ஆளுநர், 15 நாள் கால அவகாசம் கொடுத்தமையானது. அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. 

ஏற்கெனவே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அவரது துணைவியார் ஜானகி எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். அப்போதிருந்த தமிழக ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க, 21 நாள் கால அவகாசம் கொடுத்தார். அந்தநேரத்தில் இருந்ததைவிட, இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் விழிப்புணர்வும் அதிகரித்து விட்டன. இந்தக் காலகட்டத்தில், இப்படி 15 நாள் கால அவகாசம் அளித்தமை, அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  

இந்தமுறை மிக அதிரடியாக, காங்கிரஸ்  களத்தில் இறங்கியது. கர்நாடகத் தேர்தல் முடிவுகள், தங்களுக்குச் சாதகமாக இல்லை என்றதும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தது. 

78 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு, 38 எம்.எல்.ஏ கொண்டுள்ள கட்சியைச் சேர்ந்த குமாரசாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டது. “இது சந்தர்ப்பவாதம்” என்று பா.ஜ.க பிரசாரம் செய்தாலும், “மதசார்பற்ற இந்தியாவை வலுப்படுத்த, பா.ஜ.கவை ஆட்சிக்கு வரவிட மாட்டோம்” என்று காங்கிரஸ் கட்சி, போர்க்கொடி தூக்கியது. 

அதுமட்டுமின்றி, பா.ஜ.கவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விட்ட உடன், உச்சநீதிமன்றத்தை நள்ளிரவில் அணுகியது காங்கிரஸ் கட்சி. 

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், தூக்குத் தண்டனை பெற்ற யாகூப் மேமன் வழக்கை, நள்ளிரவில் விசாரித்து, ‘தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம்’ என்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். அதன் பிறகு, கர்நாடக ஆளுநரின் முடிவை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்குத்தான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது நள்ளிரவு விசாரணையாகும். 

இதில் காங்கிரஸ் கட்சிக்கு, உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை. எடியூரப்பா பதவியேற்பு விழாவுக்குத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் முன்வரவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமையே மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையில்தான், கர்நாடக சட்டமன்றத்தில் 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று, புதிய முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டிருந்தது. 

சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், தற்காலிக சபாநாயகர் தெரிவு, வாக்கெடுப்பு எல்லாம் ஒரே நாளில் நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது, வரலாற்றுச் சிறப்பு மிக்க, முதலாவது உத்தரவு. 

தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க, அறுதிப் பெரும்பான்மையுள்ள கட்சி முதலில் அழைக்கப்படும். அப்படியில்லையென்றால், தேர்தலுக்கு முன்னர் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகளின் சார்பில், தெரிவு செய்யப்படும் முதலமைச்சர் வேட்பாளருக்கு அழைப்பு விடுக்கப்படும். மூன்றாவதாக, தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்துக் கொண்ட கட்சிகளின் சார்பில் தெரிவு  செய்யப்படும் முதலமைச்சர் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். 

தொங்கு சட்டமன்றத்தைப் பொறுத்தமட்டில், தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணியை சில கட்சிகள் அமைத்துக் கொண்டு, அவர்களின் சார்பில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால், அவரைத்தான் மாநிலத்தில் உள்ள ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். 

கோவா, பீஹார், மணிப்பூர், மேகாலாய ஆகிய மாநிலங்களில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள்தான் பதவியில் இருக்கிறார்கள். கர்நாடகாவில் மட்டும்தான் அந்த விதியை மாற்ற, ஆளுநர் வகேலா முயன்றார். உச்சநீதிமன்றம் அவர் தலையில் குட்டு வைத்து, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நிலைநாட்டியிருக்கிறது. 

உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்த உத்தரவு, எதிர்காலத்தில் சட்டவிரோதமாகத் தனக்கு பிடித்த கட்சியின் வேட்பாளரை முதலமைச்சராக்கும் மாநில ஆளுநர்களின் போக்குக்கு வைக்கப்பட்ட தடைக்கல் ஆகும். 

எஸ்.ஆர். பொம்மை வழக்குப் போல், கர்நாடகத் தேர்தல் வழக்கிலும் ஜனநாயகத்தைக் காப்பாற்றியிருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம். 

இதேவேளை, முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா இராஜினாமாச் செய்திருக்கிறார். எதிர்வரும் புதன்கிழமை (23) கர்நாடகவின் புதிய முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .