2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்திய அரசியலில் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மான அரசியல்

எம். காசிநாதன்   / 2018 மார்ச் 26 , மு.ப. 12:23 - 1     - {{hitsCtrl.values.hits}}

“நம்பிக்கையில்லாத் தீர்மானம்” இப்போது இந்திய அரசியலில் மிகவும் பிரபல்யமாகிக்  கொண்டிருக்கிறது.  
 மத்தியில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறது. 50 எம்.பிக்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையில் 48 எம்.பிக்கள் மட்டும் உள்ள காங்கிரஸ் கட்சி,  நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, அரசாங்கத்துக்கு எதிராகக் கொடுத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்து, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள, வற்புறுத்தி வருகிறது.   

ஆனால், நாடாளுமன்ற சபாநாயகரோ, ‘அவை, அமைதியான சூழ்நிலை இருக்கும் போதுதான் எடுத்துக் கொள்ள முடியும்’ என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆகவேதான், மக்களவையில் முக்கிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தானே கொண்டு வந்திருக்கிறது.  
தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்பது நிச்சயம் என்றாலும், டெல்லி அளவில் பா.ஜ.கவுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சிதான் தலைமை தாங்க முடியும் என்பதைக் காட்டவும், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்து, எத்தனை கட்சிகள் காங்கிரஸுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்கவுமே, காங்கிரஸ் கட்சி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறது.   

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘பெடரல் பிரன்ட்’ என்ற ஒரு தளத்தில், மாநிலக் கட்சிகளை பா.ஜ.கவுக்கு எதிராக இணைக்க, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இன்றி, பா.ஜ.கவுக்கு எதிரான அரசியலை, வழி நடத்த முடியாது என்பதை, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் அறிவிக்கிறது.  

தேசிய அளவில் நடைபெறும், இந்த அரசியல் மாற்றங்கள், தமிழகத்திலும் சமீபத்தில் நடைபெற்ற, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிரொலித்தது. அதற்கு வாய்ப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டத்தில், தமிழகத்தில் நடைபெற்ற இரத யாத்திரை, மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளானது.   

‘அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை’ என்று தொடங்கிய இந்த ‘ராம் ராஜ்ய யாத்திரை’, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை என்றாலும், திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.   

குறிப்பாக, பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் நட்பாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில், திருநெல்வேலிக்குள் நுழைந்த உடனேயே, இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு ஏற்படுத்தப்பட்டது.   

செய்தியே இல்லாமல் தமிழ்நாட்டை விட்டுச் சென்றிருக்க வேண்டிய அந்த யாத்திரை, சட்டமன்றத்தில் ஸ்டாலினின் எதிர்ப்பாலும், அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியலாலும் அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்தியானது.   

இரத யாத்திரையை எதிர்க்க, திருநெல்வேலி மாவட்டத்துக்கே சென்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர், கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டார்கள். அதேபோல், ஸ்டாலினும் சென்னையில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.  

“தந்தை பெரியார் மண்ணில், இப்படியொரு மத அடிப்படையிலான யாத்திரயை எப்படி அனுமதிக்கலாம்” என்பது போராடிய தலைவர்களின் வாதமாக இருந்தாலும், பா.ஜ.கவுக்கு எதிரான மனோநிலையைத் தமிழ்நாட்டில், மேலும் கூட்டியாக வேண்டும் என்ற முயற்சியின் விளைவே, இந்த யாத்திரைக்கு எதிரான போராட்டமாகும்.    

யாத்திரையின் நோக்கம், ராம்ராஜ்யம் அமைப்பதும், ராமர் கோயில் கட்டுவதும் என்பதால், உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும் போது, எப்படி இரத யாத்திரைக்கு, தமிழக அரசு அனுமதி கொடுத்தது என்பது முக்கியமாக எழுப்பப்பட்ட கேள்வி.   

ஆனால், இது எல்லாம் ஒரு புறம் இருக்க, ‘ஆன்மீக அரசியல்’ என்று ரஜினி களத்தில் இறங்கியிருக்கின்ற நேரத்தில், இதுபோன்ற யாத்திரை, தமிழ்நாட்டுக்குள் வந்தால், ரஜினிக்கு ஆதரவாக களம் மாற்றப்படலாம் என்ற சந்தேகமே, இந்தப் போராட்டத்துக்குப் பின்னணி.   

ரஜினியின் பின்னால், பா.ஜ.க இருக்கிறது என்பதைப் பிரதானப்படுத்த, இந்த இரத யாத்திரைப் போராட்டம், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவியிருக்கிறது. 

அது மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து செயல்படுகிறது என்பதை, மக்கள் மன்றத்தில் கொண்டு போய்ச் சேர்த்து, அ.தி.மு.கவும்- பா.ஜ.கவும் ஒன்று என்ற ஒரு ‘இமேஜை’ கொடுக்கவே தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் முயன்றுள்ளன.   

ஆகவே, இரத யாத்திரைக்கு எதிரான போராட்டம் என்பது, பா.ஜ.க எதிர்ப்பு; ரஜினிக்கு பா.ஜ.க ஆதரவு ஆகிய இரண்டையும், தமிழ்நாட்டு மக்கள் மனதில் கொண்டுபோய் சேர்க்கவே நடத்தப்பட்டது.  

இதன் விளைவாகவே, இரத யாத்திரையில் அமைதிக்கு பங்கம் ஏற்படக் கூடாது; சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது என்ற தோரணையிலும், “என் பின்னால் கடவுள் இருக்கிறார்; பா.ஜ.க இல்லை” என்றும் ரஜினி பதிலளித்தார்.  

 இரத யாத்திரை அரசியல் தனக்கு எதிராகச் சென்று விடக்கூடாது என்பதில், ரஜினி காட்டிய வேகம், அவர் பின்னால் பா.ஜ.க இருப்பது போன்ற தோற்றம் உருவாவது, தமிழ்நாட்டு அரசியலில் வெற்றி பெறாது என்று நினைத்திருக்க வாய்ப்பு உண்டு.   

அதேபோல் முதலமைச்சர் பழனிசாமியும் “பா.ஜ.கவுடன் நாங்கள் கூட்டணியாக இல்லை; அவர்கள் மந்திரிசபையிலும் சேரவில்லை; அனைத்து மதங்களுக்கும் இந்த அரசு சமமாகவே இருக்கிறது” என்ற செய்தியை, சட்டமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.   

ஆகவே, தி.மு.க விரித்த வலையில், ரஜினியும் விழவில்லை. அ.தி.மு.கவும் விழவில்லை என்பதே உண்மை.   

இந்த இரத யாத்திரையுடன் சேர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ‘பட்ஜெட்’ கூட்டத்தொடரைச் சூடாக்கிய, இன்னும் சில விவகாரங்கள் உண்டு. அதில் ஒன்று, புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு. இன்னொன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மார்ச் 29 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டிய காவிரி அதிஉச்ச சபை.  

 பெரியார் சிலை உடைப்பில், 12 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்தாலும், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா, “பெரியார் சிலை உடைக்கப்படும்” என்று, அவரது டுவிட்டரில் பதிவிட்டவுடன் கைது செய்திருந்தால், இப்போது பெரியார் சிலை உடைக்கும் நிலை, ஏற்பட்டிராது என்று தி.மு.க சார்பில், அனல் பறக்க வாதிடப்பட்டது.   

காவிரி அதி உயர் சபை அமைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அ.தி.மு.க எம்.பிக்கள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்த, “அவர் ஆந்திர மாநிலப் பிரச்சினை பற்றி கொண்டுவருகிறார். நாம் எப்படி ஆதரிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர். 

ஆகவே மறுநாள், “மத்திய அரசாங்கத்துக்கு எதிராக நீங்களே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வாருங்கள்” என்று வழியை மாற்றியது தி.மு.க. ஆனாலும், “மார்ச் 29 ஆம் திகதி வரை பொறுத்திருங்கள். காவிரி அதி உச்ச சபை அமைக்கவில்லை என்றால், அப்போது கூடிப் பேசி முடிவு எடுப்போம்” என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். ஆனாலும், தமிழகத்தில் எதிரொலித்த நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரத்தை, டெல்லியில், காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.  

காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, ஆந்திர முதலமைச்சர் ஆதரித்தால் ஆந்திர தேசத்துக்கும் காங்கிரஸுக்கும் கூட்டு என்று பா.ஜ.க ஒரே வார்த்தையில் சொல்லி விடும்.   
அதேபோல், ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஒய். எஸ். ஆர். ஜெகன் ரெட்டி காங்கிரஸும் சோனியா காங்கிரஸின் தீர்மானத்தை ஆதரிக்க முடியாத சூழல். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, ராகுலுக்கு எதிராக உருவான கட்சி ஜெகன் காங்கிரஸ் கட்சி. ஆகவே, இந்த இரு கட்சிகளும், காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது.  

 அரசியல் ரீதியாக அகில இந்திய அளவில், பா.ஜ.கவுக்கு  எதிரான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஒரு புறமும், இன்னொரு புறம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக கூட்டணியை உருவாக்கும் முயற்சிலும் காங்கிரஸ் கட்சி, இரட்டை சவாரி செய்கிறது.  

 இந்தச் சவாரி காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்குமா? காங்கிரஸ் எதிர்ப்பில் உருவான மாநிலக் கட்சிகள் எல்லாம் முன்வருமா என்பதை வைத்தே, காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற முடியும்.   

நாடு தழுவிய கூட்டணிக்கு காங்கிரஸுடன் கை கோர்க்க தயங்கிக் கொண்டிருக்கும் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கை கோர்க்குமா? 


You May Also Like

  Comments - 1

  • சண்முகம் Saturday, 31 March 2018 12:29 AM

    மிகவும் அறிவுள்ள, அரசியலை ஆய்வு செய்தவரின் அறிவான கருத்துக்கள், அருமை, பாராட்டுக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .