2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியா - பாகிஸ்தான்: போரின் மொழி சொல்லும் கதைகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 மார்ச் 07 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரை விரும்புகிறவர்கள் போரில் பங்கேற்பதில்லை; போரில் மரிப்பதில்லை; அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. 

   போரின் மொழியை, அவர்களே உரைக்கிறார்கள்; ஊடகங்களில் கூவுகிறார்கள்; அவர்களே, போரை விற்கவும் செய்கிறார்கள்.

முன்பு, போர்களுக்காக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது, உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை விற்பதற்காகப் போர்கள் உருவாக்கப்படுகின்றன. போர், மிகப் பெரியதொரு வியாபாரம். அது, மரண ஓலங்களையோ, இழந்த அவயவங்களையோ, அநாதைகளையோ அறியாது. அதையே தொடர்ந்தும் சிலர் உரைக்கிறார்கள்; தேசபக்தியின் பெயரால், தேசியத்தின் பெயரால் அதைத் தொடர்ந்தும் உச்சரிக்கிறார்கள். அயோக்கியர்களின் கடைசிக் புகலிடம் தேசபக்தியே ஆகும். 

கடந்த ஒரு வாரமாக, தென்னாசியாவைச் சூழ்ந்த போர்மேகம், மெதுமெதுவாகக் கலைகிறது. அன்றாடம் காய்ச்சிகளின், அப்பாவிகளின் மனதில் நிம்மதி திரும்புகிறது. 

போர், வெறுமனே உயிரிழப்புகளையும் உடைமை இழப்புகளையும் மட்டும் கொண்டதல்ல என்று, அன்றாடம் காய்ச்சிகளும் அப்பாவிகளும் அறிவார்கள். 

காஷ்மீரின் புல்வமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எல்லை தாண்டிச் சென்று, பாகிஸ்தான் நிலப்பரப்பின் மீது மேற்கொண்ட வான் தாக்குதலும் (இந்திய அரசாங்கத்தின் மொழியில் ‘சேர்ஜிக்கல் ஸ்டைக் 2.0’) அதற்குப் பாகிஸ்தானின் எதிர்வினையும்  இந்திய விமானப்படை வீரரை, பாகிஸ்தான் சிறைப்பிடித்தமையும் என, வரிசையாகச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், புல்வமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ஊடகங்களும் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளும் முன்னாள் இராணுவத் தளபதிகளும் இன்னபிறரும் இன்றுவரை, போரில் மொழியையே உரைக்கிறார்கள்; ஊடகவெளியைப் போரின் மொழியால் நிறைக்கிறார்கள். 
இதன் பின்னணியில் சில விடயங்களைப் பேச வேண்டியுள்ளது. 

அரசியலுக்காக வீசிய குண்டுகள் 

பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி அதிகாலையில், இந்திய விமானங்கள், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் என்ற இடத்தில் குண்டுகளை வீசின. இதில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ‘ஜெய்ஸ் இ முஹமது’ இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, இந்தியா எங்கும் உற்சாகம் களைகட்டியது. சினிமாப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என எல்லோரும், இந்திய தேசபக்தியில் மிதந்தனர். 

இந்தியாவின் இச்செயல், தீவிரவாதிகளை ஊட்டி வளர்க்கும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட, சரியான பதிலடி என மெச்சப்பட்டது. மறுபுறம், இந்நடவடிக்கை, பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான முடிவு என்றும் இந்தியா பதிலடி கொடுத்ததன் மூலம், உலகுக்குத் தான் யார் என்று காட்டியுள்ளது என்றெல்லாம் நாடே குதூகலப்பட்டது. ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியினர், இச்செயலுக்கான பாராட்டைத் தமக்கு உரியதாக்கினர். இது, மோடியால் சாத்தியமானது என்ற வகையிலான பிரசாரங்கள் தீவிரகதியில் நடந்தன.  

இதற்கிடையில், அரசாங்கத் தரப்பில் இருந்து, “300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்” என்பதாகச் செய்திகள் கசியவிடப்பட்டன. இது, உற்சாகத்தையும் தேசபக்தியையும் அதிகரிக்கவும் போர்ப்பறை முழங்கவும் பயன்பட்டது. ஆனால், இது குறித்துக் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான், “குண்டுவீச்சில் யாரும் கொல்லப்படவில்லை” என அறிவித்தது. இதை இந்திய ஊடகங்கள், “பாகிஸ்தான் உண்மையை மறைக்கிறது” என்று வாதிட்டன. 

பாகிஸ்தான் அரசாங்கம், சர்வதேச ஊடகவியலாளர்களைச் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றது. பாலகோட்டின் ஜபா கிராமத்தில் என்ன நடந்தது என்பதை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், முழுமையான செய்திச் சேகரிப்பின் பின்னர் அறிக்கையிட்டது. 

ரொய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, விமானத் தாக்குதலின் காரணமாக, அப்பகுதியில் இருந்த சில ‘பைன்’ மரங்கள் முறிந்துள்ளன. காகமொன்று இறந்துள்ளது. அது தவிர, 62 வயதான நூரான் ஷா என்ற முதியவர், காயமடைந்திருக்கிறார். இதுதவிர, வேறெந்தச் சேதமும் ஏற்படவில்லை. 

தாக்குதல் நடத்தப்பட்ட ஜபா கிராமத்தில், ‘ஜெய்ஸ் இ முஹமது’ அமைப்பின் பள்ளிக்கூடம் (மதராஸா) ஒன்றுமட்டுமே உள்ளது. அது, குண்டுகள் விழுந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. ஜபா கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஜெய்ஸ் இ முஹமது’ அமைப்பின் பயிற்சி முகாம்கள் இருந்தன. ஆனால், அவை இப்போது அங்கில்லை. 

ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியை, இதுவரை யாரும் மறுக்கவில்லை. மாறாக, செய்மதிப் புகைப்படங்களின் மூலம், அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், முப்படைத் தளபதிகள், ஊடகங்களைச் சந்தித்தபோது, சேத விவரம் குறித்துக் கருத்துக் கேட்டபோது, விமானப் படைத்தளபதி, “சேதவிவரம் குறித்து, எதுவுமே தெரியாது” என்று சொல்லி விட்டார். 

தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், செல்வாக்குக்காக இந்திய அரசாங்கம் செய்த செயல், வெறும் நாடகம் என்பதும், எதுவித பயனையும் அளிக்கவில்லை என்பதும், இப்போது அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தான் எதிர்வினை: தடுமாறிய இந்தியா

இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாள், பாகிஸ்தான் விமானங்கள், இந்திய எல்லைக்குள் குண்டுகளை வீசின. இதன் சேத விவரத்தை, இருதரப்புகளும் இன்றுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், “இந்திய இராணுவ அமைப்புகள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டன” என, இந்தியா குற்றஞ்சாட்டியது. 

பாகிஸ்தானோ “எமது பலத்தைக் காட்டுவதற்காக, இந்திய நிலப்பரப்புக்குள், பாகிஸ்தான் விமானங்கள் நுழைந்தன; இராணுவ அமைப்புகள் மீது, குறிவைக்கப்பட்டாலும் உயிரிழப்புகளையும் பொருட்சேதத்தையும் தவிர்க்கும் பொருட்டு, குறியீடாகச் சில குண்டுகள், யாருமற்ற அண்டைய பகுதிகளில் வீசப்பட்டன” என்றது. 

பாகிஸ்தான் பிரதமர், “நாங்கள் இதன்மூலம், செய்தியொன்றைச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் போரை விரும்பவில்லை; பேச்சுவார்த்தைகளை விரும்புகிறோம். நாம் அமைதி வழியை விரும்புவது, இயலாமையால் அல்ல” என்றார். 

இவை நிகழ்ந்து, சில மணித்துளிகளில், பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைந்த, இந்திய விமானங்கள் இரண்டு, சுட்டுவீழ்த்தப் பட்டதாகவும் இரண்டு விமானிகளைச் சிறைப்பிடித்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. 

அதில், ஒரு விமானம் இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் மற்றையது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும்  வீழ்ந்ததாகவும் தெரிவித்தது. 

இதை உடனடியாக மறுத்த இந்தியா, தமது வான்பரப்பில் புகுந்த, பாகிஸ்தான் விமானமொன்றைச் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அறிவித்தது. 

அதேவேளை, எந்தவோர் இந்திய விமானப்படை வீரரும் காணாமல் போகவில்லை என்றும் அறிவித்தது. 

இதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை வீரர் ஒருவர், பாகிஸ்தான் கிராமவாசிகளால் தாக்கப்படுவதும் பின்னர், அவரைப் பாகிஸ்தான் இராணுவத்தினர் மீட்டு, அழைத்துச் செல்லும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகின. பாகிஸ்தான், தன்வசம் இந்திய விமானப்படைவீரர் ஒருவர், கைதியாக இருப்பதாகவும் அவரது பெயர் அபிநந்தன் என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்தே, இந்திய அரசாங்கம், தமது விமானப்படைவீரர் ஒருவர் குறித்த தகவல்கள், தமக்குத் தெரியவில்லை என்று பூசிமெழுகியது. நீண்ட கால இடைவெளியின் பின்னர் அபிநந்தன், பாகிஸ்தானின் பிடியில் இருப்பதை, வேறுவழியின்றி ஒத்துக்கொண்டது. 

ஆனால், அதுகுறித்துக் கருத்தெதையும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதாகச் சொல்லி, அதைப் பெரும் வெற்றிச் செய்தியாக்கியது. மறுநாள், விழுந்த விமானத்தின் பாகங்களைக் காட்சிப்படுத்தி, அது இந்தியாவால் சுட்டுவீழ்த்தப்பட்ட F-16 ரக விமானம் என்று சொல்லியது. 

மறுநாள், புகழ்பெற்ற புலனாய்வு ஊடக இணையத்தளமான Bellingcat இந்தியா காட்சிப்படுத்திய பாகங்கள், இந்தியா பயன்படுத்தும் MiG 21 ரக விமானத்தின் பாகங்களே என்பதைச் சான்றுகளோடு வெளியிட்டது. இதுவும், மீண்டுமொருமுறை இந்திய அரசாங்கம், தனது மக்களுக்கும் உலகுக்கும் பொய்யுரைத்துள்ளது என்பதை எடுத்துக் காட்டியது. 

ஜெனீவா பட்டயம்: உரிமைகளுக்கான குரல் 

அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர், போர்க்கைதி என்றபடியால், அவர் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியாவெங்கும் சொல்லப்பட்டது. இக்காலப்பகுதியில் இந்தியத் தொலைக்காட்சிகளில், குறிப்பாக, இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில், நடந்த விவாதங்கள், நகைப்புக்குரியன. 

பலர், அவர் போர்க்கைதி என்பதால், உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்றும், வேறு சிலர், ஜெனீவாப் பட்டயத்தின்படி, அவர் ஏழு நாள்களுக்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் சொன்னார்கள். 

போர்க்கைதிகளின் உரிமைகள் பற்றிச் சொல்லும் ஜெனீவாப் பட்டயம், முதன்முதலாக 1929ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரின் முடிவில், மூன்றாவது ஜெனீவாப் பட்டயம் என, 1949ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டது. 

அதற்கான மேலதிக நெறிமுறைகள், 1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, சர்வதேசப் போரின் போது, எதிரிப்படைவீரர் கைதுசெய்யப்பட்டால், அவரை நடத்துவதற்கான முறைகளை, இந்தப்பட்டயம் சொல்கிறது. 

அபிநந்தன் விடயத்தில், அவரைப் போர்க்கைதியாகக் கொள்ளமுடியாது என்ற சட்டரீதியான வாதம் முன்வைக்கப்பட்டது. ஏனெனில், அவர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போரின் போது கைதுசெய்யப்படவில்லை. மாறாக, ‘வலிந்த ஆக்கிரமிப்பின்’ போதே கைதாகியுள்ளார். 

அதேவேளை, அவரைப் போர்க்கைதியாகக் கருதினால், இரண்டு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்துக்கு உடன்பட்ட நிலையிலேயே, போர்க்கைதிகளை மீளக் கையளிக்க வேண்டும். இந்நிலையில், அபிநந்தனை நல்லெண்ண நடவடிக்கையாகத் திருப்பி அனுப்புவதாக, பாகிஸ்தான் பிரதமர் அறிவித்து, மூன்றாம் நாள் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தன் மீண்டது முதல், மீண்டும் போரின் மொழியிலேயே இந்திய அரசாங்கமும் அதன் அடிப்பொடிகளும் ஊடகங்களும் பேசுகின்றன.

இந்திய அரசாங்கம் விரும்புகிற போரை, இப்போது தவிர்த்திருப்பவர் பாகிஸ்தான் பிரதமரே. இராணுவத்தின் பிடி இறுக்கமான உள்ள ஒரு தேசத்தில், சமாதானத்தின் மொழியை இம்ரான் கான் உரைத்திருப்பது பாராட்டத்தக்கது. 

பாகிஸ்தானின் அரச கட்டமைப்பிலும் நிர்வாகத்திலும் ஆண்டாண்டு காலமாய் புரையோடிப்போன இராணுவச் செல்வாக்கு மிகுந்துள்ள நிலையில், நிதானமான செயற்பாடு மூலம், உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார் இம்ரான் கான்.

போர் வெறியர்கள் பாகிஸ்தானிலும் உள்ளார்கள். பாகிஸ்தான் இராணுவமும் இதற்கு விலக்கல்ல. தனது இந்தச் செயலுக்காக, ஒருவேளை மிகப்பெரிய தண்டனையை இம்ரான் கான் அனுபவிக்கக்கூடும். ஏனெனில் போரின் மொழி அவ்வளவு வலியது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .